படத்தில் நடித்திருப்பவர்கள் ஒரு வார்த்தைகூட பேசாமல் அவர்களின் நடிப்பு பற்றி ஆடியன்ஸை பேச வைத்திருக்கும் படம். காந்தி படம் போட்ட பணம் எப்படியெல்லாம் பேசுகிறது, மனிதர்களை எப்படியெல்லாம் மாற்றுகிறது என்பதை மெளனமொழியில் கடத்தியிருக்கும் ‘காந்தி டாக்ஸ்.’
வறுமைச் சூழலில் புரண்டுகொண்டிருக்கும் மகாதேவுக்கு (விஜய் சேதுபதி) அரசுப்பணி கிடைக்க வாய்ப்பிருந்தும், அந்த வேலையைப் பெற லஞ்சம் கொடுக்க வழியில்லாமல் தவிக்கிறார்.
மாபெரும் தொழிலதிபர் மோகன் போஸ்மேன் (அரவிந்த்சாமி) தொழில்முறை எதிரிகளால் வீழ்த்தப்பட்டு கடன் சுமையில் சிக்கித் தவிக்கிறார்.
அவர்கள் இருவரும் சந்தித்துக்கொள்ளும் சூழ்நிலையை காலம் உருவாக்கித் தர அதன்பிறகு அவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களின் அணிவகுப்பாக திரைக்கதையமைத்து இயக்கியிருக்கிறார் கிஷோர் பாண்டுரங் பெலேகர்.
கஷ்ட நஷ்ட சூழ்நிலை, அப்பாவை இழந்த நிலையில் அம்மாவின் உடல்நிலையைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பு, வேலையைப் பெற லஞ்சம் கொடுக்க முடியாத நிலை என மனதிலிருக்கும் வலிகளை அலட்டலில்லாத முகபாவங்களில் பிரதிபலிக்கும் விஜய் சேதுபதி, காதல் உணர்வை வழியவிடும் விதம் கச்சிதம்.
பணக்கார தோரணை, சூழ்ச்சியால் வீழ்ந்த வேதனை என இரு பக்கங்களையும் பக்காவாக காட்டியிருக்கிறார் அரவிந்த் சுவாமி.
கன்னம் ஒட்டிப்போன அதிதி ராவ் ஹைதாரி விஜய் சேதுபதியைக் காதலிக்கும் வேலையை சரியாக செய்திருக்கிறார். நேர்மையின் பாதையில் நடப்பதே நல்லது என காதலனுக்கு உணர்த்தும்போது அவரது கதாபாத்திரத்தின் மதிப்பு கூடுகிறது.
திருடனாக வரும் சித்தார்த் ஜாதவ் சார்லி சாப்ளினைப் போல் நடந்துகொண்டு கொஞ்சம் கொஞ்சம் சிரிப்பூட்டுகிறார்.
கசகசப்பான தெருக்கள், சாலைகள் என கதை நிகழ்விடங்களை வித்தியாசமான கோணங்களில் காண்பித்திருக்கிறது கரண் பி ராவத்தின் கேமரா.
வசன வாசனை துளியுமில்லாத இந்த படத்திற்கான ஏ ஆர் ரஹ்மானின் பின்னணி இசை காட்சிகளின் தேவையறிந்து பேசியிருக்கிறது; கோபப்பட்டிருக்கிறது; கொந்தளித்திருக்கிறது; சோகத்தை பிழிந்திருக்கிறது; உற்சாகத்தை நிரப்பியிருக்கிறது. பாடல்களில் ‘ஏதோ ஏதோ’ மட்டும் தேறுகிறது; மற்றவை ஏனோதானோ உணர்வையே தருகிறது.
எளிய கதைக்கு கமர்ஷியல் அம்சங்கள் நிரம்பிய திரைக்கதை ஓரளவு ஓகே ரகம்தான். வசனங்கள் இல்லாததால் பொறுமையைச் சோதிப்பது போன்ற உணர்வு ஏற்படுவதை தடுக்க முடியாது. படத்துக்கு கிளம்புவதாக இருந்தால் உங்களுக்கு பொறுமையிருக்கிறதா என்பதை சோதித்துக் கொள்வது அவசியம்!
-சு.கணேஷ்குமார்


