அடுத்தடுத்து நடக்கும் கொலைகள், அதற்கான காரணத்தையும் கொலையாளியையும் கண்டுபிடிக்கும் போலீஸ் என பத்தாயிரம் வாலா கொளுத்திப் போட்டதுபோல் பரபரக்கும் கதையில் ‘தூள்பேட்டை.’
காவல்துறை அதிகாரி மாசாணிக்கு அசம்பாவித சம்பவங்கள் மனதில் காட்சியாக தெரிவதும், அதன்படியே நிஜத்தில் நடப்பதும் வழக்கம். ஒருநாள் அவள் மனதில் அந்த ஏரியாவில் மூன்று தலைகள் உருளும் என்பதுபோல் அதிர வைக்கும் காட்சிகள் தெரிகிறது. பதறிப்போகும் அவள் அதை தன் உயரதிகாரிக்கு எடுத்துச் சொல்லி எச்சரிக்கவும் செய்கிறாள். அவரோ, ஸ்டேசனுக்கு புதிதாக வரும் அஸிஸ்டண்ட் கமிஷனரை எதிர்பார்த்து ஒருவித பயத்துடன் காத்திருப்பதால் மாசாணி சொல்வதை சீரியஸாக எடுத்துக் கொள்ள முடியாமல் போகிறது.
மாசாணியின் மனது சொன்னபடியே மூன்று தலைகள் போலீஸ் ஸ்டேசனுக்கு வந்து சேர்கின்றன; அஸிஸ்டண்ட் கமிஷனரும் வந்து பொறுப்பேற்கிறார்.
அப்புறமென்ன? கொலை செய்யப்பட்டவர்கள் யார் யார், கொலைகள் எதற்காக, கொலையாளி யார் என்பதை அவர் கண்டுபிடிப்பதோடு கதை முடியும் என்றுதானே நினைக்கிறீர்கள்? அது சரிதான். ஆனால், அந்த கொலைகளுக்கான பின்னணியை கண்டுபிடிக்க இன்னொரு அஸிஸ்டண்ட் கமிஷனரும் நியமிக்கப்படுகிறார்.
காவல்துறை உயரதிகாரிகள் என்றாலே திமிருக்கு பஞ்சமிருக்காது. அப்படிப்பட்ட அதிகாரிகள் இரண்டுபேர் ஒரே விஷயத்தில் ஈடுபடுகிறார்கள் என்கிறபோது அடுத்தடுத்த காட்சிகள் பெட்ரோல் கிணற்றில் தீப்பிடித்தது போன்ற விறுவிறுப்பில்தான் இருந்தாகவேண்டும். அப்படியே இருக்கிறது… இயக்கம் ஜெ ஜெஸ்வினி
சினிமாக்களில் காவல்துறை உயரதிகாரிகள் பெரும்பாலும் நேரடியாக சம்பந்தப்பட்ட ஸ்டேசனுக்கு வந்து பொறுப்பேற்பதில்லை. சிலபல ஹீரோயிஸம் காட்டியபிறகே வந்து சேர்வார்கள். அந்த வழக்கம் இந்த படத்திலும் தொடர்கிறது. டிரான்ஸ்பரில் தூள் பேட்டை ஸ்டேசன்தான் வேண்டுமென கேட்டுப் பெறுகிற அஸிஸ்டண்ட் கமிஷனர் நேரடியாக ஸ்டேசனுக்கு வராமல் ஸ்டேசன் இருக்கும் பகுதியிலிருக்கிற ஒரு லாட்ஜில் தங்கி, அங்கேயே தன் துப்பாக்கியை தூக்கிப் போட்டுவிட்டு ஸ்டேசனுக்கு வருகிறார். அந்த நடவடிக்கைகள் ஆர்வத்தை தூண்டுவதாக இருக்க, குற்றப் பின்னணியை கண்டறியும் செயல்பாடுகளில் கம்பீரத்தையும் தனக்கு சமமான அதிகாரியிடம் காட்டும் ஈகோவில் திமிரையும் தெனாவட்டையும் கலந்து பரிமாறியிருக்கிறார் அந்த அதிகாரி கேரக்டரை ஏற்றிருக்கிற அஸ்வின் குமார்.
அஸ்வின்குமார் நடிப்பில் பாய்வது ஆறடிப் பாய்ச்சல் என்றால் அதைத் தாண்டி ஆழமாகப் பாய்பவராக குரு லெஷ்மண். தான் வருகிற காட்சிகளில் பார்வையாளர்கள் தன்னை மட்டுமே கவனிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பது அவரது தோரணையான நடிப்பில் தெரிகிறது.
போலீஸ் அதிகாரி மாசாணியாக பாடினிகுமார். தனக்கு தோன்றுகிற விஷயங்கள் அப்படியே நிஜத்தில் நடந்துவிடும் என்ற பதற்றத்தை துல்லியமாக காட்டுவதிலிருந்து அவருக்கான காட்சிகள் அத்தனையிலும் அளவான நடிப்பை அள்ளிக் கொடுத்திருக்கிறார்.
ஸ்ரீது கிருஷ்ணன், பிரீத்தி ஷர்மா, ஷியமந்தா கிரண், ரவிவர்மா
பிர்லா போஸ், விஸ்வமித்ரன், லிங்கா கார்த்திக் என இன்னபிற கதாபாத்திரங்களில் வருகிற பலரும் கதை கேட்ட பங்களிப்பை குறையின்றிச் செய்திருக்கிறார்கள்.
கொலையும் கொலை சார்ந்தும் பயணிக்கிற கிரைம் திரில்லர் கதைக்கேற்ற பின்னணி இசை, காட்சிகளில் இருக்கிற மிரட்டலை பார்வையாளர்களுக்கு கடத்துகிற விதத்தில் அமைக்கப்பட்ட ஒளிப்பதிவாளர் எம் எஸ் சதீஷ்குமாரின் கேமரா கோணங்கள் சீரிஸுக்கு பலம்.
பார்த்துக் கொண்டிருப்பது இன்வெஸ்டிகேஷன் திரில்லருக்கான பழக்கப்பட்ட டெம்ப்ளேட் கதைக்களம்தான் என்றாலும் எதிர்பாராத திருப்பங்களால் தூள்பேட்டை தருகிற அனுபவம் டோல்கேட்டில்லாத பைபாஸில் பயணிப்பதுபோல் உற்சாகமாகிறது.
-சு.கணேஷ்குமார்


