Home Uncategorized காக்கி சர்க்கஸ் வெப் சீரிஸ் விமர்சனம்

காக்கி சர்க்கஸ் வெப் சீரிஸ் விமர்சனம்

சிம்பிளான திருடன் போலீஸ் கதை. அது இயக்குநர் அமீன் பரீஃப் உள்ளிட்ட மலையாள திரைக் கலைஞர்களால் பரபரப்பான படைப்பாகியிருக்கிறது.

அந்த ஜெயில் வளாகத்தில் இருக்கிறது சிறிய கோவிலின் உண்டியலில் சேர்ந்த லட்சக்கணக்கான பணத்தை, ஜெயில் வளாகத்துக்குள் நுழைந்து ஒருவன் திருடி விடுகிறான். அவன் யார் என கண்டுபிடிக்க ஜெயிலரும் சப் ஜெயிலரும் களமிறங்குகிறார்கள்.

அவர்கள் திருடனை எப்படி கண்டுபிடிக்கிறார்கள், திருடன் ஜெயிலுக்குள் நுழைந்து திருடியதற்கு என்ன காரணம், எப்படி திருடினான் என்பதெல்லாம் மீதிக்கதை…

ஜெயிலராக முனீஸ்காந்த். சிறைக்கு வரும் குற்றவாளிகளிடம் கடுமையாக நடந்து கொள்ளாமல், அவர்களை புத்தகங்கள் படிக்கச் சொல்லி நல்வழிக்கு கொண்டு வர முயற்சிப்பவராக எளிமையாக நடித்திருக்கிறார். அவரது முயற்சிக்கு பெரிதாய் எந்த பலனும் கிடைக்காமல் போவது அவருக்கு மட்டுமல்ல; நமக்கும் ஏமாற்றம்தான்.

சப் ஜெயிலராக சுபாஷ் செல்வம். சினிமா ஹீரோக்களுக்கான எல்லா அம்சங்களும் தென்படுகிற அவரிடமிருந்து, திருடனை துப்பறிந்து கண்டுபிடிப்பதில் துடிப்பான நடிப்பு கிடைத்திருக்கிறது. காதல் காட்சிகளிலும் குறையில்லாமல் நடித்திருக்கிறார்.

சுபாஷின் காதலியாக வின்ஸு ரேச்சல் ஷாம், சின்னச் சின்ன கியூட்டான முகபாவங்களால் மனம் கவர்கிறார்.

‘ஹேய் நான்தான் திருடினேன்; உன்னால என்ன பண்ணமுடியுமோ பண்ணிக்கோ’ எனகிற ரேஞ்சுக்கு ஜெயிலரிடமே சவால் விடும் திருடனாக ராஜேஷ் மாதவன், கால்களை சாய்த்தபடி நடப்பதும், தெனாவட்டான பார்வையுமாக செலுத்தியிருக்கும் ஆளுமை அசத்துகிறது.

சவப்பெட்டி தயாரித்து விற்பனை செய்பவராக வருகிற அப்துல் லீக்கும் முக்கியமான கேரக்டர். சாவித்ரி, மருதுபாண்டியன், ராகேஷ் உஸார், விக்னேஷ்வர், அருண்குமார், சித்திரைச்சேனன் என இன்னபிறர் கதையோட்டத்தில் கலந்திருக்கிறார்கள்.

விபின் பாஸ்கரின் பின்னணி இசை, நீரஜ் ரெவியின் ஒளிப்பதிவு இரண்டுமாக இணைந்து சீரிஸுக்கு உயிரோட்டம் தந்திருக்கின்றன.

திருடியவன் இவன்தான் என முன்பே காண்பித்துவிட்டாலும், சீரிஸை அலுப்பு சலிப்பில்லாமல் பார்க்க வைக்கிறது சுவாரஸ்யமான திரைக்கதை.

காக்கி சர்க்கஸ் – கன்ஃபர்ம் சக்ஸஸ்!

-சு.கணேஷ்குமார்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்