மாதவன் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருவதோடு, இயக்கத்திலும் கவனம் செலுத்தினார். தற்போது ‘அதிர்ஷ்டசாலி’ என்ற படத்தில் நடித்துள்ளார். யாரடி நீ மோகினி, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கியிருக்கும் இந்த படம் உணர்வுபூர்வமான கதையம்சத்துடன் ஃபேண்டசி டிராமாவாக உருவாகியுள்ளது.
படத்தில் மடோனா செபஸ்டியன், ராதிகா சரத்குமார், சாய் தன்ஷிகா, ஜெகன், நிரூப் என்.கே., உபசனா ஆர்.சி, மாத்யூ வர்கீஸ், உதய் மகேஷ், கே.எஸ்.ஜி. வெங்கடேஷ், ரவி பிரகாஷ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதுவரை ஏற்காத கதாபாத்திரத்தில் ராதிகா சரத்குமார் நடித்துள்ளார்.
படப்பிடிப்பு ஸ்காட்லாந்தின் புகழ்பெற்ற பகுதிகளில், ஃபோர்த் ப்ரிட்ஜ், எடின்பர்க், டீன் வில்லேஜ் மற்றும் விக்டோரியா ஸ்டிரீட் என உலக புகழ்பெற்ற ஹாரி பாட்டர் படங்கள் படமாக்கப்பட்ட லொகேஷன்களில் நடைபெற்றது. அதையடுத்து இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளத்தில் பலருடைய கவனத்தை ஈர்த்து வைரலாகியுள்ளது.
முன்னணி நடிகர், நடிகைகளின் அசாத்திய நடிப்பு, சிறப்பான தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் பிரமாண்ட காட்சி அமைப்புகளால் ரசிகர்களுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு தலைசிறந்த அனுபவத்தை கொடுக்கும் என்று படக்குழு உறுதியளிக்கிறது.
யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, கார்த்திக் முத்துகுமார் ஒளிப்பதிவு செய்ய, எம். தியாகராஜன் படத்தொகுப்பு செய்கிறார்.
ஏ.ஏ. மீடியா கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பாக சர்மிளா, ரேகா விக்கி & மனோஜ் முல்கி ஆகியோர் பிரமாண்டமாக தயாரித்துள்ளார்கள்.