Home பொது டி சி திரைப்படம் ஒரு பார்வை -சரவணகார்த்திகேயன்

டி சி திரைப்படம் ஒரு பார்வை -சரவணகார்த்திகேயன்

கிட்டத்தட்ட நன்று.
படத்தின் ஒளிப்பதிவு (குறிப்பாய் ஃப்ரேம்கள்), பின்னணி இசை, வன்முறை அழகியல், இறுக்கமான திரைக்கதை, வாமிகாவின் நடிப்பு இந்த ஐந்தும் ஏற்கெனவே போதுமான அளவு சிலாகிக்கப்பட்டு விட்டதால் – அவை சிறப்பாகவே இருந்தன – மற்ற விஷயங்களைப் பார்ப்போம்.
முதல் விஷயம் இது சரத் சந்திரரின் தேவதாஸ் நாவலைத் தழுவியதே அல்ல. பாத்திரப் பெயர்கள் (தேவதாஸ், சந்திரா, பார்வதி, சுனிலால்) மட்டும் ஒற்றுமை இருந்தால் போதுமா? சந்திரா பாலியல் தொழிலாளி, தேவதாஸைச் சந்திந்த பின் தன் வேலையைக் கை விடுகிறாள் என்ற மெல்லிய ஒற்றுமை தாண்டி வேறு ஏதுமில்லை. நாவலின் முக்கியப் பார்வை பார்வதி, சந்திரா பாத்திர வார்ப்புக்கு இடையிலான முரண்கள். இதில் அப்படி ஏதும் இல்லை. அடுத்து நாவலில் தேவதாஸ் சந்திராவைப் பாலியல் தொழிலில் இருந்து மீட்பதில்லை. இந்த அளவு ஒற்றுமைக்கு சரத் சந்திரர் பெயரை இழுத்தால் அதே அளவு சிலப்பதிகாரத்திலும் ஒற்றுமை சொல்லலாம், இளங்கோவடிகளுக்கும் நன்றி கார்ட் போடலாம்.
அடுத்து படம் நெடுக வலுவற்ற காரணங்கள். அது படத்துடன் ஒன்ற விடாமல் தடுக்கிறது. தாஸுக்கு பார்வதி மேல் ஏன் காதல் வருகிறது, சந்திரா மேல் ஏன் அக்கறை வருகிறது, 2011ல் வேலூர் அருகே கிராமத்தில் ஆங்கில வழிப் பள்ளிக் கல்விச் செலவுக்கு ஏழு லட்சம் ரூபாய், அதை சந்திராவின் வாடிக்கையாளர்களிடம் பெறுவது என எல்லாமே convincing-ஆக இல்லாத கதை முடிச்சுகள்.
படத்தில் சுவாரஸ்யத் திருப்பங்கள் என ஏதுமே இல்லை. ஒரு மாதிரி lazy writingதான். போலீஸ் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி மிரட்டியோ சித்ரவதை செய்தோ எளிதில் அடுத்தடுத்த விஷயங்களைக் கண்டுபிடித்து விடுகிறார்கள். இந்தப் பக்கம் தாஸும் சில்லறை வழிகளில் தப்பித்துக் கொண்டே இருக்கிறான். பாலியல் தொழிலாளி பகுதியில் பேசப்படும் விஷயங்கள் கூட ரொம்ப க்ளீஷேவான பல படங்களில் கண்டவையே. படத்தில் நிமிர்ந்து உட்கார வைத்த ஒரே காட்சி சந்திரா டாக்டரைக் கொல்வதுதான். (அந்த டாக்டர் பாத்திர ஆளுக்கு பிகில் படத்தில் குழந்தை தருவதன் மூலம் பெண்ணை முடக்கும் பாத்திரம்; இதில் அதை இல்லாமல் செய்வதன் மூலம் பெண்களை முடக்கும் பாத்திரம்.)
அப்புறம் பார்வதிக்கும் சந்திராவுக்கும் அதிக வித்தியாசம் இல்லை. அவர்களை தாஸ் அணுகும் முறை, உதவும் முறைக்கும் அதிக வேறுபாடு இல்லை. எதற்கு வந்தோமென்று மறந்து சமையல்காரனாகவே மாறி விடுவது போல் எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் உடனே உதவ இறங்கி விடுகிறான் தாஸ். ஒரே ஆறுதல் சந்திராவுக்கு தாஸ் மீது வரும் காதலும் அதற்காக அவள் செய்யும் மெனக்கெடல்களும்தான். கொலையும் வன்முறையும் தாஸுக்குப் பழகியவை, ஆனால் சந்திரா காதலுக்காக அதில் இறங்குவதே உயர்வானது. அவ்வகையில் சந்திராவின் காதல் சொல்லப்படும் இப்படத்தின் சுமார் அரை மணி நேரப் பகுதி அழகானது.
போஜராஜாக நடித்தவர் கிட்டியாக நடித்தவர் இருவரும் சிறப்பாகப் பங்களித்திருந்தனர். கஸ்தூரி ராஜா (தாஸின் தந்தை), ஸ்பீக்கரில் போட்டுப் பேசும் போலீஸ்காரர் பாத்திரங்களின் character arc குழப்பமானதாகவே இருந்தது. வசனங்கள் சில இடங்களில் நன்றாக இருந்தன.
இன்று வரும் படங்களோடு ஒப்பிடுகையில் இதில் வன்முறை அதிகம் என்று தோன்றவில்லை. ஆனால் வன்முறை காரணமாக இரண்டரை மணிக்கும் குறைவாகவே ஓடினாலும் நீண்ட படம் போல் உணர்வு பார்வையாளருக்கு உண்டாகிறது.
இது சாதாரண மசாலா படம். மேக்கிங் மற்றும் மிகச் சில காட்சிகள் மூலம் இதைத் தீவிரப் படமாகக் காட்ட முயன்றிருக்கிறார் இயக்குநர். மிஷ்கினோடு அருண் மாதேஸ்வரனை இந்தக் காரணத்தால்தான் ஒப்பிட முடியாது, கூடாது.
நன்றாக எடுக்கப்பட்டிருக்கும் வலுவற்ற படம் என்றுதான் இதைச் சொல்ல முடிகிறது. ஆரண்ய காண்டம் அங்கேதான் வித்தியாசப்படுகிறது. அது மிகச் சிறப்பாக எழுதப்பட்ட படமும் கூட என்பதால் அதில் கூடுதல் சுவாரஸ்யம் இருக்கிறது.
படத்தில் வாமிகா ஒரு ரோஜாப் பூவை எப்போதும் வைத்திருப்பார். கையில், தலையில் என. அழகாக இருக்கும். ஆனால் இறுதியில் அது ப்ளாஸ்டிக் பூ என்பதைச் சொல்வார். இப்படமும் அப்படித்தான். இந்த ப்ளாஸ்டிக் பூவை ரசிக்க வைத்ததுதான் அருண் மாதேஸ்வரின் திறமை என்று கூறலாம்.
நிச்சயம் திரையரங்கில் பாருங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்