என்ன நடக்கிறது, ஏது நடக்கிறது என புரியாதபடி ஏதேதோ நடக்க, கிளைமாக்ஸை நெருங்க நெருங்க அதுவரையிலான குழப்பங்களை தெளிவுபடுத்துகிற சைகலாஜிகல் திரில்லர்.
தீரன், கல்யாணம் செய்துகொள்ளாமல் தன்னுடன் சேர்ந்து வாழ்ந்த பெண்ணை பிரிந்து வாழ்கிறார். அந்த நிலையில் ஒரு அப்பார்ட்மென்டின் ஃபோர்த் ஃப்ளோரில் குடியேறுகிறார். அங்கு போனபின் அந்த அப்பார்ட்மென்டில் குடியிருக்கும் சிலர் தற்கொலை செய்துகொள்வதுபோல் கனவு வருகிறது. ஒரு கட்டத்தில் தன் கனவில் தற்கொலை செய்து கொண்டவர்கள், நிஜத்தில் கொலை செய்யப்பட்டிருப்பதை தெரிந்து கொள்கிறார்.
கொலைகளைச் செய்தது யார்? காரணம் என்ன? என்பதை கண்டுபிடிக்க முயற்சிக்கிறார். அது மட்டுமல்லாமல்
அதில் அவர் சந்திக்கும் கஷ்ட நஷ்டங்களும், அதையெல்லாம் கடந்து எதையெல்லாம் கண்டுபிடிக்கிறார் என்பதும் மீதிக் கதை…
இந்த கதையில் தீரனை பிரிந்து வாழும் பெண் ஐந்தாறு வருடங்கள் கழித்து, தீரனுக்கு போன் செய்து தான் ஆபத்தில் இருப்பதாக சொல்வதும், அதன்பின் அவரை தீரனால் தொடர்பு கொள்ள முடியாமல் போவதுமாக கூடுதல் பரபரப்பும் இணைந்து கொள்கிறது…
விபரீத கனவுகளால் பதட்டமடைவது, தனக்கு என்ன நடக்கிறது, தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என புரியாமல் தவிப்பது, தன் வாழ்க்கைத் துணைக்கு நேர்ந்த ஆபத்தறிந்து மனம் உடைவது, ஆபத்தில் சிக்கியிருந்த தன் மகளை மீட்டெடுக்கும் வாய்ப்பு கிடைத்த தருணத்தில் இன்ப அதிர்ச்சிக்கு ஆளாவது, கொலைகார கும்பலை புத்திசாலித்தனமாக கண்டுபிடிப்பது, அந்த கும்பலின் மிரட்டலை எதிர்கொள்வது என தீரனாக வருகிற ஆரி அர்ஜுனனுக்கு வழங்கப்பட்டிருக்கும் காட்சிகள் அத்தனையும் கனமானவை. நடிப்பு அதற்கு பொருத்தமாக இருக்கிறது.
ஆரியின் காதலியாக, ‘லிவ் இன்’ துணையாக வருகிற பவித்ரா உணர்வுபூர்வமான காட்சிகளில் நிரம்பியிருக்கிறார்.
பதற்றம் சூழ்ந்திருக்கும் ஆரிக்கு மனபலம் தருகிற தோழியாக, இன்னொரு நாயகியான தீப்ஷிகாவின் துடிப்பான நடிப்பும் துள்ளலான அழகும் கவர்கிறது.
இயக்குநர் சுப்ரமணிய சிவா கொலைவெறியராக களமாடியிருக்கிறார். இன்னபிறரும் தேவையானதை செய்திருக்க, ஜே.லக்ஷ்மனின் நேர்த்தியான ஒளிப்பதிவும், தரண்குமாரின் பின்னணி இசையும் படத்தின் ஜானருக்கு ஏற்றபடி அமைந்திருக்கின்றன.
கதாநாயகன் காணும் கனவுகளும் கனவில் கண்டது கண்முன் நடப்பதுமாக நீளும் காட்சிகள் அமானுஷ்யமாக இருக்க,
அப்பார்ட்மெண்டில் உள்ளவர்கள் கொலை செய்யப்படுவதும் அதற்கான காரணங்களும் கிரைம் திரில்லருக்கான பதைபதைப்பை உருவாக்க,
கதாநாயகனின் மனைவிக்கு நேர்கிற முடிவு அதிர்ச்சியை அள்ளிக் கொடுக்கிறது.
ஒரே டிக்கெட்டில் இரண்டு படம், மூன்று படம் என்பதுபோல் ஒரே படத்தில் வெவ்வெறு ஜானர்களை கலந்து பார்க்கிற வாய்ப்பைத் தருகிற இயக்குநர் எல் ஆர் சுந்தரபாண்டி திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யம் கூட்டியிருந்தால் ஃபோர்த் ஃப்ளோர் வெற்றியில் சிக்ஸர் அடித்திருக்கும்!
-சு.கணேஷ்குமார்
