Home விமர்சனம் ஹைக்கூ சினிமா விமர்சனம்

ஹைக்கூ சினிமா விமர்சனம்

படித்ததும் பிடித்துப் போகும் சில சுவாரஸ்யமான கவிதைகளைப்போல், மென்மையான காதலும் அழுத்தமான உணர்வுகளும் சங்கமிக்கும் ‘ஹைக்கூ.’
நாயகன் மனோ கல்லூரிக் காலத்தில் சக மாணவியைக் காதலிக்கிறான். அந்த காதல் பிரேக்கப்பில் முடிகிறது.
ஒரு காதல் போனால் இன்னொரு காதல் வராமலா போகும்? வருகிறது. கூடவே சில பிரச்சனைகளும்.
பிரச்சனை என ஒன்று உருவானால் கண்டிப்பாக தீர்வு இருக்கும். அந்த தீர்வை நோக்கி பயணிக்கும் திரைக்கதையிலிருக்கும் அட்வைஸ் ஊர் உலகத்திலுள்ள ஒட்டு மொத்த காதலர்களுக்குமானது…
மனோவாக ஏகன். மாணவிகள் மட்டுமே படிக்கும் கல்லூரியில் ஒரேயொரு மாணவனாக சேர்கிற ஆரம்பக் காட்சி செம ரகளை. ஏகனுக்கு அமைவது யாருக்கும் கிடைக்காத லக்கி சான்ஸ். அப்படியொரு சூழலில் மாணவிகள் மத்தியில் மாட்டிக்கொண்டு ஆரம்பத்தில் என்ன செய்வது ஏது செய்வதென புரியாமல் தவிப்பது, போகப்போக மாணவிகளுடனான காமெடி கலாட்டாக்களில் கலந்து உற்சாகமாவது, சக மாணவி மீது காதலாகி ஜாலியாய் பொழுதைக் கழிப்பது, காதல் உணர்வுகளை வெளிப்படுத்துவது, முந்தைய காதல் நினைவுகளை மறக்க முடியாமல் அடுத்த காதலில் சிக்கலை உருவாக்கிக் கொண்டு திணறுவது என நடிப்பில் வெரைட்டி காட்ட ஏராளமான வாய்ப்பு. கைகொடுத்திருக்கிறது எளிமையான நடிப்பு.
கல்லூரிப் பருவத்துக்கேற்ற நாயகியாக தமிழுக்கு புதுவரவு தெலுங்குதேச ஸ்ரீதேவி அப்பல்லா. இரண்டாம் நாயகியாக ‘மின்னல் முரளி’ பெமினா ஜார்ஜ். இரண்டு பேருக்குமே ஹீரோவை காதலிப்பது, கருத்து வேறுபாட்டால் பிரிவது என வழக்கமான ஹீரோயின்கள் செய்கிற டெம்ப்ளேட் வேலை. அதை எந்தளவு முடியுமோ அந்தளவு உணர்வுபூர்வமாக செய்திருக்கிறார்கள்.
 
‘அதிர்ச்சி’ அருண், சுப்ரமணியன் சேது, ஸ்ரீதேஜ் எஸ்கே என இன்னபிறருக்கு கதையோட்டத்துக்கு அவசியமான கேரக்டர்கள். ஒரு பாடலில் இல்லையில்லை அரை பாடலில் சற்றே கவர்ச்சியாக எட்டிப் பார்க்கிறார் பிரிகிடா.
முதல் பாதி கல்லூரியும் காமெடி கலாட்டாக்களும். இரண்டாம் பாதியில் பிரேக் அப், பிரிவின் வலி. அதற்கேற்ப பின்னணி இசையைத் தந்திருக்கிறார் சித்து குமார். ‘எப்ப யேசப்பா’ பாடல் துள்ளலிசையில் அந்தோணிதாசன் குரலில் வைஃப் மூடுக்கு கொண்டு போகிறது. ‘கருவிழி’ பாடலை இதமான இசையில் கேட்க, அழகிய காட்சியாய் பார்க்க முடிகிறது.
காட்சிகளின் தேவைக்கேற்ப லைட்டிங் பிரேம் என பார்த்துப் பார்த்து உழைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பிரியேஷ் குருசாமி.
‘அடிச்சிக்கிறதுக்கு பேர் லவ் இல்ல; வயலன்ஸ்’ என்பது போல் வந்து விழுகிற, ஜோ பட இயக்குநர் ஹரிஹரன் ராமின் பங்களிப்போடு யுவராஜ் சின்னசாமி எழுதியிருக்கும் வசனங்களில் உயிரோட்டமும் கருத்துக்களும் அதிகம்.
‘காதலிப்பவர்களுக்கிடையில் இருக்க வேண்டியது காதல். இருக்கக் கூடாதது டாக்ஸிக் அணுகுமுறை.’
இந்த எல்லோரும் ஏற்க வேண்டிய கருத்தை பாடமாக நடத்தாமல் ஃபீல்குட் உணர்வு தரும் விதமாக எடுத்துச் சொல்லியிருக்கும் ஹைக்கூ, குவிக்கப் போகிறது ஜென்ஸி’க்களின் லைக்கு!
-சு.கணேஷ்குமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்