இந்து மதத்தைச் சேர்ந்தவர்களில் ஆன்மிக நம்பிக்கை கொண்டவர்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது கிரக தோஷத்திற்கான பரிகாரம் செய்யும் நிலைக்கு தள்ளப்படுவதுண்டு. அந்த வகையில் ராகு கேது பரிகாரத்திற்காக காளகஸ்தி சிவன் கோயிலுக்கு சென்று வருகிறவர்களின் எண்ணிக்கை மிகமிக அதிகம்.
அத்தனை பேருக்கும் ராகு, கேதுவை வழிபட்டு பரிகார பூஜை செய்வதால் கிடைக்கக்கூடிய பலன்கள் பற்றி தெரியும். அதே நேரம் அத்தனைப் பேருக்கும் அந்த ராகுவும் கேதுவும் உருவானதன் பின்னணி பற்றி தெரிந்திருக்குமா என்றால் சிலருக்கு தெரிந்திருக்கலாம்; பலருக்கு தெரியாதிருக்கலாம்.
அப்படி தெரியாதவர்களுக்கு ராகுவும் கேதுவும் உருவான காரணம், நவ கிரகங்களில் அவர்கள் இடம்பிடித்தது எப்படி, அவர்களின் கருணையால் என்னென்ன நற்பலன்கள் என்பதையெல்லாம் தெளிவுபடுத்தும் விதத்தில் உருவாகியுள்ளது இந்த படம்.
அசுரர்களும் தேவர்களும் பாற்கடலைக் கடைந்த கதையை புராணங்களில் படித்திருக்கிறோம்; நாடகங்களில், திரைப்படங்களில், தொலைக்காட்சித் தொடர்களில் பார்த்திருக்கிறோம். அப்படி கடைந்ததில் கிடைத்த அமிர்தத்தை யார் முதலில் அருந்துவது என்பதில் அசுரர்களுக்குள்ளேயே கலவரம் மூண்டது.
அந்த நிலையில் அசுரர்களில் ஒருவனான சுவர்பானு குறுக்கு வழியில் சென்று பருகிவிட, அவனது தலை மோகினியாக உருமாறிய மகாவிஷ்ணுவால் வெட்டப்படுகிறது.
தலை வெட்டப்பட்டாலும் அமிர்தம் பருகிய காரணத்தால் தலையும், உடலும் உயிருடன் இருக்கிறது. சுவர்பானு தனது பக்தன் என்பதால் அவன் மீது கருணை காட்டும் துர்காதேவி, தனது தோளில் சுமந்திருக்கும் நாகப்பாம்பின் தலையை சுவர்பானுவின் உடலுக்கும், தலைக்கு பாம்பின் உடம்பையும் பொருத்துகிறார். நாகத்தின் தலை சுமந்தவருக்கு கேது என்றும், நாகத்தின் உடலை சுமந்தவருக்கு ராகு என்றும் பெயரிடப்படுகிறது. அவர்களை சிவபெருமான் கிரகங்களில் இணைத்து அருளாசி வழங்குகிறார்.
இப்படியாக ஓடி முடிகிறது இந்த படத்தின் கதை…
சுரதா என்ற அரசர், தான் அரசாளும் நாட்டைவிட்டு தலைமறைவாக வேண்டிய நிலைமை, அவரது மகன் ஜோதிடர் ஒருவரது அரவணைப்பில் வளர்கிற சூழ்நிலை, அந்த மகனுக்கு 10 வயது தாண்டிய பருவத்தில் காலசர்ப்ப தோஷம் பிடிப்பது, அதிலிருந்து அவன் மீள்வது என கிளைக்கதையொன்றும் படத்திலுண்டு.
கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் கே பி அறிவானந்தம். இயக்கம் டி பாலசுந்தரம்
சுவர்பானுவாக வருகிற பாலசுந்தரத்தின் நடிப்பு பரவாயில்லை ரகமென்றாலும், நீளமாக எழுதப்பட்டிருக்கிற கதைக்கு முக்கியமான வசனங்களை ஏற்ற இறக்கங்களுடன் பேசுவது கவனம் ஈர்க்கிறது.
சில நிமிடங்களே வந்தாலும் தேஜஸான முகப்பொலிவாலும் கூர்மையான பார்வையாலும் சிவபெருமானுக்கான கம்பீரத்தை திரையில் நிரப்பியிருக்கிறார் சமுத்திரகனி.
துர்காதேவியாக வந்து ராகு, கேதுவை உருவாக்கும் கடமையை செய்கிறார் கச்சிதமாக செய்கிறார் கஸ்தூரி. மகாவிஷ்ணுவாக தலை காட்டுகிறார் விக்னேஷ்.
சுபர்பானுவின் காதலி ரோகிணியாக வருகிற சந்தியாஸ்ரீ இளமையாக இருக்கிறார்; தன் காதலன் பாம்பின் தலையோடும் உடலோடும் இருப்பதைப் பார்த்து மிரள்கிறார். உணர்வுகளை வெளிப்படுத்துவதில் பார்டரில் பாஸாகிறார்.
நாரதர், சூரியன், சந்திரன், இந்திரன் என மற்ற கடவுளர்களாக வருகிறவர்கள் வயதில் முதிர்ந்தவர்களாக இருக்கிறார்கள். வசனம் பேசி சிலைபோல் நின்று நகர்வது தவிர அவர்களின் நடிப்பில் சொல்லிக்கொள்ளும்படி ஏதுமில்லை.
சண்டா, முண்டா என்ற பெயரில் வருகிறவர்கள் கொஞ்சமே கொஞ்சம் சிரித்து ரசிக்க உதவுகிறார்கள். குழந்தை நட்சத்திரங்கள் மனதில் நிறைகிறார்கள்.
சதா சுதர்சனம் இசையில் ‘நீரோடை நதியாகி பாய்கிறதே’, ‘அழகிய மோகினி’ பாடல்கள் தருகிற இதத்தில் லேசாக இளையராஜாவின் சாயல் தெரிகிறது. பரணிதரனின் பின்னணி இசை எந்தவொரு தாக்கத்தையும் தரவில்லை. இருவருமே இளையராஜாவிடம் உதவியாளராக இருந்தவர்களாம்.
ஒளிப்பதிவு பட்ஜெட்டில் அடங்கியிருக்கிறது.
துர்காதேவியின் பாம்பாகட்டும், நாரதர் கையில் வைத்திருக்கும் வாத்தியமாகட்டும் அத்தனையும் பள்ளிக்கூடம் செல்லும் சிறுபிள்ளைகள் அட்டைகளில் செய்கிற புராஜக்ட் பொருட்கள் ரேஞ்சுக்கு இருப்பது, கிராபிக்ஸ் தொழில்நுட்பப் பங்களிப்பு குட்டிக் குழந்தைகள் வரையும் ஓவியங்கள் போலிருப்பது, கதாபாத்திரங்களை ஏற்றிருக்கிற பலரும் முதியோர்களாக இருப்பது என பட்டியலிட்டுச் சொல்ல உருவாக்கத்தில் பல குறைகள் அணிவகுக்கின்றன.
அதையெல்லாம் பொருட்படுத்தாவிட்டால், இந்த மதத்தின் நம்பிக்கைகளில் ஒன்றான ராகு கேது வழிபாட்டை மையமாக கொண்டு எளிமையான பக்திப் பரவச படைப்பை தந்திருக்கும் படக்குழுவை பாராட்டி ஊக்குவிக்கலாம்.
