மருத்துவத் துறையில் ஏழை எளிய மக்களை குறிவைத்து அரங்கேற்றப்படும் கொடுமைகள் எக்கச்சக்கம். அதில் ‘இப்படியெல்லாம்கூட நடக்கிறதா?’ என மிரளும்படியான ஒரு விஷயத்தை இழுத்துப் போட்டு அதன்மேல் கமர்ஷியல் சினிமா மசாலா தூவி உருவாக்கிய ‘குற்றம் தவிர்.’
அந்த அக்காவுக்கு தம்பியை போலீஸாக்கி பார்க்க வேண்டும் என்பது ஆசை, கனவு, ல்ட்சியம். தம்பியும் அக்காவின் ஆசைக்கு மதிப்பளித்து போலிஸ் வேலையில் சேர்வதற்கான அனைத்து தகுதிகளையும் வளர்த்துக் கொண்டிருக்கிறார். போலீஸ் வேலையில் இணைவதற்கான நாள் நெருங்கும் நிலையில், அக்காவை சூழ்ச்சி செய்து கொல்கிறது அந்த மருத்துவமனை. விஷயம் தெரிந்து கொந்தளிக்கும் தம்பி அக்காவின் மரணத்துக்கு காரணமானவர்களை பழிவாங்க புறப்படுகிறார்.
அந்த பழிவாங்குதல் பரபரப்பாக இருக்க, அவரால் போலீஸ் வேலையில் சேர முடிந்ததா இல்லையா என்பது கிளைமாக்ஸ்…
தம்பியாக ரிஷி ரித்விக். நல்ல உயரமும், பரந்து விரிந்த உடற்கட்டும் அவர் காவல்துறைக்கு தகுதியானவர் என்பதை சொல்லிவிடுகிறது. அக்கா மீது பாசத்தைப் பொழிவது, அக்காவை கொன்ற மெடிக்கல் மாபியாக்களை போட்டுப் பொளப்பது என நடிப்பிலும் அசத்துகிறார்.
அக்காவாக வினோதினி. கஷ்டப்பட்டு டிபன் கடை நடத்துவதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் போலீஸாக்கும் லட்சியத்துடன் தம்பியை பாசமாக வளர்த்து ஆளாக்குவது நெகிழ வைக்கிறது என்றால், தனக்கு இதய நோய் என டாக்டர் சொன்னதையடுத்து அனுபவிக்கும் மன உளைச்சலை வெளிப்படுத்தும் விதமும், தனக்கிருக்கும் பிரச்சனை தம்பிக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டு பலியாவது, மனதைக் கலங்கடிக்கிறது.
ரிஷிக்கு ஜோடியாக வருகிற ஆராத்யாவின் தேகம் சற்றே ஒடிசலாக இருப்பதுபோல் தோன்றினாலும் யுனிஃபார்மில் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்திற்கு பொருத்தமாகி விடுகிறார். சக போலீஸ் அதிகாரிகள் தன் காதலனை தன் முன்னரே அடித்து மிதித்து ரத்தச்சகதியாக்கும்போது தடுக்க முடியாமல் படும் பாடு அவரது உணர்வுபூர்வ நடிப்புக்கு சான்றாகிறது. பாடல் காட்சியில் மெல்லிய கவர்ச்சியுடன் ஆடும் நடனம் கவர்கிறது.
மருத்துவமனை நடத்தி அநியாய அக்கிரமம் செய்கிற அமைச்சராக பருத்தி வீரன் சரவணன் கதையின் மெயின் வில்லனாக இருந்தாலும் அவரது நடிப்பில் உருட்டல் மிரட்டல் அவ்வளவாக இல்லை. அவருக்கும் சேர்த்து கெத்து காட்டியிருக்கிறார் அவரது மருத்துவமனையில் டீனாக இருந்து உயிர்களைக் கொல்வதை குஷியாக செய்கிற அனந்த்பாபு. சரவணனின் பினாமியாக வருகிற (இந்த படத்தின் தயாரிப்பாளர்) பாண்டுரங்கன் மினி வில்லனாக கதையில் கலந்திருப்பதோடு பாடலொன்றில் ரகளையாக ஆட்டமும் போட்டிருக்கிறார். அவரை மட்டுமல்ல, கிட்டத்தட்ட படத்தில் நடித்துள்ள அத்தனை பேரையும் பாடல்களில் ஆட வைத்திருப்பது கவனம் பெறுகிறது.
சாய் தீனா, காமராஜ், சென்றாயன் என மற்றவர்களும் ரத்த வெறி பிடித்து அலைகிறார்கள்.
ஸ்ரீகாந்த் தேவாவின் இசை என்றாலே குத்தாட்டப் பாடல்கள் இல்லாமலிருக்காது. இந்த படத்தின் அத்தனைப் பாடல்களுமே அதே ரகத்திலிருக்க ஒரு பாடலில் அஸ்மிதாவின் வளமான இளமை கண்களுக்கு விருந்து படைக்கிறது. பின்னணி இசை கதைக்கேற்ற கச்சிதம்.
ரோவின் பாஸ்கரின் ஒளிப்பதிவில் குறையில்லை.
மெடிக்கல் மாபியாக்கள் ஏழை எளிய மக்களுக்கான மருத்துவக் காப்பீட்டை வைத்து எப்படி லட்ச லட்சமாக கொள்ளையடிக்கிறார்கள் என்பதை வெளிச்சம்போட்டுக் காட்டும் விதமாக பாண்டுரங்கன் உருவாக்கியிருக்கும் கதை பரபரப்பாக இருக்க, அதை எம்.கஜேந்திரனின் இயக்கம் விறுவிறுப்பாக்கியிருக்கிறது.
லாஜிக் மீறல்களை கூர்ந்து கவனிக்கும் மூளையை அடக்கி வைத்துவிட்டு உட்கார்ந்தால் குற்றம் தவிர் தொகுத்திருக்கிற பகீர் திகீர் சம்பவங்களை அலுப்பு சலிப்பின்றி அனுபவிக்கலாம்; விழிப்புணர்வும் பெறலாம்!
-சு.கணேஷ்குமார்


