திரைப்படங்களில் வில்லனாக, வில்லன்களின் அடியாட்களாக நடிக்கிற பலரை இழுத்துப்போட்டு அத்தனைப் பேருக்கும் முக்கியத்துவம் தந்திருக்கும் ‘தாவுத்.’
போதைப் பொருள் பிஸினஸில் உலகமகா தாதாவாக இருக்கிற தாவுத்துக்காக சென்னையிலிருந்து போதைப் பொருள் கடத்துகிற வேலையை 20 வருடங்களாக செய்கிற ரவுடிக்கும் அந்த வேலையைச் செய்வதற்காக 20 வருடங்களாக காத்திருக்கும் இன்னொரு ரவுடிக்கும் மோதல் உருவாகிறது. இருவரில் ஒருவர் போதைப் பொருள் கடத்துவதற்காக அப்பாவி வாடகைக் கார் டிரைவர் ஒருவரை பயன்படுத்த திட்டமிட்டு, அவனிடம் பொறுப்பை ஒப்படைக்கிறார்.
அந்த கடத்தல் சரியானபடி நடந்ததா என்பதும் இரு ரவுடிகளின் மோதலில் பலம் காட்டியது யார், பலவீனமானது யார் என்பதும் கிளைமாக்ஸ்…
கால் டாக்ஸி ஓட்டி அதில் கிடைக்கும் குறைந்த வருமானத்தில் வாழ்நாளை ஓட்டிக் கொண்டிருப்பது, ஒரு பொருளை குறிப்பிட்ட இடத்தில் ஒப்படைத்தால் லட்சக்கணக்கில் பணம் கிடைக்கும் என்கிற வாய்ப்பு வரும்போது உற்சாகமாவது, ஆபத்தான அந்த வேலையை துணிச்சலோடு செய்வது என அப்பாவித்தனம் ததும்பும் நடிப்பைத் தந்திருக்கும் லிங்கா, கிளைமாக்ஸின் நெருக்கத்தில் எடுக்கும் அவதாரத்தின் உடல்மொழி அட்டகாசம்.
லிங்காவுடன் இணைந்து களப்பணியாற்றுகிற ஷாரா மதுபானத்தை கடவுளாக நினைத்து சைடிஸ்களுடன் பூஜை செய்வதெல்லாம் கலகலப்புக்கு கேரண்டி தருபவை.
தாவுத்துக்காக கடத்தல் தொழில் செய்கிற ரவுடியாக சாய் தீனா, அவருக்கு போட்டியாக அபிஷேக் வினோத். இருவரும் குஷியாக கொலைகள் செய்துகொண்டிருக்க, வினோத்தின் அடியாளாக வருகிற சரத் ரவி படத்தின் மெயின் வில்லன் ரேஞ்சுக்கு அலட்டலான ரசிக்கும்படியான பங்களிப்பைத் தந்திருக்கிறார்.
சாரா ஆச்சர் படத்தின் ஹீரோயின் என்றாலும் அவர் ஹீரோவுக்கு ஜோடியில்லை என்பது வித்தியாசமாக இருக்க, ஒரு காட்சியில் டாக்டராக, இன்னொரு காட்சியில் ஏர்ஹோஸ்டஸாக, மற்றொரு காட்சியில் ஸ்பைடர் வுமனாக என விதவிதமான உடையில் வந்து கவர்ச்சியான உடலழகால் கவர்கிறார்.
போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளாக வருகிற அர்ஜய் போதுமான அளவில் கம்பீரம் காட்டியிருக்க, அடுத்தகட்ட அதிகாரியாக ஆனந்த் நாக், ரவுடிகளுக்கு ஆதரவாய் செயல்படுகிற காவல்துறை அதிகாரியாக ஜெயக்குமார் என இன்னபிற நடிகர்கள் கதையோடு கலந்திருக்க, நிறைவுக் காட்சி வரை தாவுத்தாக வரப்போவது யார் என எதிர்பார்க்க வைக்கிறது திரைக்கதை.
போலீஸ் கமிஷனராக வருகிற ராதாரவியின் நடிப்பு வழக்கம்போல் கச்சிதம். அவரது கேரக்டரின் பெயரும் ராதாரவி என்றிருப்பது சிறப்பம்சம்.
கேங்ஸ்டர் கதைக்களத்துக்கு பொருத்தமான பின்னணி இசையைத் தந்திருக்கிறார் ராகேஷ் அம்பிகாபதி. சரத் வளையாபதி _ பிரேண்டன் சுஷாந்த் கூட்டணி காட்சிகளுக்கு வைத்திருக்கும் கோணங்களும் இரவு பகல் வித்தியாசத்துக்கேற்ப அமைத்திருக்கும் ஒளியுணர்வும் தரம்.
கேங்ஸ்டர்கள் தங்களுக்குள் போட்டி பொறாமையாக செயல்படுவதும், அடித்துக் கொண்டு அழிவதும் என்ற கதைக்களம் பழகியதுதான் என்றாலும், காட்சிகளில் எதிர்பாராத திருப்பங்களை வைத்து, மேக்கிங்கால் மாஸ் ஹீரோக்கள் நடிக்கும் கேங்ஸ்டர் படங்களைப் போன்ற உணர்வைத் தருகிறார் அறிமுக இயக்குநர் பிரசாந்த் ராமன்.
தாவுத் _ கெத்தான தவ்லத்!
-சு.கணேஷ்குமார்



