‘கடைசி விவசாயி‘ சினிமா விமர்சனம்
By சு. கணேஷ்குமார், 99415 14078
விவசாயத்துக்கெதிரான கார்ப்பரேட் வன்முறைகளைப் பார்த்துப் பார்த்து சலித்த கண்களுக்கு, விவசாயத்தின் மகத்துவத்தை அதன் இயல்பிலேயே எடுத்துக் காட்டும் ‘கடைசி விவசாயி.’
திரும்பிய பக்கமெல்லாம் தரிசு நிலங்கள் ஆக்கிரமித்துள்ள அந்த கிராமத்தில், தனக்கென இருக்கும் மண்ணில் விடாப்பிடியாய் விவசாயம் செய்து வருகிறார் உறவுகளின் ஆதரவற்ற, ஊராரின் மனங்களை வென்ற பெரியவர் மாயாண்டி.
அந்த ஊரில் சில அசம்பாவிதங்கள் நடக்க, குலசாமியைக் கும்பிட ஊர்மக்கள் தீர்மானிக்கிறார்கள். விழா ஏற்பாட்டில் அது இவர் வசம், இது அவர் வசம் என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றை பிரித்துக் கொடுக்க, படையலுக்காக புது நெல் விளைவித்துத் தரும் பொறுப்பு மாயாண்டிக்கு. அதை சரிவர செய்து முடிக்க முடியாதபடி அந்த தள்ளாத மனிதரை வளைக்கிறது சூழ்ச்சி வலை. பொய்க்குற்றம் சுமத்தப்பட்டு சிறை செல்லும் நிலை!
அவர் செய்த குற்றம் என்ன? குற்றத்திலிருந்து தப்பித்தாரா இல்லையா? சாமிக்கு புது நெல் போய்ச் சேர்ந்ததா?
இதற்கான பதில்களை சுவாரஸ்யமான காட்சிகளாக்கி, தனது தேர்ந்த திரைமொழியால் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை தருகிறார் இயக்குநர் ‘காக்கா முட்டை’ மணிகண்டன்.
வயதில் 80 வருடங்களைக் கடந்த அனுபவம், சுருங்கிய தேகம், திறன் குறைந்த கண்கள் – காதுகள்… மாயாண்டியாக நடித்திருக்கும் நல்லாண்டியின் நிஜத் தோற்றமும் கதாபாத்திரத்தின் தன்மையும் ஒன்றாக இருப்பது ஆச்சரியம்! கதாபாத்திரத் தேர்வுக்காகவே இயக்குநருக்கு சிறப்பு விருதுகள் தந்து கெளரவிக்கலாம்!
தான் எதற்காக கைது செய்யப்பட்டிருக்கிறோம் என்பது புரியாமல் போலீஸாரிடமும் நீதிபதியிடமும் வெள்ளந்தியாகப் பேசுவது, தண்ணீர் பாய்ச்சாவிட்டால் நெற்பயிர்களின் உயிர் பிரிந்துவிடும் என நீதிமன்றத்தில் அக்கறைப் படுவது, சிறையிலிருந்தபடியே தன்னைச் சார்ந்தவர்களிடம் விவசாய நுணுக்கங்களை சொல்லியனுப்புவது, போலீஸை இ.பி. ஆசாமி என நினைக்கிற வெகுளித்தனம் என மாயாண்டியின் பாத்திரம் அத்தனை கனம். கிடைக்கிற பாராட்டுக்களை பெற்று மகிழ வாய்ப்பின்றி அந்த தள்ளாத மனிதரை காலம் தூக்கிச் சாப்பிட்டிருப்பதை நினைக்கும்போது நம் மனதிலும் கனம்
பழுப்பேறிய பற்களோடு, அழுக்கேறிய நான்கைந்து சட்டைகளைச் சுற்றிக் கொண்டு, எட்டுப் பத்து கைக்கடிகாரங்களை வரிசையாய் கட்டிக்கொண்டு, அகன்று விரிந்த இரண்டு பைகளில் கன்னாபின்னா பொருட்களைச் சுமந்துகொண்டு, ஏடாகூட மனநிலையுடன் முருக பக்தராக சுற்றித் திரியும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் விசித்திரம்! அவரது நடிப்புப் பங்களிப்பில் வழக்கமான அலப்பரைக்குப் பஞ்சமில்லை. ‘நாட்டை இப்போ ஆள்றது யாரு?’ என்ற கேள்விக்கு வி.சே. கொடுக்கும் பதில் விசேஷம் விஷமம்!
வக்கீல்களின் வாதங்களை, காகித ஆதாரங்களை மட்டும் வைத்துக் கொண்டு தீர்ப்பு சொல்லும் வழக்கத்திலிருந்து சற்றே மாறுபட்ட முன்னுதாரண நீதிபதியாக ரேச்சல் ரெபேக்கா. எந்தப் படத்திலும் இத்தனை இளவயது நீதிபதியைப் பார்த்திருக்க முடியாது. குற்றம் சுமத்தப்பட்ட பெரியவரின் பேச்சிலிருக்கும் அப்பாவித் தன்மையுணர்ந்து, ‘இவரையா குற்றவாளின்னு சொல்றீங்க’ என பொய் கேஸ் போட்ட போலீஸாரிடம் கேட்கும்போது கண்களால் கவனம் ஈர்க்கிறார். வரும்காலங்களில் கனமான கதாபாத்திரங்கள் இவரைத் தேடி வரலாம்!
விவசாயத்தை வெறுத்து யானை வாங்கி வளர்க்கும் வித்தியாச மனிதராக யோகிபாபு. காமெடிக்கு அத்தனை வாய்ப்பில்லை என்றாலும் ஒருசில சலம்பல் வசனங்களால் சற்றே கிச்சுக்கிச்சு மூட்டுகிறார். யோகிபாபுவுக்கும் சேர்த்து கதைநாயகன் மாயாண்டியின் வெள்ளந்தி பேச்சு வெடித்துச் சிரிக்க வைப்பது தனித்துவம்!
விவசாயப் பணியை தண்டனையாக ஏற்று, பின்னர் அதை விரும்பிச் செய்கிற காவல்துறை அதிகாரி பாத்திரம் தனியாக ஒரு கதை சொல்கிறது!
எட்டிப் பார்த்துவிட்டு எஸ்கேப் ஆகிவிடும் பாத்திரத்தைக் கூட கணக்கில் சேர்த்துப் பாராட்டும்படி படைத்திருப்பது, சிறை வளாகத்தில் ஆழ்ந்து தூங்கும் மாயாண்டியை நீதிபதியும் இன்னபிற மனிதர்களுமாய் சேர்ந்து எழுப்புகிற காட்சியில் நமக்கு அரை நொடி இதயம் நின்று துடிப்பது திரைக்கதையின் பலம்!
இயக்குநரே ஒளிப்பதிவாளராகவும் இருந்தால் சொல்லவரும் கருத்தை காட்சி வழியே கடத்துவது சுலபம். அதை நிரூபிக்கிறது இயக்குநர் மணிகண்டனின் கேமரா கண்கள்!
பின்னணி இசைக்காக சந்தோஷ் நாராயணன் போட்டிருக்கும் உழைப்பு, அங்கங்கே முருகனைப் போற்றும் பிரபலமான பக்திப் பாடல்கள் இணைப்பு என படத்தில் பாராட்ட விஷயங்கள் அதிகமுண்டு!
குறைகள்? விவசாயத்தில் களைகளும் பயிர்களில் பதர்களும் சகஜம்!