பந்தயக் குதிரையை செலுத்திக் கொண்டிருந்த இளைஞன் ஜல்லிக்கட்டு மைதானத்தில் வாலிப முறுக்கு காட்டும் கதை. அவன் ஹார்ஸிலிருந்து காளைக்கு மாறியதன் காரண ‘காரி’யங்களில் வீரியமும் வீரமும் சரிவிகிதமாய் கலந்த திரைக்கதை…
தானும் தனது தந்தையும் வளர்த்துப் பராமரித்து, ரேசில் ஈடுபடுத்தும் குதிரையை நண்பனின் துரோகத்தால் இழக்கிறார் சசிகுமார். மனமுடைந்த அவரை மண்மணம் மாறாத கிராமத்துக்கு கூட்டிப் போகிறது சந்தர்ப்ப சூழ்நிலை. வில்லேஜுக்கு போன அவர் நமது வளங்களை அழிக்கும் கார்ப்பரேட் வில்லனை எதிர்ப்பது, பகை முற்றிக் கிடந்த மனிதர்களிடம் மனிதம் விதைப்பது, வற்றிக் கிடந்த பூமியில் மழை பொழிய வழி செய்வது என பரபரப்பாகிறார். பலன்கள் பலமாக அமைய, ஏறுதழுவி நமது பாரம்பரியப் பெருமையை தூக்கிப் பிடிக்கிறார்; மனதுக்குப் பிடித்தவளோடு கரம் கோர்க்கிறார்… கதையோட்டம் அம்புட்டுத்தான்.
படத்தின் முன்பாதி சற்றே மந்தகதியில் பயணித்தாலும் பின்பாதியில் ஊரைக் காக்கும் கருப்பன் சாமி, அந்த சாமிக்குத் திருவிழா, ஊர்ப்பகை, ஜல்லிக்கட்டு என தமிழர்களின் வாழ்வியலை அதனதன் தன்மையோடு காட்சிப்படுத்தி காரிக்கு கனம் சேர்த்திருக்கிறார் இயக்குநர் ஹேமந்த்! சாதி அது இதுவென கதையின் போக்கு திசை மாறாமலிருந்தது திருப்தி.
சசிகுமாருக்கு தான் விரும்பியபடியெல்லாம் புகுந்து விளையாடும்படியான கதாபாத்திரம். திரும்பிய பக்கமெல்லாம் ஹீரோயிசம் காட்டினாலும் அத்தனையும் அழகாய், ஆழமாய், அளவாய்!
தேகத்தில் மலையாளச் செழுமை, உணர்வுகளை விழிகளால் உருக்கமாக பந்தி வைக்கிற எளிமை என கவர்கிறார் கதைநாயகி பார்வதி அருண்! தன் தகப்பன், தங்களின் உயிருக்கு உயிரான வீரமிகு காளையை விற்றுத் திரும்பிய சேதி கேட்டு கதறும் காட்சி நெகிழ்ச்சி!
வீரிய ரக காளைகளைத் தேடிப்பிடித்து இனப்பெருக்கத்துக்குப் பயன்படுத்துவதோடு, வகையாக சமைத்து வாய்க்குள் தள்ளும் கார்ப்பரேட் வில்லனாக ஜேடி சக்கரவர்த்தி. அவருக்கு ஜோடியாக சம்யுக்தா. நடிப்புப் பங்களிப்பு பரவாயில்லை ரகம்!
‘ஆடுகளம்’ நரேன், நாகிநீடு, பாலாஜி சக்திவேல் என தேர்ந்த நடிகர்கள் தங்களுக்கு தகுதியான வேடத்தில் வருகிறார்கள்; தரமான நடிப்பைத் தருகிறார்கள்!
‘காரி’யாக நடித்திருக்கிற காளையின் கம்பீரம் படத்தின் பலம்!
இமான் இசையில் ‘சாஞ்சிக்கவா’ பாடல் கிறங்கடிக்க, ‘எங்கும் ஒளி பிறக்குமே’ பாடலில் உற்சாகம் தெறிக்கிறது.
காளைகள் சீறிப்பாயும் ஜல்லிக்கட்டை அதன் உற்சாகம் குறையாமல் படமாக்கியிருக்கிறது கணேஷ் சந்திராவின் கேமரா.
அன்பறிவ் அமைத்திருக்கும் சண்டைக் காட்சிகளில் காட்டுத்தீயின் விறுவிறுப்பு!
நீங்கள் பொழுதுபோக்கு அம்சங்களோடு நேட்டிவிட்டி மாறாத கிராமத்துப் படங்களை விரும்புகிறவரா? ஆம் எனில் காரியின் கச்சிதமான காம்போ உங்களுக்கானதுதான்!

