Home பொது இருமுடி கட்டு சினிமா விமர்சனம்

இருமுடி கட்டு சினிமா விமர்சனம்

பக்திப் படம், கிரைம் திரில்லர், ஆக்சன் திரில்லர் என எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். அப்படியான கதை, திரைக்கதையில் ‘இருமுடி கட்டு.’

ஹீரோ திரிநாத் தீவிரமான ஐயப்ப பக்தர். மாலை போட்டு விரதமிருக்கும் நாட்கள் தவிர மற்ற நாட்களில் எந்த நேரமும் குடிபோதையிலேயே இருக்கிறார். தன்னுடைய மகள் மீது அளவில்லாத பாசம் வைத்திருப்பவர், மகளை பக்கத்தில் வைத்துக் கொண்டே குடிக்கிறார். தன் மகளை மட்டுமல்லாது மற்ற பெண் பிள்ளைகளையும் தன் மகளாகவே நினைக்கிறார்.

அந்த ஊரில் யாராவது பெண்களிடம் தவறாக நடந்து கொண்டால், தவறாக நடந்து கொள்ள நினைத்தால் அவர்களை அடித்து துவைத்து துவம்சம் செய்கிறார். ஊரில் அப்படியொரு டெரரான மனிதர் இருந்தும்கூட, தொடர்ந்து இளம் பெண்கள் மர்மமான முறையில் மரணமடைகிறார்கள்.

இப்படியான கதைகளில் ஹீரோ என்ன செய்வார்? நடக்கும் மரணங்களின் பின்னணியில் உள்ளவர்களைக் கண்டுபிடித்து தண்டிப்பார். இந்த கதையில் நடப்பதும் அதே வழக்கமான சம்பவங்கள்தான்… இயக்கம் சிவா நிர்வானா

திரிநாத்தாக ரவி தேஜா. அதிரடி ஆக்சனில் புகுந்து விளையாடக்கூடியவர். ஐயப்ப பக்தர் என்பதால் ஆக்ரோஷத்தின் சதவிகிதத்தை கொஞ்சம் குறைத்துக் கொண்டு களமாடியிருக்கிறார். மகள் மீதான பாசத்தில் உருக வைக்கிறார்.

கணவனின் நிறை குறைகளைப் பொறுத்துக் கொண்டு வாழ்க்கை நடத்துகிற மனைவியாக பிரியா பவானி சங்கரின் நடிப்பு நேர்த்தி.

மகளாக வருகிற சிறுமி நட்சத்ராவுக்கு, எங்கு தவறு நடந்தாலும் அதை அப்பாவிடம் மறைக்காமல் சொல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிற கதாபாத்திரம். அந்த உறுதியை தன்னை ஒருவர் கொலை செய்யப்போகும் நேரத்திலும் துணிச்சல் குறையாமல் கடைப்பிடிப்பது கேரக்டரின் தனித்துவம். துடிப்பான நடிப்புக்காக பாராட்டலாம்.

ஸ்வாசிகா தனக்கு கொடூரமான வில்லியாக நடிக்க வரும் என்பதை நிரூபித்திருக்கிறார்.

பெண்களிடம் தவறாக நடந்து கொள்வதில் குஷியாகிற இளைஞர்கள், பள்ளிக்கூட மாணவிகளை தன் காமப்பசிக்கு பலியாக்குகிற எம் எல் ஏ’வாக ரமேஷ் இந்திரா உள்ளிட்டோர் வில்லத்தனத்தில் வீரியம் காட்டியிருக்கிறார்கள்.

சாய் குமார் ஐயப்ப குருசாமியாக வருகிறார். கிளைமாக்ஸில் அதிர்ச்சி தருகிறார்.

ஜி வி பிரகாஷ் இசையில் ஐயப்ப பக்திப் பரவசப் பாடல்கள் சிலிர்ப்பூட்ட, கிரைம் திரில்லராகவும் ஆக்சன் அதகளமாகவும் வேகமெடுக்கும் காட்சிகளுக்கு பின்னணி இசை எனர்ஜி ஏற்றியிருக்கிறது.

மலைப் பகுதி, காடு, அருவி, அணைக்கட்டு என கதை நிகழ்விடங்கள் அழகாகவும் பிரமாண்டமாகவும் இருக்க அதன் தன்மை மாறாமல் பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் விஷ்ணு சர்மா.

ஹீரோ மட்டுமல்ல; கதை நடக்கும் ஊரில் பலரும் ஐயப்ப சாமி பக்தர்களாக இருக்கிறார்கள். குருசாமியாக இருப்பவர் மீது மக்கள் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார்கள். அந்த ஊரில் அநியாய அக்கிரமங்களுக்கு பஞ்சமில்லை. ஒரு கட்டத்தில் குருசாமியே கொலைகாரராகிறார். ஹீரோவின் மகளும் கொலை செய்யப்படுகிறாள். ஐயப்பன் எதையும் தடுக்கவில்லை.

கடவுள் நம்பிக்கை சார்ந்த இந்த படத்தின் திரைக்கதை கடவுளை நம்பினால் நல்லது நடக்காது என்ற நம்பிக்கையை உருவாக்குவது போலிருக்கிறது. ஊரில் அடிதடி, வெட்டுக்குத்து, பாலியல் வன்முறை, மர்ம மரணம், கொலை என எது நடந்தாலும் காவல்துறை, நீதித்துறை, மீடியா என எதுவும் எட்டிக்கூட பார்ப்பதில்லை. அப்படியொரு வினோதமான உலகத்தைக் காண விரும்புகிறவர்கள் இருமுடி கட்டுக்கு செலவழிக்கலாம் துட்டு.

-சு.கணேஷ்குமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்