சென்னை, ஆக.26–2022: 75 ஆண்டு பழமையான இந்துஸ்தான் வர்த்தக சபை அதன் பவள விழாவை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 13–ந்தேதி கொண்டாடியது.
இந்திய துணை ஜனாதிபதிகள், பிரதமர்கள், பல்வேறு மாநில கவர்னர்கள் மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள் போன்ற பல முக்கியப் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் இந்துஸ்தான் வர்த்தக சபையின் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பெருமை சேர்த்துள்ளனர்.
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்த 1 லட்சம் கோடி ரூபாய் இலக்கை நோக்கிய தமிழக பொருளாதாரம் என்பதை மையமாகக் கொண்டு இதன் சேம்பர் தினம் நடைபெற்றது. தெற்காசியாவிலேயே தமிழகம் சிறந்த மாநிலமாக திகழ வேண்டும் என்று தமிழக முதல்வர் விரும்புகிறார். தமிழகம் அனைத்து தொழில் திறன்களையும் கொண்டுள்ளது. அத்துடன் இக்கட்டான காலக்கட்டங்களிலும் இம்மாநிலம் சிறப்பாக செயல்பட்டு தனது திறமையை வெளிப்படுத்தி இருக்கிறது.
முதலமைச்சரின் குறிக்கோளைக் கருத்தில் கொண்டு, திறமையான நபர்களை தேர்வு செய்து அவர்களுக்கு விருதுகளை இந்த சபை வழங்கி உள்ளது. ஏராளமான தொழில் நிறுவனங்களையும் திறமையான தொழில்முனைவோர் மற்றும் தொழில் அதிபர்களையும் தமிழகம் கொண்டிருப்பதால் முதல்வர் நிர்ணயித்த இலக்கை தமிழகம் நிச்சயம் எட்டும் என்று இந்துஸ்தான் வர்த்தக சபை உறுதியாக நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இதன் பவள விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டு இந்த ஆண்டுக்கான சிறப்பான வர்த்தகம் மற்றும் மனிதநேய விருதுகளை வழங்கினார். இந்த விருது பெற்றவர்களும், பல்வேறு தொழில்முனைவோர்களும், தொலைநோக்குப் சிந்தனை உடையவர்களும், முதல்வர் ஸ்டாலினின் கனவான 1 லட்சம் கோடி ரூபாய் பொருளாதார இலக்கை அடைய நிச்சயம் சிறப்பாக செயல்படுவார்கள்.
இது குறித்து இந்துஸ்தான் வர்த்தக சபை தலைவர் சிஏ கே. சுரேஷ் கூறுகையில், கடந்த 2000–ம் ஆண்டு முதல் ‘சேம்பர் தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது. அன்று முதல் தொழில்துறை சார்ந்த விருதுகளையும், மனிதநேய விருதுகளையும் வழங்கி வருகிறது. தொழில் அதிபர்கள், சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள், கேன்சர் இன்ஸ்டிடூட் டாக்டர் சாந்தா, கவின்கேர் நிறுவனர் தலைவர் சி.கே. ரங்கநாதன், அப்பல்லோ மருத்துவமனைகள் நிறுவனர் டாக்டர் பி.சி. ரெட்டி, சென்னை ஐஐடியைச் சேர்ந்த டாக்டர் ஆனந்த், செயின் கோபியன் தலைமை நிர்வாக அதிகாரி சந்தானம், கேபிஆர் மில் தலைவர் கே.பி. ராமசாமி ஆகியோருக்கு வழங்கி கவுரவித்துள்ளது என்று தெரிவித்தார்.
இந்த ஆண்டுக்கான வணிகச் சிறப்பு விருது சிட்டி யூனியன் வங்கி மற்றும் கேப்ளின் பாயிண்ட் லேபரட்டரீஸ் நிறுவனத்திற்கும், மனித நேய விருது மெட்ராஸ் டிஸ்லெக்ஸியா சங்கத்திற்கும் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு விருது பெற்றவர்கள் தங்கள் துறைகளில் சிறந்து விளங்கியதோடு, அவர்களின் செயல்திறன், தொழில்நுட்ப மேம்பாடுகள், வாடிக்கையாளர் சேவை, சாதனைகள் மற்றும் சமூகத்திற்காக அவர்கள் ஆற்றிய பணி ஆகியவற்றின் அடிப்படையில் அவர்களை இந்துஸ்தான் வர்த்தக சபை தேர்வு செய்திருக்கிறது. இந்த விருதுகளை சிட்டி யூனியன் வங்கி சார்பில் அதன் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான காமகோடி, கேப்ளின் பாயிண்ட் லேபரட்டரீஸ் சார்பில் முதல் தலைமுறை தொழில்முனைவோரான அதன் தலைவர் சி.சி. பார்த்திபன், மெட்ராஸ் டிஸ்லெக்ஸியா சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் டி. சந்திரசேகரும் பெற்றுக் கொண்டனர்.
நிகழ்ச்சியின் நிறைவில் இந்துஸ்தான் வர்த்தக சபை தலைவர் சிஏ கே. சுரேஷ் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் நாகப்பன் ஆகியோர் நன்றியுரை வழங்கினார்கள்!