காந்தாரா சாப்டர் 1 சினிமா விமர்சனம்

என்னதான் தமிழ் சினிமா இயக்குநர்கள் முட்டி மோதினாலும் எட்ட முடியாத உயரத்தை கன்னட, தெலுங்குப் படங்கள் தொட்டு விடுகின்றன. ரிஷப் ஷெட்டியின் சிந்தனையால் அப்படியொரு வியக்கவைக்கும் உயரத்தை தொட்டிருக்கிற படைப்பாக ‘காந்தாரா சாப்டர் 1.’

`காந்தாரா’ படத்தின் அடுத்த பாகமாக வந்திருந்தாலும் இதுதான் முதல் பாகம். முன்னர் பார்த்த பாகத்தில் கதைநாயகன் சிவா (ரிஷப் ஷெட்டி) அவர் வசிக்கும் ஊரில் பாரம்பரிய பூதகோலா திருவிழாவின்போது மாயமாக மறைந்து போவார். அந்த இடத்தின் கதையை விவரிப்பதாக விரிகிறது இந்த பாகம்.

‘ஈஸ்வர பூந்தோட்டம்’ என்றழைக்கப்படுகிற வளம் மிகுந்த ‘காந்தாரா’ வனத்தில் பெரியளவில் குவிந்திருக்கும் இயற்கை வளத்தையும், அங்கிருக்கும் தெய்வத்தையும் அடைய நினைக்கிறான் ஒரு ராஜ்ஜியத்தைக் கட்டியாள்கிற் மன்னன். காட்டுக்கள் வசிக்கும் இரண்டு இனக்குழுக்களும் அதையே நோக்கமாக வைத்திருக்கிறது. அவர்கள் காட்டை அபகரிக்க விதவிதமாக சூழ்ச்சி செய்ய, அதையெல்லாம் முறியடித்து அவர்களை காந்தாரா காட்டின் காவலனான பெர்மே எப்படி அழிக்கிறான் என்பதோடு நிறைவுக்கு வருகிறது இந்த பாகத்தின் கதி கலங்கச் செய்யும் கதை. அடுத்த பாகத்துக்கான லீடும் அட்டகாசம்.

முந்தைய பாகத்தை எழுதி இயக்கி நடித்த ரிஷப் ஷெட்டியே இந்த பாகத்தையும் இயக்கி நடித்திருக்கிறார். தன் இன மக்களுக்காக எதையும் செய்யும் தலைவனாக உடற்கட்டில் கம்பீரத்தையும் செயல்பாடுகளில் எதற்கும் அடிபணியாத உறுதியையும் காண்பித்து தனது பெர்மே கதாபாத்திரத்துக்கு பெருமை சேர்த்திருக்கும் ரிஷப் ஷெட்டி, குலிகா தெய்வத்தின் அருள் வந்து எதிரிகளை சம்ஹாரம் செய்யும்போது வெளிப்படுத்தியிருக்கும் முகபாவங்களும் வெறித்தனமும் நம்மை சிலிர்ப்பூட்டாமல் விடாது.

கதாநாயகியைக் காதலிக்கும் வழக்கமான கதாநாயகி போல் நினைக்க வைத்து கிளைமாக்ஸின் நெருக்கத்தில் எதிர்பாராத பரிமாணத்தை கம்பீரமாக காட்டியிருக்கும் ருக்மணி வசந்தைப் பார்த்தால் ‘ஏஸ் படத்தில் பார்த்த பெண்ணா இது?’ என ஆச்சரியத்தின் எல்லைக்குப் போய்வர வேண்டியிருக்கிறது. அவருக்கான உடைகள் வளவள பளபள உடலழகை எடுத்துக் காட்டும் கவர்ச்சியில் மயங்கவும், வாளேந்தி போரிடும் காட்சியில் மிரளவும் வாய்ப்பிருக்கிறது.

பாங்கரா பகுதியின் இளவரசனாக இருந்து அரசனாகும் குல்ஷன் தேவைய்யா வில்லத்தனத்தை வீரியமாக காட்டி, காந்தாரா வனத்துக்குள் அதற்கு பலனின்றி மடிகிறார்.

நயவஞ்சகன்தான், ஆனாலும் காரியம் சாதிப்பதற்காக இறங்கிப் போகத் தயாராக இருக்கிற அரசனாக ஜெயராம் கவனம் பெறுகிறார்.

பிரமோத் ஷெட்டி, பிரகாஷ் துமினாட், ராகேஷ் பூஜாரி என ஏ…..கப்பட்ட நடிகர் நடிகைகளால் திரை நிரம்பியிருக்கிறது.

பிரமாண்டமான காந்தாரா காடு, மலைகள், அருவிகள், நீர்ப் பரப்புகள், அண்ணாந்து பார்க்க வைக்கும் பாங்கரா சாம்ராஜ்யம், துறைமுகம், ஆயிரம் சூறாவளியாய் சுழன்றடிக்கும் சண்டைக் காட்சி, பெர்மே சாமியாடும் காட்சி, தேர் வலம் வருகிற காட்சி என அனைத்தையும் கண்கள் விரிந்து பார்க்கும்படியான விஷுவல் டிரீட்டாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் அரவிந்த் எஸ். காஷ்யப்.

அரண்மனை, காட்டுக்குள் அமைந்திருக்கும் வழிபாட்டு மையங்கள், போர்க் கருவிகள் என பார்த்துப் பார்த்து உருவாக்கியிருக்கிறார் கலை இயக்குநர்.

காட்சிகள் பலவும் மிரட்டலின் உச்சமாக தெரிவதற்கு பின்னணி இசையால் பெரியளவில் உதவியிருக்கும் அஜ்னீஷ் பி. லோக்நாத், கதையோடு கலந்து பயணிக்கும் பாடல்களை செவிகளைக் கவரும்படி வழங்கியிருக்கிறார்.

தேவாங்கு கூட்டம், புலி நடமாட்டம், ராட்சத வராகத்தின் வருகை என எக்கச்சக்கமாய் கிராபிக்ஸ் பங்களிப்பு தேவைப்பட அதை தரத்திலும் தரமாக தந்திருக்கிறது அதற்கான தொழில் நுட்பக் குழு. ஆடை வடிவமைப்புக் குழுவின் பங்களிப்பு படத்திற்கு பலம் ஊட்டியிருக்கும் அம்சங்களில் ஒன்று.

தன் இனத்தையும் தான் வாழும் காட்டையும் பாதுகாக்கத் துடிக்கும் போராளிக்கு கடவுள் துணை நிற்கிற ஃபேண்டஸி கதையில் பின்னப்பட்டு, மேக்கிங்கில் மிரளச் செய்கிற இந்த படைப்பு திரையரங்கில் பார்த்து அனுபவிப்பதற்கானது!

-சு. கணேஷ்குமார்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here