ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் எளிய மனிதர்களின் யதார்த்த வாழ்வியலை, அவர்களின் வலியை அழுத்தமாக பதிவு செய்திருந்த படம் படம் ‘ஆதார்.’
கருணாஸ், அருண் பாண்டியன், இனியா, ரித்விகா, ‘பாகுபலி’ பிரபாகர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து சமீபத்தில் வெளியான இந்த படம் விமர்சன ரீதியாக நல்லதொரு வரவேற்பை பெற்றது.
அதையடுத்து சென்னையில் கடந்த டிசம்பர் 15-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெற்ற இருபதாவது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில், தமிழ் படங்களுக்கான போட்டி பிரிவில் ‘ஆதார்’ உள்ளிட்ட 12 திரைப்படங்கள் திரையிடத் தேர்வு பெற்றன. இதில் ‘ஆதார்’ திரைப்படத்தை நடுவர்களும், பார்வையாளர்களும் கண்டு பாராட்டினர்.
இதனைத் தொடர்ந்து சிறந்த தமிழ் படத் தயாரிப்பிற்கான விருதிற்கு, ‘ஆதார்’ படத்தினைத் தயாரித்த தயாரிப்பாளர் பி. சசிகுமார் தேர்வு செய்யப்பட்டார். இதற்கான சான்றிதழ், சென்னை சர்வதேச திரைப்பட விழா விருது வழங்கும் நிகழ்வில் அவருக்கு வழங்கப்பட்டு, கௌரவிக்கப்பட்டார்.
இதன் மூலம் ‘ஆதார்’ திரைப்படம், சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு விருது பெறுவது நீடிக்கிறது. இதனால் படக்குழுவினர் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.