நடிகைகள் ஷிவதா, ரம்பா பாண்டியன் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் ‘கயிலன்’ திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
படக்குழுவினருடன் இயக்குநர்கள் கே பாக்யராஜ், கௌரவ் நாராயணன், தயாரிப்பாளர்கள் கே ராஜன், தனஞ்செயன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
நிகழ்வில் நடிகை ஷிவதா பேசுகையில், ”’நெடுஞ்சாலை’ படத்திலிருந்து ‘கயிலன்’ படம் வரை எனக்குத் தொடர்ந்து ஆதரவு அளித்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் நன்றி. வருடத்திற்கு ஒரு தமிழ் படத்தில் தான் பணியாற்றுகிறேன், இருந்தாலும் தொடர்ந்து நீங்கள் ஆதரவு அளித்துக் கொண்டிருக்கிறீர்கள். அந்த ஆதரவு இந்தப் படத்திற்கும் இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இந்தப் படம் வெளியான பிறகு மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்,” என்றார்.
நடிகர் பிரஜின் பேசுகையில், ”தற்போது சினிமாவில் நாம் நல்ல கன்டென்டுகளை கொடுத்தாலும் அதனை முறையாக விளம்பரப் படுத்துவதில் கோட்டை விடுகிறோம். சில படங்கள் மட்டும் தான் வேர்ட் ஆப் மௌத்தின் மூலம் வெற்றி பெறும். ‘கயிலன்’ நல்ல திரைப்படமாக உருவாகி இருக்கிறது.
இயக்குநர் அருள் அஜித் தொடர்ந்து படங்களை இயக்கினாலும் வளரும் நடிகர்களுக்கும் புதுமுக நடிகர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இந்தப் படத்தின் முன்னோட்டத்தில் சொன்னதைப் போல போராட வேண்டும். போராடினால் தான் வெற்றி கிடைக்கும் இது அனைவருக்கும் பொருந்தும். இப்படம் வெற்றி பெற வாழ்த்துங்கள்” என்றார்.
இயக்குநர் அருள் அஜித் பேசுகையில், ”உதவி இயக்குநர்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்றால் ஒரு தயாரிப்பாளர் தேவை. அந்த வகையில் என்னை நம்பி இந்தப் படத்தை இயக்குவதற்கான வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் பி.டி. அரசகுமாருக்கு என் வாழ்நாள் முழுவதும் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன்.
படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நாள் முதல் இறுதி வரை படப்பிடிப்பு தளத்திற்கு அவர் வரவே இல்லை. ஒரே ஒரு நாள் மட்டும் எங்களுடைய வற்புறுத்தலுக்காக வருகை தந்தார். எனக்கு அந்த அளவிற்கு முழு சுதந்திரம் அளித்தார். நானும், என்னுடைய குழுவினரும் இணைந்து பணியாற்றி படத்தை நிறைவு செய்து விட்டோம். தயாரிப்பாளருக்கு இன்னும் நான் திரையிட்டு காண்பிக்கவில்லை, விரைவில் காண்பிப்பேன். அப்படியொரு நம்பிக்கையை என் மீது தயாரிப்பாளர் வைத்திருக்கிறார். அவர் என் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றி இருக்கிறேன் என நம்புகிறேன்.
நான் என்றைக்குமே தயாரிப்பாளர்களின் இயக்குநராக தான் இருக்க வேண்டும் என விரும்புகிறேன். அவர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்து நமக்கு ஒரு வாய்ப்பை வழங்குகிறார்கள் அவர்கள் தரும் வாய்ப்பு நம் வாழ்க்கை. அதை நாம் சரியாக காப்பாற்ற வேண்டும். அப்போதுதான் ஏனைய தயாரிப்பாளர்களும் நம் மீது நம்பிக்கை வைத்து முதலீடு செய்வார்கள். இதன் பிறகு தான் நாம் நல்ல படங்களை வழங்க முடியும்.
