நல்லவன் ஒருவன் சந்தர்ப்பச் சூழ்நிலையால் கொலைக் குற்றவாளியாகிறான். அதை அவனுடன் தொடர்பிலிருக்கிற அரசியல்வாதியொருவர் பயன்படுத்திக் கொள்கிறார். அதிலிருந்து அவனால் மீண்டு வர முடிந்ததா, இல்லையா என்பது பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கியிருக்கும் ‘அக்யூஸ்ட்’டின் கிளைமாக்ஸ்…
எதிர்பாராத சூழ்நிலையில் தன்னையறியாமலே ஒரு கொலையைச் செய்துவிடுவது, அதிலிருந்து தப்பிக்க இன்னொரு கொலையைச் செய்த குற்றத்தில் சிக்குவது, சிறையிலிருந்து கோர்ட்டுக்கு போகும் வழியில் தன்னைக் கொல்ல நடக்கும் சதிச் செயல்களைக் கண்டு மிரள்வது, காதலில் உருகுவது என நடிப்புப் பங்களிப்பில் எல்லா உணர்வுகளையும் கொஞ்சம் கூடுதலாக தந்திருக்கிறார் கதை நாயகன் உதயா.
கொலைக் குற்றவாளி உதயாவை கொல்வதற்காக ஸ்கெட்ச் போடுபவர்களிடமிருந்து காப்பாற்றி கோர்ட்டில் ஆஜர் படுத்தும் பொறுப்பை சரியாகச் செய்திருக்கிறார் காவல்துறை அதிகாரியாக வருகிற அஜ்மல். அவருக்கென வழங்கப்பட்டிருக்கும் ஆக்சன் காட்சிகளிலும் ஸ்கோர் செய்கிறார்.
உதயாவுக்கு ஜோடியாக வருகிறவர் அழகாக இருக்கிறார்; அந்த அழகு பாடல் காட்சியொன்றில் போடும் குத்தாட்டத்தில் கூடுதலாக தெரிகிறது. இடைவேளை வரை ஹீரோவை காதலிக்கும் வழக்கமான ஹீரோயினாக வருபவர், நிறைவுக் காட்சியில் உணர்ச்சிபூர்வமான நடிப்பால் கவனம் பெறுகிறார்.
யோகிபாபு சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் தனது ஸ்டைலில் கலகலப்பூட்ட தவறவில்லை.
நாயகன் உதயாவின் அக்காவாக தீபா பாஸ்கர், ஹீரோயினுக்கு கணவராக வருகிற தயா என மற்றவர்கள் கதையின் தேவைக்கேற்ப நடித்திருக்க, அந்த மீசைக்கார போலீஸ் அதிகாரியின் பெர்மாமென்ஸ் கொஞ்சம் அதிகமாக இருக்கிறது. அவர்தான் படத்தின் இயக்குநராம்.
பிரியாணி செய்முறையை விளக்கி எழுதப்பட்ட வரிகள் பாடலாகிவிட அதற்கு ரசிக்கும்படி இசையமைத்து, பின்னணி இசையை கதைக்களத்துக்கு பொருத்தமாக வழங்கியிருக்கிறார் நரேன் பாலகுமார்.
மருதநாயகத்தின் ஒளிப்பதிவு நேர்த்தி.
நல்லவன் ஒருவன் குற்றவாளியாவது, போலீஸ் துறையில் இருக்கும் நல்லவன் ஒருவன் அவனை காப்பாற்றப் பாடுபடுவது என கதை அழுத்தமாக இருந்தாலும் திரைக்கதையிலிருக்கும் சிலபல குறைகளால் படத்திற்கு பாஸ்மார்க்’கை தாண்டி மதிப்பெண் கொடுக்க முடியாமல் போகிறது!
