அனுமிதா – அனுஷிதா ட்வின்ஸ்; அதாவது ‘இரட்டையர்.’ அந்த ட்வின்ஸ் சிறுமிகள் அப்பா அம்மாவோடு காரில் பயணிக்கிறார்கள். விபத்து ஏற்படுகிறது. அப்பா இறந்து போகிறார். அம்மாவுக்கு முகத்தில் பலத்த காயம். பிளாஸ்டிக் சர்சரி மூலம் பழைய முகத்தை மீட்டெடுக்கிறார்கள்.
அந்த சர்ஜரிக்கு பிறகு வீட்டுக்கு வந்த அம்மா மகள்களிடம் நடந்து கொள்ளும் விதம் வித்தியாசமாக இருக்கிறது; மகள்களில் ஒருவருக்கு மட்டும் சாப்பாடு போடுகிறார்; அவர்கள் செய்யும் சிறிய தவறுகளைக் கூட மன்னிக்காமல் அடிக்கிறார். அந்த சிறுமிகள் அம்மாவைக் கண்டாலே பயப்படுகிறார்கள். ஒரு குரலும் மாறியிருக்கிறது. அப்படியே ஒருசில நாட்கள் கடந்துபோக, சிறுமிகளுக்கு ‘இது நம் அம்மாவாக இருக்க வாய்ப்பில்லை; அம்மாவைப் போல் இருக்கிற வேறு யாரோ ஒருவர் நம்முடன் இருக்கிறார்’ என்கிற சந்தேகம் வருகிறது.
அந்த சிறுமிகளுக்கு மட்டுமல்ல; படம் பார்க்கும் நமக்கும் ‘விபத்தை பயன்படுத்தி ஏதோ ஆள் மாறாட்டம் நடந்திருக்கலாம்’ என்ற சந்தேகம் தொற்றுகிறது. சிறுமிகள் அந்த புதிய அம்மாவின் கோபத்துக்கு ஆளாகி, அடிபட்டு கண்ணீர் சிந்துவதைப் பார்க்க பாவமாக இருக்கிறது.
இப்படி அடியன்ஸை பரபரப்புக்கு கொண்டு வருகிற கதையில், உண்மையில் என்ன நடந்தது? என்பது மீதிக் கதை…
நாடோடிகள் அபிநயா. படத்தின் ஒரு பாதிவரை, சர்ஜரிக்கு பிறகு போடப்பட்ட கட்டு மறைத்திருக்க கண்கள் மட்டும் வெளியே தெரியும்படி வருகிறார்; முகபாவங்களை பார்க்க முடியாவிட்டாலும் செயல்பாடுகளில் உணர்வுகளைக் கடத்துகிறார். மறுபாதியில் பதற்றம், குழப்பம், பிள்ளைகள் மீது பாசம் என எல்லாவற்றையும் பிரதிபலிக்க வாய்ப்பிருக்கிறது. அதை சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார்.
‘இரட்டையர்’களாக வருகிற சிறுமிகள் மனதைச் சூழ்ந்திருக்கிற குழப்பங்களை, அம்மாவிடம் அடிவாங்கும் வேதனைகளை வெளிப்படுத்தும் உடல்மொழி பொருத்தமாக இருக்கிறது. சந்தேகத்தை தீர்த்துக் கொள்வதற்காக, அம்மாவை தண்டிப்பதற்காக எடுத்துக் கொள்ளும் சீரியஸான முயற்சிகளில் சுறுசுறுப்பின் சதவிகிதம் எகிறியிருக்கிறது.
இயக்குநர் சுப்ரமணிய சிவா இரட்டையர்களின் உறவினராக, நல்லவரா வில்லனா என குழப்பியடிக்கும் கேரக்டரில் வருகிறார். எளிமையான நடிப்பில் இருவேறு பரிமாணங்களைக் காட்டியிருக்கிறார்.
சில வருடங்கள் முன் காலமான வெங்கட் சுபாவை இந்த படத்தில் டாக்டராக பார்க்க முடிகிறது. அதன் மூலம் படம் எடுக்கப்பட்டு எத்தனை வருடங்கள் ஆகியிருக்கும் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. ஆரம்பக் காட்சியில் பணத்துக்காக பிணத்தைக் கூட பிழைக்க வைப்பார் என்கிற அளவுக்கு நடந்து கொண்டு, கிளைமாக்ஸில் உண்மைகளை உடைக்கும் கடமையை செய்திருப்பது நேர்த்தி.
ஜி கே வி’யின் பின்னணி இசை திரைக்கதையின் திக்திக் பயணத்துக்கு உயிரூட்டியிருக்கிறது. ஒளிப்பதிவு பட்ஜெட்டில் அடங்கியிருந்தாலும் சம்பவங்கள் நடக்கும் மலைப் பிரதேசங்களின் அழகை தன்மை குறையாமல் திரைக்குள் கொண்டு வந்துள்ளது.
குறைந்த பொருட்செலவில், எளிய நடிகர் நடிகைகளை வைத்துக் கொண்டு ஒரு வீடு, அதற்குள் மர்மமான சில சம்பவங்கள், நடந்து கொண்டிருப்பது மெடிக்கல் கிரைம் என்பது போன்ற திரில்லர் திரைக்கதைப் பின்னல் என அசத்தியிருக்கும் இயக்குநர் ஜெகதீஷ் தம்பையா, தனக்கு பெரிய பட்ஜெட்டும் பிரபல நடிகர் நடிகைகளும் கிடைக்கிற பட்சத்தில் விறுவிறுப்பான கதைகளை இயக்கி வரவேற்பைக் குவிப்பார் என்ற நம்பிக்கை தருகிறார்.
-சு.கணேஷ்குமார்
