மீண்டுவர முடியாத கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்! -‘இன் கார்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகை ரித்திகா சிங்

தேசிய விருது பெற்ற பெருமைக்குரிய நடிகை ரித்திகா சிங் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து, இந்தி மொழியில் உருவாகியுள்ள படம் ‘இன் கார்.’

இந்த படத்தில் ரித்திகா சிங்குடன் சந்தீப் கோயத், மனிஷ் ஜான்ஜோலியா, ஞான பிரகாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

கடத்தப்பட்டு பாலியல் வன்முறைக்கு ஆளாகும் பெண்ணின் வலியை, அவளது பார்வையில் அந்த கடத்தல் சம்பவத்தின் வழியாகவே சொல்லும் விதத்தில் இந்த படத்தை இயக்கியிருக்கிறார் ஹர்ஷ் வர்தன்.

இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வரும் மார்ச் 3-ம் தேதி வெளியாகவிருப்பதையொட்டி சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது.

நிகழ்வில் ரித்திகா சிங் பேசும்போது, ” ‘இன் கார்’ படம் எனக்கு மிகப்பெரும் சவாலானதாக இருந்தது. ஒரு கடத்தலுக்கு உள்ளாகும் பெண் எத்தனை மனச்சிதைவுக்கு உள்ளாகிறாள், அவள் துன்பத்தின் எந்த எல்லை வரை செல்லுகிறாள், என்பதை நுணுக்கமாக இந்தப்படம் சொல்லும். இந்த படத்தில் நடித்து முடித்த பிறகும் என்னால் அந்த கதாபாத்திரத்தில் இருந்து வர முடியவில்லை. எனக்குள் பெரும் பாதிப்பை இந்த படம் ஏற்படுத்தியது” என்றார்.

இயக்குநர் ஹர்ஷ் வர்தன் பேசும்போது, ”இந்த படம் என் வாழ்வில், என் உறவினர் ஒருவருக்கு நடந்த சம்பவத்தின் பாதிப்பால் உருவாக்கப்பட்டது. பெண்கள் மீதான வன்முறை ஒவ்வொரு நாளும், இந்தியா முழுக்க நடந்துகொண்டே இருக்கிறது. வெளிநாட்டிலிருந்து இந்தியா வரும் சுற்றுலாப் பயணிகள் பலர், பல துன்பமான நிகழ்வுகளைச் சந்திக்கின்றனர்.

என்னுடைய வெளிநாட்டு நண்பர்கள் பலரும் இது பற்றி என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். நாமே செய்திகளில் தினமும் இது போன்ற விஷயங்களைக் கடந்து போகிறோம்.

இது ஏன் நடக்கிறது? இதை செய்பவர்கள் மிக இயல்பான வாழ்க்கை வாழும் மனிதர்கள், அவர்களுக்கு குடும்பம் இருக்கிறது, நம்மைப்போல் தான் அவர்களும். எது அவர்களை இது போன்ற குற்றங்களைச் செய்ய வைக்கிறது. கடத்தப்பட்டு வன்புணர்வுக்கு ஆளாக்கப்படும் பெண் என்னென்ன சித்ரவதைக்கு ஆளாகிறாள், அந்த நொடி எத்தனை மன ரீதியான பிரச்சனைகளைத் தரும், இதையெல்லாம் சொல்ல நினைத்து உருவானதே இந்த படம்.

இது அனைவருக்கும் போய்ச்சேர வேண்டும் என்ற நோக்கில்தான் அனைத்து மொழிகளிலும் வெளியிடுகிறோம். உங்கள் ஆதரவைத் தாருங்கள்” என்றார்.

படக்குழு:
தயாரிப்பு நிறுவனம் : Inbox Pictures
தயாரிப்பு : அஞ்சும் குரேஷி, சாஜித் குரேஷி
எழுத்து இயக்கம் : ஹர்ஷ் வர்தன்
ஒளிப்பதிவு : மிதுன் கங்கோபாத்யாய்
எடிட்டர்: மாணிக் திவார்
சண்டைப்பயிற்சி : சுனில் ரோட்ரிக்ஸ்
மக்கள் தொடர்பு : சதீஷ்குமார் (AIM )

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here