‘போலீஸ் அதிகாரிங்க பணம் பதவிக்காக என்ன வேணாலும் செய்வாங்க’, ‘காவல்துறை அதிகார ஆளுமைகளுக்கு மண்டிபோட்டு குண்டி கழுவுற ஏவல்துறை’, ‘போலீஸ்னாலே கேடுகெட்டவனுங்கதான்’… இப்படி பலரது மனதிலிருக்கும் எண்ணத்தை பிரதிபலிக்கும் விதமாக ஏராளமான திரைப்படங்கள் வந்தாயிற்று. ‘டிட்வா’ காலகட்டத்தில் மற்றுமொன்று.
ஒரு லாக்கப் டெத்தும் அதில் ‘லாக்’காகிற சாமானியனும் என வேகமெடுக்கிற ‘ஐ பி எல்.’
போலீஸ் உயரதிகாரி ஒருவர் தான் லஞ்சம் வாங்குவதை வீடியோ எடுத்ததாக நினைத்து ஒரு இளைஞனைப் பிடித்து லாக்கப்பில் அடைத்து அடித்து துவைக்க, அவனிடம் முதலமைச்சர் சம்பந்தப்பட்ட வில்லங்கமான வீடியோ இருப்பது தெரியவருகிறது. அடித்த அடியில் அவன் இறந்துபோக, முதலமைச்சருக்கு அந்த கொலைப் பழியிலிருந்து அதிகாரியைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயம். அதற்காக அப்பாவி கால் டாக்ஸி டிரைவர் ஒருவர் சிக்க வைக்கப்படுகிறார். யார் யாரோ செய்த குற்றங்களுக்காக ஒரு தவறும் செய்யாத அவர் போலீஸாரால் சித்தரவதை செய்யப்படுகிறார். அவரை, கொலை வெறிபிடித்த காவல்துறையிடமிருந்து மீட்க களமிறங்குகிறார் சம்பந்தப்பட்ட டிரைவரின் மகளைக் காதலிப்பவர். அவர் என்னவெல்லாம் செய்கிறார் என்பது கதையோட்டமாக இருக்க, மீட்க முடிந்ததா இல்லையா என்பது கிளைமாக்ஸ்… இயக்கம் கருணாநிதி
ஒரு சம்பந்தமும் இல்லாமல் போலீஸில் சிக்கி கொலைவெறித் தாக்குதலுக்கு ஆளாகி ரத்தம் சொட்டச் சொட்ட துடிக்கும்போது கலங்க வைக்கிறார் கால் டாக்ஸி டிரைவராக வருகிற கிஷோர். மற்ற தருணங்களிலும் அவரது நடிப்பு வழக்கம்போல் தரம்.
ஆரம்பக் காட்சிகளில் ‘ஹாய் டார்லிங்’, ‘எப்படியிருக்க’, ‘சாப்டியா’, ‘பார்க்ல மீட் பண்ணலாமா?’, ‘தியேட்டருக்கு போலாமா?’ ரக ஜாலியான காதலனாகத்தான் தெரிகிறார் டிடிஎஃப் வாசன். கொஞ்சம் கொஞ்சம் அப்படியும் நடந்துகொள்கிறார். தான் காதலிக்கும் பெண்ணின் அப்பா போலீஸின் பிடியில் சிக்கியபின் அவரிடம் வேகமும் விவேகமும் எட்டிப் பார்க்கிறது. யாரைப் பார்த்தால் காரியம் நடக்கும் என யோசித்துச் செயல்படுத்துவது, தன்னைக் கொன்று தீர்க்கும் நோக்கத்துடன் சுற்றி வளைப்பவர்களை போட்டுப்பொளக்க அதிரடி ஆக்சனில் இறங்குவது என தெறிக்கவிடுகிறார். நிஜ வாழ்க்கையில் பைக் ரேஸில் ஹீரோயிஸம் காட்டுபவர் சினிமாவிலும் அதை சில நிமிடங்கள் பரபரப்பாக செய்திருக்கிறார்.
நாயகி குஷிதாவுக்கு வாசனை குஷி மூடில் காதலிப்பதற்கான சந்தர்ப்பம் குறைவாகவும், அப்பாவின் நிலைமையால் பரிதவித்து நிற்பதற்கான சூழ்நிலை அதிகமாகவும் இருக்கிறது. அவரது இயல்பான நடிப்பு இரண்டுக்கும் பொருத்தமாக இருக்கிறது.
காவல்துறையின் கொடூரமான முகத்தைக் காட்டியிருக்கிறது போஸ் வெங்கட், ஹரிஷ் பேரடி கூட்டணியின் நடிப்பு. ஜான் விஜய்யின் நடிப்பிலும் அது தெரிகிறது. போலீஸிலும் நல்லவர்கள் உண்டு என்பதற்கு உதாரணமாக வந்து போகிறார் திலீபன். முதலமைச்சராக வருகிற ஆடுகளம் நரேன் வில்லத்தனத்தை நல்லபடியாக செய்திருக்கிறார்.
அஸ்வின் விநாயகமூர்த்தியின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் ஓகே ரகம். பைக்குகள் சீறிப் பாய்ந்து தாக்குதல் நடத்துகிற காட்சிகளில் பிச்சுமணியின் ஒளிப்பதிவு அசத்துகிறது.
‘காவல்துறை ஒருவரை குற்றவாளியாக்க தீர்மானித்து விட்டால் எந்த எல்லைக்கு போகும்’ என்பதை விறுவிறுப்பான திரைமொழியில் சொன்னதைத் தவிர படத்தின் சிறப்பம்சம் என எதுவும் தென்படவில்லை.
ஐ பி எல் – எல் போர்டு மாட்டிய வாகனம்!
-சு.கணேஷ்குமார்

