ஒரு பெண்ணை இரண்டு இளைஞர்கள் காதலிக்கிற கதை. இப்படி சொன்னதும் வழக்கமான முக்கோண காதல் கதை என அலுப்பு சலிப்புக்குள் போக வேண்டாம். இது எது மாதிரியும் இல்லாத புது மாதிரி கதை. ஆமாம், அப்படி தன்னைக் காதலிக்கிற இரண்டு பேரையும் அவள் காதலிக்கிறாள்.
அது ஏன், அவள் யாரை திருமணம் செய்து கொள்கிறாள் என்பதையெல்லாம் சுவாரஸ்யமான காட்சிகளாக தொகுத்திருக்கிறார் இயக்குநர் எஸ் எஸ் முருகராசு
கதையின் நாயகனான விஜய் கெளரிஷ் வேலை வெட்டிக்குப் போகாமல் பெண்களை சைட் அடிப்பதை முழு நேர தொழிலாக வைத்திருப்பது, ஒரு கட்டத்தில் ஒரு பெண்மணியை காமப் பார்வையால் துரத்திக் கொண்டு போய் முடிவில் அவரது மகளைப் பார்த்து காதல் பார்வை வீசுவது என படத்தின் பெரும்பகுதியை இயல்பான நடிப்பால் கலகலப்பாக்கியிருக்கிறார்.
இன்னொரு நாயகனான அதர்ஷ் மதிநாதன் உழைப்பாளியாக, குடிகாரனாக, காதல் தோல்வியில் முடிந்தபின் காதலித்த பெண்ணை கொலை செய்ய ஆவேசமாக தயாராவது என தன் கடமையை அலட்டலில்லாத நடிப்பால் நிறைவேற்றியிருக்கிறார்.
கதைப்படி கல்லூரிப் படிப்பைத் தொடர்கிற பெண் என்றாலும், சிறுமி போலிருக்கிறார் கதை நாயகி ஷிமேகா. இரண்டு பேருக்கு காதல் கடிதம் கொடுப்பது, விவரம் தெரிந்து இருவரும் கொதித்துக் கொந்தளிக்கும்போது அவர்கள் நம்பும்படியான காரணம் சொல்லி சமாளிப்பது என தனக்கான காட்சிகளை அழகான கண்ணசைவாலும் அளவெடுத்தது போன்ற நடிப்பாலும் தரமாக்கியிருக்கிறார்.
படம் முழுக்க கலகலப்புக் காட்சிகளுக்குப் பஞ்சமில்லாமல் கடந்துபோக, முதல் நாயகனின் அம்மாவான மணிமேகலையும் ஹீரோயினின் அம்மாவான சுதாவும் போட்டுக்கொள்ளும் குடுமிப்பிடி சண்டை கூடுதலாய் ரசிக்க வைக்கிறது.
கதாபாத்திரங்கள் ஈரோடு வட்டார வழக்கை சரியாக உச்சரித்து வசனங்களைப் பேசிக் கொண்டிருக்க, ஹீரோயினுக்கு அப்பாவாக வருகிற மஞ்சுநாதனின் பேச்சிலிருக்கும் வட்டார வழக்கு தனித்து தெரிகிறது.
கெவின் டி’கோஸ்டா இசையில் தேனிசைத் தென்றல் தேவா பாடும் ‘ஐய்யய்யய்யோ ஐய்யய்யய்யோ பொல்லாத பார்வை போதையேத்துது’ கிறக்கம் தர, ‘காய்ச்ச நோவு போலத்தான்’ பாடல் மனதை வருடுகிறது.
எளிமையான வீடுகள், காடு கரை, வாய்க்கால் வரப்பு, குளத்து மேடு, ஆற்றங்கரை, சந்து பொந்து என புகுந்து புறப்பட்டு கதை நிகழ்விடங்களை மண்மணம் மாறாமல் பதிவு செய்திருக்கிறது சதீஷ்குமார் துரைக்கண்ணுவின் கேமரா கண்கள்.
காதல் என்ற பெயரிலும் காம வெறியாலும் பெண்களுக்கு ஆண்களால் நேர்கிற சிக்கல்களை மையப்படுத்தி, அந்த சிக்கலை ஒரு பெண் எப்படி கையாள்கிறாள் என்கிற கற்பனையில் களம் கண்டிருக்கிற இந்த படத்தை தாராளமாக பார்க்கலாம்; ‘கொடுத்த காசுக்கு வொர்த்’ என்ற உணர்வோடு காட்சிக்கு காட்சி சிரித்து ரசிக்கலாம்.


