ஒருவரை நேசிக்கிறீர்களா? அந்த நேசத்தை மனதுக்குள் பூட்டி வைக்காமல் சந்தர்ப்பம் கிடைக்கும்போது காட்டி விடுங்கள். யாரையாவது மகிழ்விக்க நினைக்கிறீர்களா? அவர்கள் உயிருடன் இருக்கும்போதே மகிழ்வித்து விடுங்கள். பரிசளிக்க விருப்பமா? பணிவிடை செய்ய தோன்றுகிறதா? எதுவானாலும் சம்பந்தப்பட்ட நபர் வாழும்போதே தோன்றுவதை செய்து விடுங்கள்.
இப்படியான கருத்துக்களை எடுத்துச் சொல்லி, ‘மனிதர்கள் இறந்தபின் அவர்கள் மீது அன்பைச் செலுத்தி, அக்கறை காட்டி என்ன ஆகப் போகிறது?’ என கேள்வி கேட்கும் படைப்பாக மலர்ந்துள்ள படம்.
கதைநாயகன் இன்டீரியர் டெகரேட்டர். திறமையிருந்தும் சரியான வாய்ப்பு அமையாததால் பிழைப்புக்காக பைக் டாக்ஸி ஓட்டுகிறார். கதைநாயகி ஐ டி துறை பணியில் இணைந்து பெரியளவில் முன்னேற துடிக்கிறார். இருவரும் சந்திக்கிறார்கள். காதலர்களாகிறார்கள். அவள் அவன் வாழ்வில் வந்தபின், அவளது பங்களிப்புடன் பிசினஸ் வாய்ப்பு கிடைத்து பெரியளவில் முன்னேறுகிறான். அந்த முன்னேற்றமே அவர்களின் பிரிவுக்கு காரணமாக அமைகிறது.
நாட்கள் கடந்தோடுகிறது. பிரிந்தவர்கள் சேர்கிறார்கள். அந்த சேர்தலுக்கு பின் ஏற்படும் மாற்றங்களே திரைக்கதை… இயக்கம் அஸ்வின் சந்திரசேகர்
சந்தோஷத்தை சந்தர்ப்பங்களுக்கேற்ற அளவில் வெளிப்படுத்துகிற கதைநாயகன் சந்தோஷ் சோபன் கோபம், வருத்தம், வேதனை என மற்ற உணர்வுகளை அதன் தன்மை குறையாமல் பிரதிபலிக்கிறார்.
முன்பாதி முழுக்க காதலைக் கண்களில் காண்பித்து வசீகரப் புன்னகை சிந்தியபடியே வலம் வரும் நாயகி மானசா வரணாசி, பின்பாதியில் மனதை கலங்கடிக்கும் விதமாக நடித்து மனதில் நிறைகிறார்.
யோகிபாபு ஆரம்பத்தில் காமெடி கலகலப்பு தந்து கதையின் கனமான தருணங்களிலும் கலந்திருக்கிறார். சுனில் ரெட்டியின் கதாபாத்திரமும் அவர் நடித்திருக்கும் விதமும் ரசிக்க வைக்கிறது.
லிவிங்ஸ்டன், ராஜீவ் கனகலா, கோப்ராஜு ரமணா, ஸ்ரீரஞ்சனி என இன்னபிறர் கதையோட்டத்தின் உறுதுணையாகியிருக்கிறார்கள்.
சென்னையில் காலங்காலமாக வசிப்பவர்கள் கூட சென்னையை இந்தளவு சுற்றிப் பார்த்திருக்க முடியாது. அந்தளவுக்கு பிரதான சாலை, கிளை பிரிகிற சாலை, அசத்தலான பாலங்கள், சுரங்கப்பாதைகள், பிரமாண்ட மெட்ரோ, சந்து பொந்துகள் என சுற்றுப்பயணம் செய்திருக்கிறது தினேஷ் புருஷோத்தமனின் கேமரா. அத்தோடு நிற்காமல் கேரளாவின் கொள்ளை அழகையும் வாரிச் சுருட்டியிருக்கிறது.
லேசாக ஜீ வி பிரகாஷ் டச் தெரிகிற ஆதித்யா ரவீந்திரனின் பின்னணி இசை காட்சிகளின் உணர்வை துல்லியமாய் கடத்துகிறது. பாடல்களில் குளுமை கூடியிருக்கிறது.
ஒரு பாதியில் விதைத்திருக்கும் தன்னம்பிக்கை, மறு பாதியில் உணர்த்தும் வாழ்க்கையின் எதார்த்தம் இரண்டுமே மனதோடு வந்து விடும். காதல் என்பது எப்படியிருக்க வேண்டும் என்ற புரிதலும் தொற்றிக் கொள்ளும். அப்படியொரு படைப்பில் மூழ்க விரும்பினால் கப்புள் ஃபிரெண்ட்லி பெஸ்ட் சாய்ஸ்!
-சு.கணேஷ்குமார்

