‘கண்டபடி வாங்கும் கடன்; கழுத்தை நெரிக்கும் எமன்’ என கருத்து சொல்லி, பாடம் நடத்தியிருக்கும் படம்.
காலை நேரம்; அந்த குடும்பத்தில் மனைவி பரபரப்பாக இருக்கிறார். வீட்டில் போட்டது போட்டபடி கிடக்கிறது. எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்த வேண்டும். மகனை ஸ்கூலுக்கு அனுப்ப தயார்படுத்த வேண்டும். எந்த கவலையுமின்றி தூங்கிக் கொண்டிருக்கிற கணவனை எழுப்பிவிட்டு, பொறுப்பில்லாமல் இருப்பதை சுட்டிக்காட்டி திட்ட கடுப்படிக்க வேண்டும், ‘இந்த நம்பருக்கு போன் பண்ணு; வேலை கிடைக்க வாய்ப்பிருக்கு’ என அட்வைஸ் செய்ய வேண்டும். இப்படி ஏகப்பட்ட வேலைகள். எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு ஆஃபீஸ் கிளம்பிப் போகிறார்.
படத்தின் ஆரம்பக் காட்சி இப்படியிருக்க, கணவன் பொறுப்பில்லாதவன், வேலை வெட்டிக்குப் போகாதவன், மனைவியின் வருமானத்தில் காலத்தை ஓட்டுபவன் என்றெல்லாம் நினைக்கத் தோன்றுகிறது. ஆனால், அந்த கணவன் லேசுப்பட்ட ஆளில்லை.
ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுவது, தோற்றுப் போவது, கடன் தருகிற ஆப்கள் மூலமாக கடன் வாங்கி அதே சூதாட்டத்திற்கு பயன்படுத்துவது என பொழுதைப் போக்கிக் கொண்டிருப்பவர் அவர். அப்படி ஆன்லைன் கேம்ஸில் ஈடுபட்டு ஈடுபட்டு, அதற்காக கடன் வாங்கிய பணம் 65 லட்சத்துக்கும் அதிகமாகி விடுகிறது. கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் தவிக்கும் நிலை உருவாகிறது.
கடன் கொடுத்த ஆப் தரப்பு, இனியும் பொறுமையாக இருக்க முடியாது என்ற நிலைமைக்கு வருகிறது. கிரெடிட் ரெக்கவரி ஏஜெண்ட் (Credit Recovery Agent) என்ற பெயரில் அதட்டி மிரட்டி கடனை வசூலிக்கும் இரண்டு பேரை அவர் வீட்டுக்கு அனுப்புகிறது.
இது கதையின் துவக்கமாக இருக்க,
கொடுத்த கடனை திருப்பி வாங்குவதற்காக அவர்கள் அவனிடம் எப்படி நடந்து கொள்கிறார்கள், எந்த எல்லை வரை போகிறார்கள் என்பது 90 நிமிடங்களில் ஓடி முடிகிற இந்த படத்தின் திரைக்கதையாக விரிகிறது…
கடனில் மூழ்கியவராக நிவாஸ் ஆதித்தன். மனைவி திட்டுவதையெல்லாம் பொருட்படுத்தாமல் ஏனோதானோ மனநிலையில் இருப்பது, திடுதிப்பென இரண்டு பேர் வந்து அடித்து உதைக்கும்போது மிரள்வது, ஒரு கட்டத்துக்கு மேல் கடனை திருப்பிச் செலுத்தச் சொல்லி மிரட்டும் நபர்கள் மீதான பயம் நீங்கிவிட சகஜமாக பேசிக் கொண்டிருப்பது, அவர்களிடமே சூதாடுவது, கடனிலிருந்து குடும்பம் தப்பிக்க தான் தற்கொலை செய்து கொள்வது மட்டும்தான் தீர்வு என்ற சூழ்நிலைக்கு வரும்போது பரிதாபத்தின் உச்சத்துக்கு போய் கலங்கிப் புலம்புவது என கடந்துபோகும் காட்சிகளில் இயல்பான நடிப்பைத் தந்திருக்கிறார்.