‘கயிலன்’ என்பதற்கான பொருள் என்னவென்றால், தவறு செய்யாதவன், நிலையானவன். சாதிப்பவன். இது ஒரு சங்க காலச் சொல். ஜீரோ எரர்ஸ் என்றும், தி பெர்பஃக்ஷனிஸ்ட் என்றும் சொல்லலாம். இந்தச் சொல் இந்த கதைக்கு பொருத்தமாக இருக்கும் என்பதால் வைத்திருக்கிறோம். மேலும் இப்படத்தின் உச்சகட்ட காட்சியில் அனைவருக்கும் ஒரு சர்ப்ரைஸ் இருக்கிறது. அதற்கும் இந்தச் சொல் பொருத்தம் என்பதால் வைத்திருக்கிறோம்.
இந்தப் படத்தின் பணிகள் தொடங்கும் போது தயாரிப்பாளர் என்னிடம், ‘நீங்கள் ஒரு கமர்ஷியல் படத்தை வழங்க உள்ளீர்கள். அதில் எங்கேயும் வாய்ப்பு கிடைத்தால் நல்லதொரு மெசேஜை சொல்லுங்கள். சொல்ல முயற்சி செய்யுங்கள்’ என்றார். இந்தப் படத்தில் ஒரு மெசேஜ் இருக்கிறது. அதிலும் கிளைமாக்ஸில் ஒரு மெசேஜ் இருக்கிறது.
என்னுடைய பார்வையில் திரில்லர் திரைப்படங்களில் குறிப்பாக இன்வெஸ்டிகேட்டடிவ் திரில்லர் படங்களில் ஆணாதிக்கம் தான் அதிகம் இருக்கும். இதனால் நாங்கள் படத்தில் இரண்டு முதன்மையான கதாபாத்திரங்கள் இடம்பெற வேண்டும் என்றும், இரண்டும் பெண்களாக இருக்க வேண்டும் என்றும் தீர்மானித்தோம். அதற்காக நாங்கள் முதலில் தேர்வு செய்தது நடிகை ஷிவதாவை தான், அவர் நடிப்பில் வெளியான ‘அதே கண்கள்’, ‘நெடுஞ்சாலை’ போன்ற படங்களில் அவருடைய நடிப்பை பார்த்து வியந்து இருக்கிறேன். இவர்களைப் போல் திறமையான நடிகைகள் இருந்தால் இயக்குநரின் பணி எளிது.
நாங்கள் இப்படத்தின் பணிகளை விரைவாக நிறைவு செய்திருக்கிறோம் என்றால், அதற்கு ஷிவதாவின் பங்களிப்பு அதிகம். அற்புதமான மனிதநேயம் மிக்கவர். அவர் படப்பிடிப்பு தளத்தில் இருந்தால் அனைவரையும் அரவணைத்து செல்வார்.
இவரைத் தொடர்ந்து நடிகை ரம்யா பாண்டியன் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார். அவரும் திறமையான நடிகை தான்.
மேலும் இப்படத்தில் பேராசிரியர் ஞானசம்பந்தம் நிதி அமைச்சராக நடித்திருக்கிறார். மனோபாலா, கோபிநாத், அனுபமா குமார் என பலரும் நடித்திருக்கிறார்கள்.
இந்தப் படத்திற்கு 115 நபர்கள் பின்னணி பேசி இருக்கிறார்கள் அந்த அளவிற்கு இந்த படத்தில் கதாபாத்திரங்கள் இடம் பிடித்திருக்கின்றன. எனவே கஷ்டப்பட்டு இப்படத்தினை நிறைவு செய்து இருக்கிறோம். ஜூலை 25ம் தேதியன்று இப்படம் வெளியாகிறது. இந்தப் படத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்”என்றார்.
தயாரிப்பாளர் B.T. அரசகுமார், இசையமைப்பாளர் கார்த்திக் ஹர்ஷா, பின்னணி இசையமைப்பாளர் ஹரி, இயக்குநர் கௌரவ் நாராயணன், தயாரிப்பாளர் தனஞ்செயன், பேராசிரியர் முனைவர் கு. ஞானசம்பந்தம், தயாரிப்பாளர் கே. ராஜன் உள்ளிட்டோரும் நிகழ்வில் பேசினார்கள்.


