இதுவரை சொல்லப்படாத கதையில் ஆக்சன் திரில்லராக பற்றியெறியும் ‘டீசல்.’
கதைக்களம் வட சென்னை. 1979 காலகட்டம். பெட்ரோல், டீசல் உள்ளிட்ட திரவ எரிபொருட்களின் மூலப் பொருளான குரூடு ஆயில் எனப்படுகிற கச்சா எண்ணெய் கடற்கரையோரம் அமைக்கப்பட்டுள்ள ராட்சத குழாய்கள் வழியே எரிபொருள் உற்பத்தி மையத்திற்கு செல்கிறது. அந்த குழாய்கள் தடுப்பாக இருப்பதால் படகை கடலுக்குள் செலுத்த முடியாமல் போக, மீன் பிடி தொழிலை நம்பியிருப்பவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
மீனவர்கள் அந்த குழாய்களை அகற்ற வலியுறுத்தி போராடி தோல்வியடைகிறார்கள். அவர்களில் சிலர் அந்த குழாய்களில் செல்லும் குரூடு ஆயிலை திருடி விற்பதை தொழிலாக செய்கிறார்கள். அந்த தொழிலில் பலமாக இருக்கிற ஒருவருடன் இணைந்து இளைஞன் வாசுவும் அதே வேலையை செய்கிறான். அவனுக்கு போட்டியாக இன்னொரு தரப்பு களமிறங்க இருவருக்குள்ளும் மோதல் வெடிக்கிறது. அவர்கள் செய்யும் அந்த குரூடு ஆயில் திருட்டை சாதகமாக்கிக் கொள்ளும் கார்ப்பரேட் முதலாளியால் மீனவ கிராமங்களுக்கு பேராபத்து உருவாகும் சூழ்நிலை. அதை தடுக்க களமிறங்கும் வாசு சந்திக்கும் பிரச்சனைகளும் சவால்களுமாக கடந்தோடுகின்றன அடுத்தடுத்த காட்சிகள்… இயக்கம் சண்முகம் முத்துசாமி
காதல் நாயகனாய் வலம் வந்துகொண்டிருந்த ஹரிஷ் கல்யாணை அனல் பறக்கும் ஆக்ஷன் ஹீரோவாக பார்க்க முடிகிறது. நல்ல டிரான்ஸ்பர்மேஷன். காதல், சென்டிமென்ட் என உணர்வுபூர்வ காட்சிகளிலும் நிறைவான நடிப்பு.
நாயகி அதுல்யாவுக்கான காட்சிகளும் அவரது முகத்தில் எக்ஸ்பிரசன்களும் குறைவு.
இன்ஸ்பெக்டராக வருகிற வினய் ராயின் வில்லத்தனம் மிரட்டல்; இன்னொரு வில்லனாக கெத்தாக களமாடியிருக்கிறார் விவேக் பிரசன்னா. சாய்குமாருக்கு கம்பீரமான கதாபாத்திரம். அவர்களோடு கருணாஸ், போஸ் வெங்கட், காளி வெங்கட் என திரும்பிய பக்கமெல்லாம் பரிச்சயமான நடிகர்கள் எட்டிப் பார்த்துக் கொண்டிருக்க,
திபு நினன் தாமஸின் இசையில் ‘எம்மாடி…எம்மாடி…’ பாடல் ரசிகர்களை உற்சாக மோடுக்கு தூக்கிப் போகிறது. பின்னணி இசையும் ஸ்டன்ட் சில்வா, ராஜசேகர் கூட்டணியின் ஆக்சன் கோரியோகிராபியும் காட்சிகளுக்குப் பலம் சேர்க்கிறது.
கதைநாயகன் கார்ப்பரேட் சதிகளை முறியடித்து வெற்றி பெறுகிறார் என்பது பழக்கப்பட்டதுதான் என்றாலும் இதுவரை சொல்லப்படாத கதையால் தனித்துவம் பெறுகிற டீசல், சொதப்பலான திரைக்கதையால் இழக்கிறது வசூல்!
-சு.கணேஷ்குமார்

