அப்பாவின் சடலத்தை அவரது பூர்வீக நிலத்தில் நல்லடக்கம் செய்வதில் சிக்கல் உருவாக, தப்பான வழியைத் தேர்ந்தெடுக்கும் மகன் சந்திக்கும் சவால்களும் விளைவுகளுமாக ‘கர.’
திருடுவதை தொழிலாக செய்துகொண்டிருக்கும் கரசாமி ஒரு கட்டத்தில் திருந்தி, அப்பாவின் விவசாய நிலத்தை விற்று சொந்த தொழில் தொடங்க தீர்மானிக்கிறான். அப்போதுதான் அந்த நிலமும் ஊரிலுள்ள பலரது நிலமும் குறிப்பிட்ட ஒரு வங்கியில் அடகு வைக்கப்பட்டிருப்பது, அதன் பின்னணியில் அந்த வங்கி செய்திருக்கும் சூழ்ச்சி, நிலத்தை மீட்டெடுப்பது சாத்தியமில்லை என்கிற நிலைமை என அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அவனைத் தாக்குகிறது. அதனால் சூடேறும் அவன் வங்கிக்கு எதிராக பொங்கியெழ அதன்பிறகு நடக்கும் சம்பவங்கள் அத்தனையும் அதிரடி.
கதைநாயகன் வங்கிகளில் புகுந்து லட்ச லட்சமாய் களவாடுகிற அதிரிபுதிரி ஆட்டங்களில் லாஜிக்கை தேடாமலிருந்தால் ஆடியன்ஸுக்கு சுறுசுறுப்பு தொற்றிக் கொள்ளும்…
தங்களது நிலத்தை அபகரிக்க வலை விரித்த வங்கியைக் கொள்ளையடித்து, அந்த பணத்தை அதே வங்கியிடம் கொடுத்து நிலத்தை மீட்கும் வேட்டையாடு விளையாடு எபிசோடுகளில் கரசாமியாக வருகிற தனுஷின் நடிப்பில் சூறாவளியின் சுறுசுறுப்பு தெரிகிறது; அப்பா மீது பாசம், மனைவி மீது நேசம் என எமோஷன் ஏரியாக்களிலும் ரவுண்டி கட்டியடிக்கிறார் நடிப்பு அசுரன்.
‘வங்கிக் கொள்ளையன் கரசாமியைப் பிடித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்; அதனால் தன் மீது புகழ் வெளிச்சம் பரவ வேண்டும்’ என்ற நோக்கத்துடன் அலைந்து திரியும் காவல்துறை உயரதிகாரியாக சுராஜ் வெஞ்சாரமூடு கண்களாலும் உடல்மொழியாலும் கேரக்டருக்கு கம்பீரம் கூட்டியிருக்கிறார்.
தனுஷின் காதலியாக, மனைவியாக மமிதா பைஜு. அவருக்கான காட்சிகள் உணவில் ஊறுகாய் போல் கொஞ்சமாக இருந்தாலும் தவறான வழியில் பயணிக்கும் கணவனை கண்டிக்கும்போது வெளிப்படுத்தும் சீற்றம் அவருக்குள்ளிருக்கும் தேர்ந்த நடிகையை எடுத்துக் காட்டுகிறது.
கதைநாயகன் பொது நலத்துக்காக கொள்ளையடித்துக் கொண்டிருக்க, அதை சுயநலத்துக்கு பயன்படுத்திக் கொள்ளும் வங்கி மேலாளராக ஜெயராம். வழக்கம்போல் சிரிப்பூட்டாமல் வில்லனாக கவனம் ஈர்க்கிறார்.
நிலம் கைவிட்டுப் போய்விடக் கூடாது என்கிற தவிப்பாகட்டும், மகனுடைய விருப்பத்துக்கு சம்மதிக்க முடியாமல் கலங்கி நிற்கிற தருணமாகட்டும் நடிப்பில் அசத்தும் கே எஸ் ரவிகுமாரின் கெட்டப் அவரா இவர் என ஆச்சரியப்படுத்துகிறது. அடையாளத்தை முழுவதுமாக தொலைத்தவராக வந்து போகிறார் எம் எஸ் பாஸ்கர்.
அம்மாவாக ஸ்ரீஜாரவி, மாமனாக கருணாஸ், நண்பனாக பிரித்வி என இன்னபிறரும் ஏற்ற கேரக்டர்களுக்கு நியாயம் செய்திருக்க, பின்னணி இசையில் பட்டாசு பற்ற வைத்திருக்கிறார் ஜி வி பிரகாஷ். தனுஷ் குரலில் ‘கண்ணம்மா என் கண்ணம்மா’ பாடல் மனதை வருட, அந்தோணிதாசனின் கணீர் குரலில் ‘வாயா ஏ கரசாமி’ பாடல் சிலிர்ப்பூட்டாமல் விடாது. கதையோடு பொருந்துகிற இன்னும் ஒன்றிரண்டு பாடல்களும் படத்தில் உண்டு.
கதைக்களமாகியிருக்கிற வறட்சிக்கு பஞ்சமில்லாத ராமநாதபுரத்தின் பரந்து விரிந்த தரிசு நிலங்களை, பொட்டல் காடுகளின் நீள அகலத்தை வளைத்துச் சுருட்டி காட்சிகளை வளமாக்கியிருக்கிறது தேனி ஈஸ்வரின் கேமரா.
கலை இயக்குநரின் பங்களிப்பில் சுவரில் எட்டிப் பார்க்கும் ‘மைக்கேல் மதன காமராஜன்’ பட போஸ்டர் உள்ளிட்டவை கதை நடக்கும் காலகட்டத்தை எடுத்துச் சொல்ல, ‘தேவர் மகன்’ படத்தின் ஷூட்டிங் பக்கம் ஆல்ப்ரெட் பிரகாஷ் – விக்னேஷ் ராஜாவின் கூட்டணி அமைத்திருக்கும் திரைக்கதை சென்று திரும்புவது சுவாரஸ்யம்.
லோன் என்கிற பெயரில் அப்பாவி விவசாயிகள் பலியாடுகளாக மாற்றப்படும் கொடூரத்தை உயிரோட்டமான காட்சிகளால் உண்மைக்கு நெருக்கமாக்கியிருக்கும் ‘போர் தொழில்’ இயக்குநர் விக்னேஷ் ராஜா, உலகில் எங்கெல்லாமோ நடக்கும் போர் நம்மூரில் எப்படியான தாக்கத்தை உருவாக்குகிறது என்பதை எளிமையாகப் புரிய வைத்திருக்கிறார்.
-சு.கணேஷ்குமார்


