இது ஒரு போராளி பற்றிய கதை; ஆனால் அவனது போராட்டத்தை பற்றிய கதை அல்ல! -‘குமார சம்பவம்’ பட விழாவில் இயக்குநர் பாலாஜி வேணுகோபால்  

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொலைக்காட்சித் தொடர் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நடிகர் குமரன் தங்கராஜன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘குமார சம்பவம்.’

வரும் 12ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

நிகழ்வில் பேசிய நாயகன் குமரன் தங்கராஜன், ”இந்த மேடையில் வீற்றிருந்து பார்க்கும் போது மிகவும் உணர்வுபூர்வமாக இருக்கிறது. இந்தப் படத்தில் ‘சினிமா என் லட்சியம்’ என்றொரு டயலாக் வரும். உண்மையில் எனக்கு அது மிகப் பெரிய லட்சியம். கிட்டத்தட்ட 17 ஆண்டு கால இலட்சியம். சினிமாவில் ஹீரோ ஆகிவிட வேண்டும் என்று கனவு கண்டேன். அந்தக் கனவை நனவாக்கியது வீனஸ் இன்ஃபோடெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பாளரான கணேஷ் சார்.

என்னுடைய குடும்பத்தினருக்கு திரை உலக பின்னணி கிடையாது. அப்பா டீ கடையில் வேலை பார்த்தவர். அவர் நீ சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்று சொன்னார். அவருக்கும் அந்த ஆசை இருந்தது. எனக்கும் அந்த ஆசை இருந்தது. அவருடைய கனவை நான் நனவாக்க வேண்டும் என்று முயற்சி செய்தேன். எங்கெங்கோ தேடி அலைந்து கடைசியாக பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடிக்க தொடங்கினேன். அதன் பிறகு தான் எனக்கான அங்கீகாரம் கிடைக்கத் தொடங்கியது. தற்போது குமார சம்பவம் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறேன். இதற்கும் உங்களின் ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறேன்.

குமார சம்பவம் என் வாழ்க்கையில் மிக முக்கியமான சம்பவம். இது எனக்கு எமோஷனலாகவும் இருக்கிறது. திருப்தியாகவும் இருக்கிறது. இதற்காக தயாரிப்பாளர் கணேஷ் சாருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இயக்குநர் பாலாஜி வேணுகோபாலும் நானும் யூட்யூப் தொடங்கிய காலத்தில் இருந்து நாங்கள் இருவரும் நண்பர்கள். இன்று இருவரும் இணைந்து ஒரு படத்தை உருவாக்கி இருக்கிறோம். இது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த திரைப்படம் ஃபன் ஃபில்டு ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இந்த படம் கண்டிப்பாக பிடிக்கும். குடும்பத்தினருடன் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்க்கும் அளவிற்கு ஒரு தரமான படைப்பை வழங்கி இருக்கிறோம். நீங்களும் இதனை பார்த்து ஆதரவு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

இயக்குநர் பாலாஜி வேணுகோபால் பேசுகையில், ”இயக்குநராக அங்கீகாரம் பெற்று நேற்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறது. என்னுடைய இயக்கத்தில் உருவான முதல் படம் ‘லக்கி மேன்’. 2023ம் ஆண்டு செப்டம்பர் முதல் தேதி அன்று வெளியானது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ‘குமார சம்பவம் ‘ என்ற படத்தின் மூலம் ரசிகர்களை சந்திக்கிறேன்.

என்றைக்காவது நான் சோர்வடைந்திருக்கும் தருணத்தில் இணையத்தில் வெளியான ‘பானி பூரி’ மற்றும் திரையரங்குகளில் வெளியான ‘லக்கி மேன்’ படத்திற்காக ஊடகங்கள் முன்வைத்த விமர்சனங்களை ஒரு முறை பார்வையிடுவேன். அது எனக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும், உத்வேகத்தையும் அளிக்கும். இதற்காக இந்தத் தருணத்திலும் ஊடகத்தினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

குமார சம்பவம் படத்தைப் பற்றி நிறைய கேள்விகள் இருக்கிறது. குமரனுடைய வாழ்க்கை நடைபெற்ற சம்பவங்கள் தான் இந்த குமார சம்பவம். இது படம் பார்க்கும்போது பார்வையாளர்கள் அனைவருக்கும் புரியும்.

