சஸ்பென்ஸ் வரிசைகட்டும் ‘சிட்டுக்குறிஞ்சி.’
கொடைக்கானல். அந்த பெண் தனியாக இருக்கிறாள்; அந்த நேரமாகப் பார்த்து ஒரு இளைஞன் ஏதோவொரு ஊரிலிருந்து அவள் வீட்டுக்கு போகிறான். தன் கணவர் வீட்டில் இல்லை என்று சொல்லும் அவள், அவனை இனிமையாய் வரவேற்று, குளிப்பதற்கு வெந்நீர் போட்டுக் கொடுத்து, ஐந்து வகை சட்னி அரைத்து சூடச்சுட இட்லி பரிமாறுகிறார். அதெல்லாம் பெரிய விஷயமேயில்லை; அவனை அடிக்கடி கிறக்கமாக பார்ப்பதோடு, அவனைக் கவரும்படி உடை உடுத்தி, பூவெல்லாம் வைத்து புதுமணப் பெண் போல் அவன் எதிரில் நிற்கிறாள்.
அதையெல்லாம் பார்க்கும்போது, என்ன இது, படம் சென்ஸாரில் யூ சர்டிஃபிகேட் வாங்கியிருக்கிறது; கதை போகிற போக்கைப் பார்த்தால் பக்கா ஏ சர்டிஃபிகேட் அடல்ட் கன்டென்ட் போலிருக்கிறதே என்றெல்லாம் யோசிக்கிறோம். அடுத்த நிமிடமே கதையின் போக்கு திசைமாறி அந்த இளைஞன் அந்த ஊருக்கே போகவில்லை, அவளை சந்திக்கவேயில்லை என்றெல்லாம் குழப்பியடிக்க, ஊரே அவனை பைத்தியம் என்கிறது. நமக்கும் கொஞ்சம் தலை சுற்றுகிறது.
உண்மையில் அவன் யார்? அவன் சந்தித்த பெண் யார்? அவனுக்கும் அவளுக்கும் என்ன தொடர்பு?
அதையெல்லாம் எடுத்துச் சொல்லும் காட்சிகள் அணிவகுக்க, பார்ப்பது முன் ஜென்ம கதை என குத்துமதிப்பாக புரிந்து கொள்கிறோம்.
முழுமையாக பார்த்து முடித்தபின்னும் பார்த்தது ஹாரர் படமா? அமானுஷ்ய படமா? இல்யூஷன் சம்பந்தப்பட்ட படமா? சயின்ஸ் ஃபிக்ஷனா? என்ற முடிவுக்கு வந்துவிட முடியாது. படத்தை அப்படியொரு வித்தியாசமான படைப்பாக்கியிருக்கிறது சிட்டுக்குறிஞ்சி.
ஹேர் ஸ்டைல், உடை, மீசை என ’16 வயதினிலே’ காலகட்டத்துக் கதைக்கேற்ற கெட்டப்பில் வரும் ரெஜித்மேனன், நடிப்பில் காதல், குழப்பம் என உணர்வுகளை சரியாக கொண்டு வந்திருக்கிறார்.
ஹீரோயின்கள் நக்ஷா ஷரன், தீப்ஷிகா இருவரும் அழகாலும் அலட்டலில்லாத நடிப்பாலும் மனதில் இடம்பிடிக்க, வி ஜெ பப்பு, ஸ்ரீராம் கார்த்திக், ஜி எம் குமார், கராத்தே ராஜா, ஹலோ கந்தசாமி, ஆதவன், ராம்ஸ், தேனி முருகன், ‘பருத்திவீரன்’ சுஜாதா உள்ளிட்ட நடிகர் நடிகைகளுக்கு குறிப்பிட்டுச் சொல்லும்படியான கேரக்டர்கள் கிடைத்திருக்கிறது.
மாறாவின் இசையில் ரம்யா நம்பீசன் பாடிய ‘குறிஞ்சி மலை மேல’ பாடல் கவர்கிறது. பின்னணி இசை பரவாயில்லை ரகம். கொடைக்கானலை இரண்டு மூன்று முறை சுர்றி வந்த திருப்தியைத் தருகிறது ஃபிரான்சிஸ் ராஜ்குமாரின் ஒளிப்பதிவு.
அழகான காதல் கதையை வித்தியாசமாக கொடுக்க நினைத்த இயக்குநர் வி ஜெ மீனாட்சி சுந்தரம் மனம்போன போக்கில் திரைக்கதை அமைத்திருப்பது சற்றே அயர்ச்சியூட்டினாலும், காட்சிகளை உயிரோட்டமாக பதிவு செய்துள்ளதற்காக பாராட்டலாம்.
-சு.கணேஷ்குமார்

