Home பொது டெலிவரி பாய் சினிமா விமர்சனம்

டெலிவரி பாய் சினிமா விமர்சனம்

லியோ சிவகுமார் ஆக்சன் ஹீரோவாக தரம் உயர்ந்திருக்கிற படம். ஒரு பாதி மென்முறை, மறுபாதி வன்முறை என பங்குபிரித்துக் கொண்டு பயணிக்கிற திரைக்கதையில் ‘டெலிவரி பாய்.’

ஹீரோ சிவா தேவையான தகுதிகளை வைத்துக் கொண்டு போலீஸ் பணியில் சேர்வதற்கான முயற்சியிலிருக்கிறார். அப்படியே ஃபுட் டெலிவரி பாயாகவும் பணிபுரிகிறார். இடையில், விபத்தில் சிக்கி உயிருக்கு போராடும் அம்மாவைக் காப்பாற்ற ஒரு இளைஞனிடமிருந்து, வேறு வழியின்றி இரண்டு லட்ச ரூபாயை அபகரிக்கிறார். நாளைய போலீஸ் இன்றைய திருடன் என்றாகிறது அவரது நிலைமை.

சிகிச்சை நல்லபடியாக முடிந்து அம்மா நலமாகிறார். அதன்பின், அபகரித்த பணத்தை உரியவரிடம் திருப்பிக் கொடுக்க நினைக்கிறார்; பணத்தை தன்னிடம் பறிகொடுத்தவரை தேடியலைகிறார். ஒருநாள் அவரை பார்க்கிறார். அப்போது அவர் போளீஸில் சிக்கி, எப்போது வேண்டுமானாலும் உயிர் பறிபோகும் என்கிற அளவிலான பெரும் பிரச்சனையிலிருக்கிறார்.

போலீஸில் சிக்குகிற அளவுக்கு அவர் செய்த தவறு என்ன என்பதையெல்லாம் விவரிக்கும் காட்சிகள் கதையில் பரபரப்புத் தீ பற்ற வைக்க,

சிவா நன்றிக்கடனாக அந்த பிரச்சனையிலிருந்து அவரைக் காப்பாற்ற களமிறங்குகிறார். அதன் விளைவுகள் ரத்தம் தெறிக்கிற மீதிக் கதை…

சிவாவாக லியோ சிவகுமார். அம்மாவுக்காக பணத்தை திருடுவது, திருடிய பணத்தை திருப்பிக் கொடுத்தால்தான் நிம்மதி என்ற மனநிலை சுமந்து திரிவது, கொலைகாரக் கூட்டத்திடம் மாட்டிக் கொண்டு அடிபட்டு ரத்தம் சிந்துவது, திருப்பித் தாக்கும்போது பீனிக்ஸ் பிரபுவின் வெறித்தனமான ஸ்டண்ட் கோரியோகிராபியில், மாஸ் ஹீரோக்களை நகலெடுத்தது போல் அக்சனில் தெறிக்க விடுவது என படம் முழுக்க ரவுண்டி கட்டி அடித்திருக்கிறார். காதலில் ஈடுபடவும் சிறிய வாய்ப்பிருக்கிறது.

காதலியாக பிரிகிடா. மிகச்சில தருணங்களில் ஜஸ்ட் எட்டிப் பார்ப்பது போன்ற வேலைதான். அதைப் பயன்படுத்தி கியூட்டான எக்ஸ்பிரஷன்களால் கவர்கிறார்.

மிகமிக எளிமையான அம்மா கேரக்டரில் அனுபவ நடிப்பை நிரப்பியிருக்கிறார் ராதிகா சரத்குமார்.

கொலைவெறிக் கும்பலை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் கெத்தான நபராக (இந்த படத்தின் தயாரிப்பாளர்) மாதேஸ்வரன், எந்த தவறும் செய்யாமல் ரவுடிக் கும்பலின் கொலைவெறிக்கு ஆளாகிறவராக துஷ்யந்த் ஜெயபிரகாஷ், இன்னபிற கேரக்டர்களில் காளி வெங்கட், ஜென்சன் திவாகர், போஸ் வெங்கட், உதயாதீப்… நடிப்பில் ஒருவரும் குறைவைக்கவில்லை.

‘பாட்டில் கேங்’ என்ற பெயரில் வருகிற ஏழு பேர் கூட்டணியின் பங்களிப்பு மிரட்டல்.

கே எஸ் சுந்தரமூர்த்தியின் பின்னணி இசை அதிரடி சரவெடியாகி காட்சிகளுக்கு வேகம் தருகிறது. பிரசன்னா எஸ். குமாரின் ஒளிப்பதிவு, ஆர். வசந்தகுமாரின் படததொகுப்பு நேர்த்தி.

இயக்குநர் நானி நன்றி மறப்பது நன்றன்று என்பதை கதையின் மையப்புள்ளியாக வைத்துக் கொண்டு ஒரு பாதி மென்முறை, மறுபாதி வன்முறை என பங்குபிரித்து படத்தை பரபர விறுவிறு படங்களை விரும்புவோருக்கான படைப்பாக்கியிருக்கிறார்.

டெலிவரி பாய் – சர்வீஸ் நன்றாக இருப்பதால் மதிப்பெண் என்கிற டிப்ஸை கொஞ்சம் அதிகமாகவே கொடுக்கலாம்.

-சு.கணேஷ்குமார்

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்