‘செஞ்சி’ சினிமா விமர்சனம்

பழங்காலப் புதையலை, பொக்கிஷங்களைத் தேடி பயணிக்கிறவர்கள் சந்திக்கிற சுவாரஸ்யமான அனுபவங்களை பல படங்களில் பார்த்திருக்கிறோம். இதோ இன்னொன்று…

வெளிநாட்டுப் பெண்மணியொருவர் புதுச்சேரிக்கு வந்து உறவுரீதியாக தனக்கு தொடர்புடைய வீட்டில் தங்குகிறார். விதவிதமான பழங்காலப் பொருட்கள் சேமிக்கப்பட்டுள்ள அந்த பிரமாண்ட வீட்டின் அறையிலிருந்து அவருக்கு ஒரு ஓலைச்சுவடி கிடைக்கிறது. அதை தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஒருவரிடம் காண்பிக்க, அவர் அந்த வீட்டுக்கு வந்து ஆராய்ச்சியில் இறங்குகிறார். அவர் கையில் மேப் ஒன்று சிக்குகிறது. அதை வைத்துக் கொண்டு பயணித்தால் பெரும்புதையல் கிடைக்கும் என யூகிக்கிறார். புதையலை கண்டுபிடிக்க அவரும், வெளிநாட்டுப் பெண்ணும் புறப்படுகிறார்கள். அந்த பயணத்தில் அவர்களுக்கு கிடைக்கிற கஷ்ட, நஷ்ட அனுபவங்களே திரைக்கதை…

புதையல் இருக்கும் குகைக்குள் நான்கு சிறுவர்களும் ஒரு சிறுமியும் வந்து மாட்டிக்கொள்வது திரைக்கதையின் இன்னொரு டிராக்…

அதே காட்டுக்குள் சமூகவிரோதிகள் சிலர் சுற்றித்திரிய, காவல்துறை தனிப்படை அமைத்து அவர்களை வேட்டையாட களமிறங்குவது கதையோட்டத்தின் மற்றொரு டிராக்…

தேடிச் சென்றவர்களுக்கு புதையல் கிடைத்ததா இல்லையா என்பது கிளைமாக்ஸ்.

படத்தை தயாரித்து, இயக்கி, தொல்பொருள் ஆராய்ச்சியாளராக முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கிறார் ஜி.சி.

எல்லா உணர்வுகளுக்கும் ஒரேவித முகபாவம் காட்டினாலும், ராஜா தேசிங்கு ஆட்சிசெய்த செஞ்சிக் கோட்டையில் மிஞ்சியிருக்கும் இடங்களை, சிதிலமடைந்த கட்டடங்களை அங்கேயே சென்று காட்சிப்படுத்தியிருப்பதற்காக, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மலைப்பகுதிகளை சுற்றிக் காட்டும்படி கதையை கொண்டு சென்றிருப்பதற்காக, படம் பார்க்கும்போது அந்த இடங்களுக்கு நாமும் சென்றுவர வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியிருப்பதற்காக இயக்குநரை பாராட்டலாம்!

வெளிநாட்டுப் பெண்ணாக ரஷ்ய நடிகை கெசன்யா. அவர் திருதிருவென விழிப்பதே அந்த கதாபாத்திரத்துக்கு பொருத்தமாக, போதுமானதாக இருக்கிறது!

சமூக விரோதிகளின் தலைவனாக வருகிற யோகிராம் தவிர மற்ற நடிகர், நடிகைகள் அத்தனைப் பேரும் கிட்டத்தட்ட புதுமுகங்கள். அது அவர்களின் நடிப்பில் தெரிகிறது.

கிராமத்து குட்டிச் சுட்டிகளின் விஷமத்தால் ஊர்மக்கள் பாதிக்கப்படுவது, அதனால் பஞ்சாயத்து கூடுவது என கடந்தோடும் காட்சிகள் கொஞ்சமே கலகலப்பு. தங்கப் புதையலை பார்த்தபின் பரவசத்தில் அவர்கள் ‘இது தங்கம் தங்கம்’ என ஆடிப்பாடி மகிழ்வது அத்தனை அழகு!

எல்.வி. முத்து – கணேஷ் பின்னணி இசை காட்சிகளின் நகர்வுகளுக்கு கனம் சேர்க்கிறது. பசுமையான மலை, பரந்துவிரிந்த காடு, குன்று, குகை என பரபரப்பாக சுழன்றிருக்கிறது ஹரிஸ் ஷிண்டேவின் கேமரா!

கதை சற்றே கவனம் ஈர்த்தாலும், டாகுமென்ட்ரி போல் நீளும் காட்சிகள் படத்தின் பலவீனம்!

படத்தில் புதையலைத் தேடிப் போகிறவர்கள் அடிக்கடி ‘வ்வாவ்’, ‘வ்வாவ்’ என குரலெழுப்பி குஷியாகிறார்கள். திரைக்கதையில் சுவாரஸ்யம் கூட்டியிருந்தால் நாமும் ‘வ்வாவ்’ சொல்லி குதூகலமாகியிருக்கலாம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here