டேனியல் பாலாஜியின் மறைவுக்குப் பிறகு, அவர் நடிப்பில் ஒரு படம் பார்க்கிற வாய்ப்பு.
ஒரு விபத்து நடக்க, அதில் ரவுடியிஸத்தில் ஊறிப்போன அர்னால்டு என்பவரின் வீட்டுப் பெண் சிக்கி இறந்துபோக, அந்த பெண்ணை போஸ்ட்மார்ட்டம் செய்யாமல் தரச் சொல்கிறார் அர்னால்டு.
போஸ்ட்மார்ட்டம் செய்யும் பணியிலிருக்கிற டாக்டர், ‘அப்படியெல்லாம் தர முடியாது’ என மறுத்துவிட்டு, போஸ்ட்மார்ட்டத்துக்கு தயாராகிறார். அர்னால்டு டாக்டரை தாறுமாறாய் மிரட்டுகிறார்; தன் செல்வாக்கு முழுவதையும் பயன்படுத்துகிறார். டாக்டர் தன் முடிவில் உறுதியாக இருக்கிறார். கதையில் பரபரப்பு தொற்றிக் கொள்கிறது.
உடல் டாக்டர் தீர்மானித்தபடி போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்டதா? அர்னால்டு எதிர்பார்த்தபடி கிடைத்ததா? என்பதை கதையின் மீதியாகத் தருகிறார் இயக்குநர் ஜெ பி
டாக்டரை எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்கு மிரட்டுவது, தன்னை அடக்கி அவமானப்படுத்திய போலீஸ் அதிகாரியை சுற்றிவளைத்து தட்டித் தூக்குவது, பெண் போலீஸ் அதிகாரியை ‘அந்த’ மாதிரியான கோலத்தில் கதறவிடுவது என காட்சிக்கு காட்சி அர்னால்டாக வருகிற டேனியல் பாலாஜி டெரர் பாலாஜியாக மாறியிருக்கிறார். ஏற்கனவே பல படங்களில் பார்த்த அதே நடிப்பு.
கொலை மிரட்டல், சுற்றி வளைத்து தாக்குதல் என எல்லா சோதனைகளையும் துணிச்சலாக எதிர்கொண்டு பிரேதப் பரிசோதனை கூடத்துக்குள் நுழையும்போது சிங்கப் பெண்ணாகத் தெரிகிறார் தான்யா ரவிச்சந்திரன். காட்டிய துணிச்சலுக்கான பின்விளைவுகளைச் சந்திப்பது, அதற்கு பழிவாங்க திட்டமிடுவது என நீளும் காட்சிகளில் பொருத்தமான நடிப்பைத் தந்திருக்கிறார்.
செல்வாக்கான மனிதர்தான்; பண பலம் அடியாள் பலம் உள்ளவர்தான்; தாதாவாக வலம்வருகிற அர்னால்டின் தந்தைதான் என்றாலும் மகள் இறந்தபின் எல்லா பலமும் இழந்த மனிதராய் மனம் நொறுங்கிப் போய் வெடித்து அழுது துடிக்கும்போது கலங்க வைக்கிறார் இயக்குநர் பாக்யராஜ்.
எக்ஸ் எம் எல் ஏவாக வருகிற அருள்தாஸ் அர்னால்டுக்கு துணையாய் நின்று தன் பங்கிற்கு உருட்டல் மிரட்டலில் ஈடுபடுகிறார். போலீஸின் பவர் என்ன என்பதை பவர்ஃபுல்லாக காட்டுகிறார் இயக்குநர் தமிழ்.
தான்யாவின் தங்கையாக, காவல்துறை அதிகாரியாக வருகிற ஸ்வேதா டோரத்திக்கு குறிப்பிட்டுச் சொல்லும்படியான கதாபாத்திரம். தன்னால் முடிந்த திறமை காட்டியிருக்கிறார். இன்னபிறரும் கதைக்குத் தேவையான பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள்.
வேகவேகமாய் பயணிக்கும் காட்சிகளுக்கு வெறியேற்றுகிறது ஜிப்ரானின் பின்னணி இசை. ஒளிப்பதிவின் நேர்த்தி படத்தின் பெரும் பலம்.
அரசு மருத்துவர் ஒருவர், மிரட்டல்களுக்கு பயப்படாமல், உயரதிகாரிகளின் உத்தரவுக்கு கட்டுப்படாமல் ஒரு உடலை போஸ்ட்மார்ட்டம் செய்தே தீருவேன் என உறுதிகாட்டுவது நிஜத்தில் சாத்தியமில்லை. சினிமாவில் எல்லாமே சாத்தியமென்பதால் அதை ஏற்றுக்கொண்டு, காட்சிகளைப் பின் தொடர்ந்து, அந்த பெண்ணின் இறப்புக்கு பின் ஏதோ மர்மம் இருக்கும் என B P எகிற எகிற எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. அதனால் படம் பத்தோடு பதினொன்றாகிறது.
-சு.கணேஷ்குமார்


