மீண்டும் கதையின் நாயகனாக யோகி பாபு… ‘கான்ஸ்டபிள் நந்தன்’ படத்தில் போலீஸாக வேடமேற்று அசத்தல்!

தமிழ் சினிமாவில் பல முன்னணி நட்சத்திரங்கள் போலீஸ் கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றிருக்கின்றனர். அந்த வகையில் நடிகர் யோகி பாபு பல தீவிரமான கதைக்களங்களில் கதையின் நாயகனாக நடித்து தனது திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். அவர் இப்போது வரவிருக்கும் திரைப்படமான ‘கான்ஸ்டபிள் நந்தன்’ படத்தில் கான்ஸ்டபிளாக நடிப்பதன் மூலம் ஒரு நடிகராக அடுத்த உயரத்தை எட்டவுள்ளார்.

இயக்குநர்கள் சுந்தர் சி, சசிகுமார், மு. களஞ்சியம் படங்களில் உதவி இயக்குநராக இருந்த பூபால நடேசன் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். படத்தை ஷங்கர் பிக்சர்ஸ்’ டி. ஷங்கர் திருவண்ணாமலை தயாரிக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூலை 7, 2024 அன்று திருவண்ணாமலை கோவிலில் பூஜையுடன் தொடங்கியது.

படம் குறித்து இயக்குநர் பூபால நடேசன் பேசும்போது, “நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களைத் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட  தயாரிப்பாளர்களைக் கண்டுபிடிப்பது ஒரு வரப்பிரசாதம். அப்படியான சங்கர் சார் என் கதையைத் தயாரிக்க முன்வந்ததற்கு மகிழ்ச்சி.

பார்வையாளர்கள் மற்றும் வர்த்தக வட்டாரத்தின் விருப்பமான யோகி பாபு சார் போன்ற ஒரு தலைசிறந்த நடிகருடன் பணிபுரிவது மகிழ்ச்சி அளிக்கிறது. நகைச்சுவை நடிகராக அவரது வாழ்க்கை வெற்றியின் உச்சத்தைத் தொட்டபோது, அவர் தைரியமாக கதாநாயகனாக அடியெடுத்து வைத்துள்ளார். அவர் கதாநாயகனாக நடித்தப் பல படங்கள் அவருக்கு நல்ல பெயரை வாங்கித் தந்திருக்கிறது. ‘கான்ஸ்டபிள் நந்தன்’ திரைப்படமும் அவரது வாழ்க்கையில் மற்றொரு மைல்கல்லாக இருக்கும். கதையில் யோகி பாபுவுக்கு எதிரான ஒரு வலுவான கதாபாத்திரம் இருக்கிறது. அதில் திறமையான நடிகர் ஒருவரை விரைவில் தேர்ந்தெடுத்து அறிவிப்போம்” என்றார்.

தயாரிப்பாளர் டி. சங்கர் திருவண்ணாமலை பேசியபோது, “பல நடிகர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழும் யோகி பாபு போன்ற தலைசிறந்த நடிகருடன் இணைந்து பணியாற்றுவது பெருமையாக இருக்கிறது. கதை சொல்லும் போது அவர் காட்டிய ஆர்வம் உண்மையிலேயே பாராட்டத்தக்கது. திரையுலகில் உள்ள முக்கிய இயக்குநர்களிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுத் தெளிந்துள்ள இயக்குநர் பூபால நடேசன் போன்ற திறமையான இயக்குநருடன் ’கான்ஸ்டபிள் நந்தன்’ படத்தில் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதுபோன்ற நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தொடர்ந்து தயாரிக்க விரும்புகிறோம்” என்றார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here