Home பொது உணர்வுப்பூர்வமான பல அடுக்குகளைக் கொண்ட முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்! -ஹைக்கூ படத்தில் நடித்தது குறித்து...

உணர்வுப்பூர்வமான பல அடுக்குகளைக் கொண்ட முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்! -ஹைக்கூ படத்தில் நடித்தது குறித்து நடிகை ஃபெமினா ஜார்ஜ்

வசீகரமான தோற்றம் மற்றும் திறமையான நடிப்பால் ரசிகர்களை ஈர்த்துள்ள நடிகை ஃபெமினா ஜார்ஜ், ‘ஹைக்கூ’ படத்தின் மூலம் ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்தும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஏகன், ஸ்ரீதேவி மற்றும் ஃபெமினா ஜார்ஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தத் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. பெண்களின் உணர்வுகள் தலைமுறைகளைக் கடந்தும் மாறாமல் இருப்பது குறித்தும், யுவராஜ் சின்னசாமி இயக்கியுள்ள இப்படத்தில் தனக்குக் கிடைத்துள்ள முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் குறித்தும், தமிழ்த் திரையுலகில் அறிமுகமாவது குறித்த அனுபவங்களையும் பகிர்ந்துகொள்கிறார் நடிகை ஃபெமினா ஜார்ஜ்.
தனது கதாபாத்திரம் குறித்துப் பேசிய நடிகை ஃபெமினா ஜார்ஜ் பகிர்ந்து கொண்டதாவது, “தமிழ்த் திரையுலகில் அறிமுகமாவது எனது கனவாக இருந்தது. அந்த வாய்ப்பு ‘ஹைக்கூ’ போன்ற நம்பிக்கையளிக்கும் படத்தின் மூலம் கிடைத்திருப்பதுடன், உணர்வுப்பூர்வமான பல அடுக்குகளைக் கொண்ட முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி. எனது கதாபாத்திரம் பெண்களின் ஆழமான உணர்வுகளைப் பிரதிபலிக்கிறது. காலம் மாறும்போது பெண்களின் இயல்பும் எதிர்பார்ப்புகளும் மாறிவிடுவதாகப் பலரும் நினைக்கிறார்கள். ஆனால், இத்தனை மாற்றங்களுக்குப் பின்னாலும் சில உணர்வுகள் காலத்தால் அழியாமல் அப்படியே நிலைத்திருக்கின்றன என்பதே எனது கருத்து.
ஒரு பெண்ணின் உணர்வுகள், தான் பெற வேண்டும் என்று விரும்பும் அன்பு, ஓர் ஆணிடம் அவள் எதிர்பார்க்கும் குணங்கள் ஆகியவை தலைமுறைகள் மாறினாலும் பெரிதாக மாறுவதில்லை. இதுவே ‘ஹைக்கூ’ படத்தில் என் கதாபாத்திரத்தின் சுருக்கம். இதுபோன்ற உணர்வுகள் பெரும்பாலும் பெண் இயக்குநர்களின் பார்வையில் படமாக்கப்படுவதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், இயக்குநர் யுவராஜ் சின்னசாமி எனது கதாபாத்திரத்தைப் புரிதலுடனும் உணர்வுப்பூர்வமான அணுகுமுறையுடனும் கையாண்டிருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
என் மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர்கள், இயக்குநர் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். ‘ஹைக்கூ’ படத்தைப் பார்த்துவிட்டு ரசிகர்கள் முகத்தில் புன்னகையுடனும், கண்களில் லேசான கண்ணீருடனும், திரையரங்கை விட்டு வெளியேற வேண்டும் என்று விரும்புகிறேன். அந்த உணர்வுகள் திரையரங்கை விட்டு வெளியேறிய பிறகும் அவர்களுடன் இருக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை, ஒரு திரைப்படத்தின் அழகே அதுதான். அது நமக்குள் இருக்கும் ஏதாவது ஒரு உணர்வை தூண்டி, மகிழ்ச்சியான மனதுடன் நம்மை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்