‘கண்டதை படிக்காதே’ சினிமா விமர்சனம்

ஒரு கதையைப் படிப்பவர் படித்துக் கொண்டிருக்கும்போதே மனக் குழப்பத்துக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்வதாக, அல்லது கதையை படிப்பவர் வேறு யாரையாவது கொலை செய்வதாக கற்பனை செய்து பாருங்கள். மனதுக்குள் லேசாக திகில் பரவுகிறதுதானே?

அப்படியொரு கதையை கையிலெடுத்துக் கொண்டு, திருப்பங்கள் நிறைந்த திரைக்கதை அமைத்து உருவாகியுள்ள படம் இது.

இந்த ‘சூப்பர் நேச்சுரல் ஹாரர் திரில்லர்‘ ரிலீஸுக்கு முன்பே பல்வேறு விருதுகளை பெற்றிருப்பது கூடுதல் செய்தி.

பரபரப்பான நகரத்தில் ஆங்காங்கே மர்மமான முறையில் சிலர் இறந்துபோக அதற்கு காரணம் அவர்கள் குறிப்பிட்ட ஒரு கதையை படித்ததுதான் என தெரிந்து கொள்கிறார் அந்த காவல்துறை அதிகாரி. அடுத்தடுத்து மரணங்கள் நடக்காமலிருக்க கதையை எழுதியவர் யார்? கதையை படிப்பவர்கள் மரணமடைவது ஏன்? என்பதையெல்லாம் கண்டுபிடிப்பது அவசியமாகிறது. சரசரவென விசாரணையில் இறங்குகிறார்.

கதையை எழுதியவர் காணாமல் போனது, அதன் பின்னணியில் சாமியார் ஒருவர் இருப்பது என சிலபல தகவல்கள் தெரியவருகிறது. ஒரு கட்டத்தில் அந்த சாமியாரிடம் காவல்துறை அதிகாரியே சிக்குகிறார். அதன்பிறகு என்னவானது என்பது என்பதே மிச்ச மீதி கதை.

படத்தின் ஆரம்பத்திலேயே ஒரு பெண் கதையைப் படித்து, கண்ணாடியால் கழுத்தை அறுத்துக் கொண்டு மரணமடைய அப்போதே அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு தொற்றிக் கொள்கிறது.

அந்த எதிர்பார்ப்பை அடுத்தடுத்து நடக்கும் மரணங்களும் அதற்கான பின்னணியை அலசி ஆராய்வதுமாய் நகரும் காட்சிகளால் பூர்த்தி செய்திருக்கிறார் இயக்குநர் ஜோதிமுருகன்.

படத்தின் கதாபாத்திரங்களை ஏற்றிருப்பவர்களில் பலரும் புதுமுகங்கள், வளர்ந்து வரும் நடிகர்கள்… தேர்ந்த நடிகர் ஆரியன் சாமியாராக வந்து வசனத்தை மெல்லிய குரலில் பேசி, பார்வையில் அனல் வீசி அமைதியாக மிரட்டுகிறார்.

இன்ஸ்பெக்டராக வருபவரின் வாலிபம் ததும்பும் வசீகரத் தோற்றமும் தேவைக்கேற்ப பரபரப்பு காட்டுவதும், படபடப்பு கூடுவதுமாய் வெளிப்படும் நடிப்பும் கவர்கிறது.

கொஞ்ச நேரமே வந்தாலும் கொஞ்சும் நேரத்தில் அழகாக இருக்கிறது அந்த இளம்ஜோடி.

படத்தின் திருப்புமுனை பாத்திரத்தில் எழுத்தாளராக நடித்திருப்பவர் இந்த படத்தின் தயாரிப்பாளர் சத்யநாராயணன்.

உணர்வுபூர்வமான பாடலாக ‘பெண் பூவே’, உணர்ச்சிபூர்வமான பாடலாக ‘வா ஜெயிக்கலாம்’… இரண்டிலும் திறமை காட்டியிருக்கிறார் இசையமைப்பாளர் செல்வா ஜானகிராஜ்.

கச்சிதமான எடிட்டிங், நேர்த்தியான ஒளிப்பதிவு படத்துக்கு பலம்.

சாகா வரத்துக்காக முயற்சிக்கிற நரபலி சாமியார், அவரால் பாதிக்கப்படுபவர்களின் அமானுஷ்ய அவதாரம் என கடந்தோடுகிற வழக்கமான பேய்ப்பட டெம்ப்ளேட் கதைதான் என்றாலும் கதையைப் படிப்பது மூலமாக மரணங்கள் என வேறொரு கோணத்தில் பயணிக்கும் சுவாரஸ்யமான திரைக்கதை திகில் அனுபவம் தருகிறது!

பேய்ப்படம் என்றாலே நொடிக்கு நொடி நாலாபக்கமிருந்தும் கோரமான பேய்கள் தோன்றி பல்லிளித்து பயங்காட்டுவது என்பதை தவிர்த்து அப்படியான காட்சிகளை அளவாக வைத்திருப்பது ஆறுதல்!

‘கண்டதை படிக்காதே’ மேக்கிங்கில் பிரமாண்டத்தை எதிர்பார்க்காமல், வித்தியாசமான பேய்ப் படங்களை விரும்புகிறவர்களின் மனதை கட்டிப் போடும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here