ஜி வி பிரகாஷ் நடித்து, வரும் செப்டம்பர் 4-ம் தேதி வெளியாகவிருக்கும் ‘இம்மார்டல்’ படத்தின் பிரமாண்ட முன் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

நிகழ்வில் ஜி.வி. பிரகாஷ் பேசியதாவது..,
“இது மிகவும் வித்தியாசமான படம். இந்திய சினிமாவிற்கு புதிதான வாம்பயர் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படம், ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்கும். சுமார் ஒரு வருடம் உழைத்து சிஜி மற்றும் மான்ஸ்டர் காட்சிகளை உருவாக்கியுள்ளோம். இது ஒரு சர்வைவல் திரில்லராகவும் இருக்கும். சுமார் நான்காயிரம் ஆண்டுகள் வாழும் ஒரு கதாபாத்திரத்தைச் சுற்றியும் கதை நகர்கிறது. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரன் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தப் படத்தை மிகுந்த அர்ப்பணிப்புடன் கொண்டு சென்றுள்ளார். புதிய தயாரிப்பாளர் மற்றும் புதிய இயக்குநர் இணைந்து பெரிய கனவுடன் உருவாக்கியுள்ள இந்தப் படத்திற்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும். இயக்குநர் மாரியப்பன் சின்னா கூறிய கதை ஹாலிவுட் தரத்தில் இருந்ததால் எனக்கு மிகவும் உற்சாகமாக இருந்தது. இது எந்தப் படத்தின் காப்பியும் இல்லை; முற்றிலும் புதிய அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும் முயற்சி.
கயாது லோஹர் இந்தப் படத்தில் தனது சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார். அவரது ரசிகர்கள் நிச்சயம் இந்தப் படத்தை ரசிப்பார்கள். மற்ற நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். குறிப்பாக கார்த்தி அவர்களின் கதாபாத்திரம் திரையரங்கில் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும்.
ஒளிப்பதிவாளர் அருண் ராதாகிருஷ்ணனுக்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது. சாம் சி.எஸ். இந்தப் படத்தின் பின்னணி இசைக்காக மிகுந்த உழைப்பை வழங்கியுள்ளார். அவருடைய பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கும்.
‘இம்மார்டல்’ படத்தை குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் திரையரங்கில் சென்று பார்க்கலாம். டிரெய்லருக்கு கிடைத்துள்ள வரவேற்பைப் போலவே படத்திற்கும் ரசிகர்கள் ஆதரவு அளிக்க வேண்டும். மேலும், புதிய இயக்குநர்கள் மற்றும் புதிய தயாரிப்பாளர்களுடன் பணியாற்றுவதில் எனக்கு எப்போதும் மகிழ்ச்சி. நான் நடித்த பல படங்களில் அறிமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த வகையில், மாரியப்பன் சின்னா மற்றும் தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரனுக்கும் ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும்,” என்றார்.
இயக்குநர் மாரியப்பன் சின்னா பேசியதாவது..,
“இந்தக் கதையை உருவாக்கியதில் இருந்து படமாக்குவது வரை ஏராளமான சவால்களை சந்தித்தோம். இது வழக்கமான திரைப்படம் அல்ல என்பதால், ஒவ்வொரு காட்சியையும் புதிதாக யோசித்து உருவாக்க வேண்டியிருந்தது. இந்தப் படத்தின் மீது நம்பிக்கை வைத்து, எனக்கு முழு சுதந்திரத்தையும் ஆதரவையும் வழங்கிய தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரனுக்கு முதலில் நன்றி. ஜி.வி. பிரகாஷ் சார் கதையைக் கேட்டதும் நம்பிக்கை வைத்து இந்தப் படத்தில் இணைந்தார். ஒளிப்பதிவாளர் அருண் ராதாகிருஷ்ணன் ஒவ்வொரு காட்சியையும் மேலும் சிறப்பாக உருவாக்குவதற்காக அதிகம் யோசித்து உழைத்தார். எடிட்டர் சான் லோகேஷ், பின்னர் இணைந்த ராஜேஷ் ஆகியோரும் படத்தின் உருவாக்கத்தில் முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளனர்.
கயாது லோஹர் இந்தக் கதாபாத்திரத்திற்காக மிகப்பெரிய முயற்சியை எடுத்துள்ளார். தமிழில் ஒரு வார்த்தைகூட தெரியாத நிலையிலும், ஒவ்வொரு வசனத்தையும் புரிந்துகொண்டு சரியாகப் பேசுவதற்காக கடுமையாக உழைத்தார். சவாலான படப்பிடிப்பு சூழல்களிலும் ஜி.வி. பிரகாஷ் உள்ளிட்ட நடிகர்கள் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றினர். குறிப்பாக ஆக்ஷன் மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகள் மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் படமாக்கப்பட்டன. இசையமைப்பாளர் சாம் சி.எஸ்., சவுண்ட் டிசைன் குழுவினர் மற்றும் அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும் இந்தப் படத்திற்கு தங்களின் சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளனர்.
‘இம்மார்டல்’ ஒரு புதிய அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும் படம். இதுவரை தமிழ் சினிமாவில் அதிகம் பார்க்காத வகையிலான விஷுவல் மற்றும் சவுண்ட் அனுபவத்தை உருவாக்க முயற்சித்துள்ளோம். திரையரங்கில் படத்தைப் பார்க்கும்போது, ஒவ்வொருவரின் உழைப்பும் ரசிகர்களுக்கு நிச்சயம் தெரியும்,” அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.
இசையமைப்பாளர் சாம் சி.எஸ். பேசியதாவது..,
இம்மார்டல் எனக்கு மிகவும் முக்கியமான படம், சில படங்கள் செய்யும்போது இது தனித்துவமாக இருக்குமென நமக்கு தெரியும் அந்த வகையில் இது எனக்கு மிகவும் பிடித்த படம்.
“இந்தப் படத்தின் தயாரிப்பாளர் அருண்குமார் மிகவும் எனர்ஜியான மற்றும் பாசிட்டிவான மனிதர். ஒரு படத்தை சிறப்பாக உருவாக்க வேண்டும் என்ற அவரது ஆர்வமும், படக்குழுவினர் மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கையும்தான் இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம். அவர் செய்யும் உதவிகளைக்கூட வெளியே சொல்லிக்கொள்ள விரும்பாத நல்ல மனிதர். ஜி.வி. பிரகாஷ் எனக்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளர்களில் ஒருவர். இசையமைப்பாளராக மட்டுமல்லாமல், நடிகராகவும் இந்தப் படத்தில் அவர் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார். குறிப்பாக படத்தின் இரண்டாம் பாதியில் அவரது நடிப்புக்கு அதிக முக்கியத்துவமும், ஸ்கோப்பும் உள்ளது. அவர் அதை மிகவும் அழகாக செய்திருக்கிறார்.
இயக்குநர் மாரியப்பன் சின்னாவும் இந்தப் படத்திற்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளார். ஒவ்வொரு இயக்குநருடனும் பணியாற்றும் அனுபவம் வித்தியாசமானது. அந்த வகையில், இந்தப் படத்தின் ஒட்டுமொத்த குழுவும் ஒரே நோக்கத்துடன் இணைந்து உழைத்திருப்பது திரையில் நிச்சயம் தெரியும். என்னுடன் இந்தப்படத்தில் உழைத்த அனைத்து குழுவினருக்கும் நன்றி. கண்டிப்பாக இப்படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் அனைவரும் படம் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.


