‘தமிழகத்தின் பழங்குடியின மக்களில் 10% பேரைக்கூட இன்னும் முழுமையான கல்வி சென்று சேரவில்லை’ என்கிறது என் ஜி ஓ’வாக செயல்படுகிற தன்ராஜ் என்பவரின் கல்வி சார்ந்த கள ஆய்வு முடிவு.
அந்த மக்கள் கல்வி கற்க எது தடையாக இருக்கிறது, யார் தடையாக இருக்கிறார்கள் என்பதை உண்மைச் சம்பவ பின்னணியிலிருந்து அலசுகிறார் இயக்குநர் கணேஷ் விநாயகன்.
ஒரு சிறுமி படிப்பதற்காக எடுத்துக் கொள்ளும் முயற்சிகள், சந்திக்கிற கஷ்ட நஷ்டங்கள், சவால்கள், படிப்பில் நினைத்த இலக்கை எட்டுதல் என விரிகிறது அருள்வானின் கதை, திரைக்கதை, வசனம்…
தான் ஹீரோ அல்ல; கதைதான் ஹீரோ என்பதைத் தெரிந்து கொண்டு களமிறங்கியிருக்கிறார் அருள்நிதி. தேனி மாவட்ட ஆட்சியராக வருகிற அவர், படிக்க ஆசைப்பட்டும் அதற்கான வசதி வாய்ப்புகள் இல்லாமல் தவிக்கும் சிறுமிக்கு உதவி செய்வதும், உந்து சக்தியாக இருப்பதுமாக அலட்டலில்லாத நடிப்பைத் தந்திருக்கிறார். ‘கல்வி தொழில் அல்ல; சேவை’ என்பதை அழுத்தந்திருத்தமாக பதிவு செய்கிறார்.
மலையிலிருந்து இறங்கினால் எல்லாவித வசதி வாய்ப்புகள் கிடைக்கும் என்ற நிலையிலும் இறங்கி வரத் தயாராக இல்லாத மனநிலையை பிரதிபலிக்கிற மலை வாழ் மக்களின் வாழ்வியல் உதாரணமாக வலம் வருகிறார் ஆரவ்.
படிப்புக்காக போராடும் சிறுமியாக கிருத்திகா. கேரக்டருக்கு தோற்றத்தால் பொருந்தி, கதையின் கனம் உணர்ந்து பாராட்டும்படியாக நடித்திருக்கிறார்.
ஆரம்ப பேராவில் குறிப்பிட்ட ஆய்வாளர் தன்ராஜின் பிம்பமாக வந்து வழக்கம்போல் தரமாக நடித்திருக்கிறார் காளி வெங்கட்.
ரம்யா பாண்டியன், விடிவி கணேஷ், ஜான் விஜய், வினோதினி என முக்கிய பாத்திரங்களை ஏற்றிருக்கும் இன்னபிறரின் பங்களிப்பு நிறைவு. மற்ற கேரக்டர்களில் வடிவேல் முருகன், கம்பம் மீனா என பலரையும் பார்க்க முடிகிறது.
ஆசியளவில் முதன்மை மொழியாக இருக்கிற, தமிழக பழங்குடி மக்களில் பலரும் பேசுகிற காடர் மொழியை ஆங்காங்கே பரவலாகப் பயன்படுத்தியிருக்கும் விதம் கவனம் ஈர்க்கிறது.
ஜி.வி. பிரகாஷ் இசையில், யுகபாரதியின் வரிகளில் ‘அல்லிப்பூவே’ பாடல் காதல் உணர்வை சிதறவிட, பழங்குடியின மக்களின் வாழ்வியலை பதிவு செய்யும் விதமாக அமைந்த ‘வேல் செவ்வேல்’ பாடல் சிலிர்ப்பூட்டுகிறது. பின்னணி இசை கதையின் நகர்விலிருக்கும் போராட்ட உணர்வுகளையும் வலிகளையும் உள்வாங்கிப் பிரதிபலித்திருக்கிறது.
உண்மையான மலைக் கிராமங்கள், பழங்குடியின மக்களின் குடியிருப்புகளில் புகுந்து புறப்பட்டு, காடுகளின் அடர்த்தி, செங்குத்தான மலைப்பாதைகளை, கடினமான நிலப்பரப்புகளை அதனதன் தன்மையுடன் வளைத்துச் சுருட்டி,
படத்தின் மையப் புள்ளியான சிறுமி ‘குறிஞ்சி’ எதிர்கொள்ளும் கல்விக்கான வலியையும், மக்களின் வாழ்வாதாரப் போராட்டத்தையும் விவரிக்கும் நெருக்கமான காட்சிகளுக்கு உயிரூட்டியிருக்கிறது ஒளிப்பதிவாளர் சுகுமாரின் கேமரா.
‘கல்வி ஒன்றே ஒடுக்கப்பட்ட மக்களின் ஒரே ஆயுதம்’ என்பதை அடித்துச் சொல்லியிருப்பதால் அருள்வான் கொண்டாடப்படுவான்!
-சு.கணேஷ்குமார்

