அளவுக்கு மீறினால் ஆப்பு கன்பர்ம்.
இந்த காலத்துக்கும் பொருந்தும் கருத்தை எடுத்துச் சொல்கிற ‘கார்மேனி செல்வம்.’
கார் டிரைவராகப் பணிபுரிகிற செல்வம் மனைவி, மகனுடன் வருமானத்துக்கேற்ற எளிய வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். தான் ஓட்டும் காரில் பயணித்த ஒருவருடன் பேச்சுக் கொடுத்ததில், அவர் ‘பணக்காரனாகணும்னா முதல்ல பணக்காரனா வாழ்ந்து பழகணும்; அதுக்கு கடன் வாங்கணும்’ என்று போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போகிறார். அதை சீரியஸாக எடுத்துக்கொண்ட செல்வம் கண்டபடி கடன் வாங்குகிறார். ஆடம்பர வாழ்க்கைக்கு பழகுகிறார்; தன் குடும்பத்தையும் பழக்குகிறார்.
செல்வத்தின் அந்த தகுதிக்கு மீறிய பழக்க வழக்கம் என்ன மாதிரியான விளைவுகளை உருவாக்குகிறது என்பதே மீதிக்கதை… இயக்கம் ராம் சக்ரி
செல்வமாக சமுத்திரகனி. செல்வந்தராக ஆசைப்பட்டு அவர் எடுக்கும் முடிவுகள் எல்லாமே ஆர்வக் கோளாறாகவும், ‘பைத்தியக்காரன்தான் இப்படியெல்லாம் நடந்து கொள்வான்’ என்று நினைக்கும்படியும் இருக்க, அந்த ஏடாகூட ஆசாமி கேரக்டருக்கு அனுபவ நடிப்பால் பலம் சேர்த்திருக்கிறார்.
கணவனின் போக்கு பிடிக்கா விட்டாலும் சகித்துக் கொண்டு வாழ வேண்டிய நிலையை பொருத்தமாக பிரதிபலிக்கிறது சமுத்திரகனிக்கு மனைவியாக வருகிற லெஷ்மிபிரியாவின் நடிப்பு.
பணமிருக்கும் இடத்தில் குணமிருக்காது என்பதை பலரும் சொல்ல கேட்டிருப்போம்; அனுபவத்திலும் உணர்ந்திருப்போம். அதற்கு மாறான நபராக பணமும் குணமும் நிறைந்திருக்கும் நபராக, சமுத்திரகனியின் பாசமான முதலாளியாக வந்து போகிறார் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன்.
அபிநயா, கரன் சக்கரவர்த்தி, கார்த்திக் குமார், படவா கோபி, கோதண்டம், தேனடை மதுமிதா, சங்கர நாராயணன் என இன்னபிறரின் நடிப்பு இயல்பாக இருக்கிறது.
மியூஸிக்லவுட் ஸ்டுடியோ (Musicloud Studio & Technology) வழங்கியிருக்கும் இசை உணர்வுபூர்வமான கதையோட்டத்தின் தேவையை நிறைவேற்றியிருக்கிறது. யுவராஜ் தக்சனின் ஒளிப்பதிவு நேர்த்தி.
ஆசை தவறில்லை; அதுவே தகுதிக்கு மீறிய பேராசையாகும்போது என்னவெல்லாம் நடக்கும் என்பதற்கு எத்தனை விதமான அனுபவம் கிடைத்தாலும் மக்கள் திருந்தப் போவதில்லை. அதுவரை கார்மேனி செல்வன் மாதிரியான படைப்புகளுக்கு இந்த சமூகத்தில் அவசியமிருக்கிறது. படத்தை நாடகத்தனமான காட்சிகள் பலவீனமாக்கியிருக்கிறது.