முதலில் தயாரிப்பாளர் கணேசுக்கு நன்றி. குமரன் மூலமாக தான் தயாரிப்பாளர் கணேஷ் அறிமுகமானார். கதையைக் கேட்ட பிறகு, உடனடியாக முடிவெடுத்து படத்தின் பணிகளை தொடங்கினார். இந்தத் தருணத்தில் என்னுடைய கிரிக்கெட் பயிற்சியாளர் சொன்ன ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது. கணேஷ் சார் இடதுகை பழக்கம் உள்ளவர். இந்த இடதுகை பழக்கம் உள்ளவர் முடிவுகளை வேகமாக எடுப்பவர்கள். அதேபோல் எடுத்த முடிவில் உறுதியாக இருப்பார்கள். அதனால் தான் இந்தப் படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது.
தயாரிப்பாளர் கணேஷ் படத்தில் பணியாற்றிய நடிகர்கள் நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவருக்கும் அவர்களுடைய திறமைக்கேற்ற ஊதியத்தை பேரம் பேசாமல் சரியான தருணத்தில் வழங்கி அனைவரையும் உற்சாகப்படுத்தினார். இதன் காரணமாகவே இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.

இசையமைப்பாளர் அச்சு ராஜாமணியுடன் பணியாற்றிய அனுபவம் அலாதியானது. ‘விடியாத இரவு ஒன்று..’ பாடலை உருவாக்கியதற்கும் ஒரு பின்னணி உண்டு. என்னுடைய தாத்தா பாட்டி காலத்தில் ‘மயக்கமா.. கலக்கமா..’ என்ற பாடல் பிரபலமானது. என்னுடைய தந்தை – தாய் காலகட்டத்தில் யாராவது சோர்வாக இருந்தால் ‘ஒவ்வொரு பூக்களுமே..’ என்ற பாடலை கேட்பார்கள். இப்போது இருக்கும் 2கே கிட்ஸ்கள் எப்போதாவது சோர்வை உணர்ந்தால் அந்த நேரத்தில் கேட்க வேண்டும் என்பதற்காகவே ‘விடியாத இரவு ஒன்று..’ என்ற பாடலை உருவாக்கினோம். இந்தப் பாடலைக் கேட்டு அவர்கள் உத்வேகம் பெற வேண்டும் என்பதற்காகவும் இதை உருவாக்கினோம். மேலும் இந்தப் பாடலை என்னுடைய ஞான தகப்பன் – ஞானகுரு கண்ணதாசனுக்கு சமர்ப்பணம் செய்வதற்காக எழுதியவை.

இந்தப் படத்தில் இடம்பெறும் ஆறு பாடல்களையும் பாரதியார், கண்ணதாசன், வாலி, வைரமுத்து, நா. முத்துக்குமார், அசல் கோளாறு, பால் டப்பா ஆகியோர்களுக்கு சமர்ப்பணம் செய்வதற்காக எழுதினேன். இந்தப் படத்தில் பாடல் எழுதுவதற்கான வாய்ப்பை எனக்கு நானே வழங்கிக் கொண்டேன். என்னுடைய கதைக்கான பாடல்களை நான் எழுத முடியும் என்று உறுதியாக நம்பினேன்.

இந்தப் படத்தில் இடம்பெறும் பாடல் மட்டுமல்ல அனைத்து எழுத்து வடிவங்களையும் நான் மட்டுமே உருவாக்கினேன். இது பேராசை தான். ஆனால் இதன் பின்னணியில் ரசிகர்களுக்கு தரமான பொழுதுபோக்கை வழங்க வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே இருந்தது. இந்தப் படத்தை பார்ப்பதற்கு குடும்பத்தினர் அனைவரும் தங்களுடைய குழந்தை குட்டிகளுடன் திரையரங்கத்திற்கு வரலாம். குடும்பத்துடன் பொழுதுபோக்கு அம்சம் உள்ள படமாக குமார சம்பவம் உருவாகி இருக்கிறது.

கே .பாக்யராஜின் இயக்கத்தில் வெளியான பல வெற்றி படங்களுக்கு நடிகர்கள் லிவிங்ஸ்டனும், ஜி.எம். குமாரும் அவரிடம் உதவியாளர்களாக இருக்கும்போது தங்களுடைய பங்களிப்பை வழங்கி இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் இருவரும் இணைந்து இதுவரை எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை. அதனை இந்த படத்தில் சாத்தியப்படுத்தி இருக்கிறேன். இதை நான் பெருமிதமாக கருதுகிறேன்.