கடுமையான வார்த்தைகளை மென்மைகப் பேசி நிவாஸ் ஆதித்தனை பயத்துக்குள் தள்ளுவது, அடித்து உதைத்து ரணமாக்குவது, துப்பாக்கியைக் காட்டி மிரட்டுவது, தற்கொலைக்குத் தூண்டுவது என கவனம் பெறுகிறது கடன் வசூல் ஆசாமிகளில் மிரட்டல் முதன்மையானவரான அபிநய் கிங்கரின் நடிப்பு.
அபிநயுடன் இணைந்திருக்கிற நபருக்கு அடிக்கடி மனைவியிடமிருந்து போன் வந்து கொண்டேயிருக்கிறது; அவரும் பேசிக் கொண்டேயிருக்கிறார். அந்த உரையாடல்கள் படு சீரியஸாக போய்க் கொண்டிருக்கும் காட்சிகளுக்கிடையில் மனதை ரிலாக்ஸ் செய்துகொள்ள பயன்படுகிறது.
நிவாஸ் ஆதித்தன் மனைவியாக வருகிறவரின் நடிப்பு கச்சிதம்; அவர் என்னென்ன செய்கிறார் என்பது இந்த விமர்சனத்தின் முதல் பேராவில் தெரிந்து கொள்ளலாம்.
கடனை வசூலிக்கப் போனவர்கள் அந்த வீட்டில் உணவு தயாரித்து சாப்பிடுவது, வீட்டிலேயே சிறுநீர் கழிப்பது, மது குடிப்பது என்றெல்லாம் நகர்கிற காட்சிகள் படத்தின் நீளத்தை அதிகரிக்க உதவியிருப்பதை தவிர எந்தவொரு தாக்கத்தையும் தரவில்லை.
ஹால், கிச்சன், ஒன்றிரண்டு அறைகள் என்றிருக்கிற ஒரு வீட்டுக்குள்ளேயே படத்தின் கதை முழுக்க நடந்து முடிந்துவிட, அனைத்தையும் அலுப்பு சலிப்பில்லாமல் பார்க்க வைத்திருக்கிறது ஒளிப்பதிவாளர் சபரியின் கேமரா கோணங்கள்.
ஜாய் கோஸ்டா பின்னணி இசை காட்சிகளை தரம் உயர்த்தியிருக்கிறது.
கடன் கொடுத்தவர்கள் கடனை திருப்பி வாங்குவதில்தான் குறியாக இருப்பார்கள். இந்த கதையில் ‘கடனை திருப்பிக் கொடுக்க முடிஞ்சளவு முயற்சி பண்ணு, இல்லாட்டி தற்கொலை செய்துக்கோ’ என தூண்டுகிறார்கள். அதற்கான காரணத்தை தெரிந்துகொள்ளும்போது அதிர்ந்து போவீர்கள். இந்த படத்தை பார்த்தபின் கண்டபடி கடன் வாங்க மாட்டீர்கள், ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட மாட்டீர்கள். ஈடுபடுவதற்கு முன் பல முறை யோசிக்கவாவது செய்வீர்கள். அதுவே படத்தை இயக்கியிருக்கிற அபிஷேக் லெஸ்லிக்கும் படக்குழுவுக்கும் கிடைக்கிற வெற்றி.
படத்தில் குறைகள் இல்லாமலில்லை; அதை தாண்டி மிகச்சில கேரக்டர்களை வைத்துக் கொண்டு எளிமையான செலவில் படத்தை உருவாக்கிய விதத்தை, மக்களிடம் விழிப்புணர்வை உருவாக்க வேண்டும் என்ற படத்தின் நோக்கத்தை பாராட்டாமல் விட முடியாது.
கேம் ஆஃப் லோன்ஸ் _ App’பு வைக்கிற ஆப்பு பொல்லாதது!
-சு.கணேஷ்குமார்


