மனிதாபிமானத்தை மையப்படுத்திய கதையாக்கம்; சற்றே புதிய கோணத்தில் உருவாக்கம் பிளட் மணி.
குவைத்தில் பணிபுரியும் தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவர், சந்தர்ப்பச் சூழலால் கொலைப்பழிக்கு ஆளாகிறார்கள். தாங்கள் குற்றவாளிகள் இல்லை என்றாலும், கொலை செய்யப்பட்ட பெண்மணியின் குடும்பத்துக்கு இழப்பீட்டுத் தொகையாக (பிளட் மணி) 30 லட்ச ரூபாய் கொடுக்கிறார்கள். அப்படி கொடுத்தால் தண்டனை குறையுமென்பது குவைத் அரசாங்க விதி. அதையும் மீறி அந்த இருவருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது.
இந்த விஷயம் தனியார் தொலைக்காட்சியொன்றில் பணிபுரியும் பிரியா பவானி சங்கருக்கு தெரியவருகிறது. அவர் பலம்வாய்ந்த தனது ஊடகத்தின் துணையோடு, வெறும் 27 1/2 மணி நேரம் மட்டுமே அவகாசமிருக்க அந்த இருவரின் உயிரைக் காப்பாற்றக் களமிறங்குகிறார். தன்னுடன் பணிபுரிபவர்களால் அவமானங்களையும் தனது முயற்சிகளால் கடுமையான மன உளைச்சல்களையும் சந்திக்கிறார்.
அதையெல்லாம் கடந்து, அவரது மனிதாபிமானப் போராட்டத்துக்கு கிடைத்த பலன் என்ன? அந்த இருவர் குற்றவாளியாக்கப் பட்டது எப்படி? பிளட் மணி கொடுத்தும் மரண தண்டனை விதிக்கப்பட்டது ஏன்? கேள்விகளுக்கு திரைக்கதையில் விளக்கமும், காட்சிகளில் விறுவிறுப்பும் இருக்கிறது.
திரைக்கதை, வசனம் சங்கர் தாஸ். இயக்கம் சர்ஜுன். (‘மா’, ‘லெஷ்மி’ என்ற குறும்படங்களையும், நயன்தாரா நடித்த ‘ஐரா’ உள்ளிட்ட திரைப்படங்களையும் இயக்கியவர் இவர்.)
படத்தின் நாயகி பிரியா பவானிசங்கர், செய்தி வாசிப்பாளராக இருந்து நடிகையானவர். அவர் ஊடகவியலாளர் (Media personality) வேடத்தில் பொருந்திப் போய், இயல்பாய் நடித்திருப்பதில் ஆச்சரியமில்லை.
குற்றவாளிகளில் ஒருவராக கிஷோர். அவரது அலட்டலற்ற நடிப்பும் உடல்மொழியும் ஈர்க்கிறது.
‘மெட்ரோ’ சிரிஷ், சுப்பு பஞ்சு, இன்பராஜ், ஸ்ரீலேகா ராஜேந்திரன், என இன்னபிற நடிகர், நடிகைகளின் பங்களிப்பு கச்சிதம். கலெக்டருக்கு பி.ஏ.வாக வரும் பத்திரிகையாளர் சு. செந்தில்குமரன் தனித்துத் தெரிகிறார்.
ஊடகங்களின் பணிச்சூழல், உள் அரசியல், உயர் பொறுப்பு வகிப்பவர்களது அதிகாரத்தின் நீள அகலம், , பணியாளர்களுக்கிடையே நிலவும் போட்டி, பொறாமை, காழ்ப்புணர்ச்சி என கலந்துகட்டிய காட்சிகள் பெரிதாய் அதிர்வுகள் தராமல் கடந்துபோனாலும் ஊடகம் எத்தனை சக்தி வாய்ந்தது என காட்டியிருப்பது நிறைவு.
சதீஷ் ரகுநந்தனின் பின்னனி இசை காட்சிகளுக்கு பரபரப்பு கூட்டுகிறது. ஜி. பாலமுருகனின் ஒளிப்பதிவு நேர்த்தி. கலை இயக்குநருக்கு ஸ்பெஷல் பாராட்டு.
‘இதெல்லாம் சாத்தியமா?’ என யோசிக்க வைக்கும் காட்சிகள் ஏராளம். அவற்றையெல்லாம் பொருட்படுத்தாவிட்டால் பிளட் மணி மனதுக்கு நெருக்கம்!
90 நிமிடங்கள் மட்டுமே ஓடும் இந்த படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வரும் டிசம்பர் 24-ம் தேதி வெளியாகிறது.