இது ஒரு போராளி பற்றிய கதை. ஆனால் அவனது போராட்டத்தை பற்றிய கதை அல்ல. இது ஒரு ஃபிலிம் மேக்கரின் கதை. ஆனால் அவர் படம் எடுத்த கதை அல்ல.

குமரன் மிகப்பெரிய திறமைசாலி, அவனுக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது. குமரன் திரையுலகில் நன்றாக வளர வேண்டும் என்று எண்ணம் கொண்ட பலர் அவரை சூழ்ந்து இருக்கிறார்கள். இதன் காரணமாகவே அவர் திரையுலகில் சிறப்பான இடத்திற்கு உயர்வார். நான் குமரனின் நடனத்திற்கு ரசிகன். ஆனால் இந்தத் திரைப்படத்தில் அதற்கான வாய்ப்பு இல்லை. இதை அறிந்ததும் பெரிய மனதுடன் ஒப்புக்கொண்டு கதைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டார் குமரன். அவருடைய இந்த முயற்சி எனக்கு ஆச்சரியத்தை அளித்தது.

இந்த திரைப்படத்திற்கு கடவுளின் அனுகிரகம் இருக்கிறது என்பதனை நான் உணர்ந்தேன். நான் லக்கி மேன் படத்திற்காக முதலில் வைத்த பெயர் கந்தன் கருணை. ஆனால் அந்த டைட்டில் எனக்கு கிடைக்கவில்லை. நான் அடிப்படையில் ஒரு முருக பக்தன். ஒரு முறை பாம்பன் சுவாமிகள் ஆசிரமத்திற்கு சென்று முருகரை வணங்கிக் கொண்டிருந்தபோது உமது பெயரை என்னுடைய திரைப்படத்திற்கு வைக்க முடியவில்லை என வருந்தினேன். அதன் பிறகு முருகன் எனக்கு எப்படி வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறார் என்றால்.. நாயகன் பெயர் குமரன், படத்திற்கு டைட்டில் குமாரசம்பவம், குமரவேல், ஜி எம் குமார், பால சரவணன், நிகில் முருகன் என முருகரின் பெயரைக் கொண்டவர்கள் இப்படத்தில் இணைந்திருக்கிறார்கள். நான் இதற்கு மேல் முருகரி டம் கேட்க இயலாத நிலை உருவாகி இருக்கிறது. இதனால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

மேலும் இந்த திரைப்படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர், கலை இயக்குநர், படத்தொகுப்பாளர், தயாரிப்பு நிர்வாகிகள், நடிகர்கள், நடிகைகள், ஏனைய தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

நடிகை பாயல் ராதாகிருஷ்ணா பேசுகையில், ”வழக்கமான காதல் கதையில் இடம்பெறும் நாயகி போல் அல்லாமல் அழுத்தமான வேடத்தை இயக்குநர் எனக்கு வழங்கியிருக்கிறார். இது நான் தமிழில் அறிமுகமாகும் முதல் திரைப்படம். என்னுடைய அறிமுகம் சரியானதாக இருக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.

நிகழ்வில் ஒலி வடிவமைப்பாளர் சரவணன், ‘சரிகம’ ஆனந்த், படத்தொகுப்பாளர் மதன், கலை இயக்குநர் வாசு, ஒளிப்பதிவாளர் ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி, இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி, நடிகர்கள் வினோத் முன்னா, குமரவேல், சிவா அரவிந்த், நடிகைகள் தாரிணி, கவிதா, நாயகன் குமரன் தங்கராஜன், நாயகி பாயல் ராதாகிருஷ்ணா, இயக்குநர் பாலாஜி வேணுகோபால், தயாரிப்பாளர் கே. ஜி. கணேஷ், தயாரிப்பு நிர்வாகிகள் சீனிவாசன், ரவிக்குமார் ஆனந்த் ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நடிகரும் இயக்குநருமான பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘குமார சம்பவம்’ திரைப்படத்தில் குமரன் தங்கராஜன், பாயல் ராதாகிருஷ்ணா, ஜி.எம். குமார், குமரவேல், பால சரவணன், வினோத் சாகர், லிவிங்ஸ்டன், சிவா அரவிந்த், வினோத் முன்னா, தாரிணி, கவிதா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அச்சு ராஜாமணி இசையமைத்திருக்கிறார். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இப்படத்தை வீனஸ் இன்ஃபோடெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.ஜி. கணேஷ் தயாரித்திருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here