Home விமர்சனம் கருப்பு பல்சர் சினிமா விமர்சனம்

கருப்பு பல்சர் சினிமா விமர்சனம்

‘ஒரு வீரனை அழிச்சா இன்னொருத்தன் பொறந்து வருவான்’ என்ற உண்மைக்கு உயிரூட்டியிருக்கும் படம்.

காதலியுடன் ஊர் சுற்றுவதற்காக ஹீரோ வாங்கிய கருப்பு நிற பல்சர் பைக்கில் ஜல்லிக்கட்டு காளையொன்றின் ஆவி ஏறிக்கொள்ள, ஹீரோவின் வாழ்க்கையில் சிலபல சிக்கல்கள் உருவாகி, அதன் தொடர்ச்சியாக ஒரு விபத்திலும் சிக்குகிறார். அவரது உயிரைப் பறிப்பதற்காகவே அந்த பைக்கை அவர் தலையில் கட்டியிருக்கிறார்கள் என்பது கதையிலுள்ள முக்கியமான சமாச்சாரம். பைக் மூலம் வரும் ஆபத்துக்களில் இருந்து அவர் எப்படி மீண்டு வருகிறார் என்பதும், பைக்கில் காளையின் ஆவி புகுந்ததன் காரணம் என்ன என்பதும் கதையின் மீதி… இயக்கம் முரளி கிருஷ்

பல்சரை வாங்கி படாதபாடு படுகிறவராக கெத்து தினேஷ். இடையில் ஒன்றிரண்டு படங்களில் வயதுக்கு மீறிய தோற்றங்களில் நடித்தவர் மீண்டும் இளமைக்குத் திரும்பியிருக்கிறார். காதல் காட்சிகளில் பரவச மனநிலை, தன்னைச் சுற்றி நடக்கும் அமானுஷ்ய நிகழ்வுகளால் உருவாகும் பதற்றம், குழப்பம் என கதையோட்டத்திற்கு பொருத்தமான உணர்வுகளை மிகச்சரியாக வெளிப்படுத்தி, காளையுடன் ஜல்லிக்கட்டு களத்தில் காளையுடனும் சண்டைக் காட்சிகளில் வில்லம் கும்பலிடம் சீற்றமும் காட்டுகிறார்.

ரேஷ்மா வெங்கடேஷுக்கு அழகிய முகம்; சிரிக்கும்போது அந்த அழகு கூடுகிறது. தினேஷை காதலிக்கும் சிம்பிளான வேலையை ரசித்துச் செய்திருக்கிறார். சீரியஸ் வில்லனாக அர்ஜய், சிரிப்பு வில்லனாக மன்சூர் அலிகான், இரண்டாம் கதாநாயகியாக மதுனிகா, காவல்துறை உயரதிகாரியாக சரவண சுப்பையா உள்ளிட்டோரின் நடிப்பு நேர்த்தி. ஹீரோவின் நண்பனாக வருகிற பிராங்ஸ்டர் ராகுலுக்கான காட்சிகள் ரசிகர்களை வெறுப்பேற்றுவதற்காகவே வைக்கப்பட்டிருப்பது போலிருக்கிறது.

பரபரப்பான சாலைகள், விறுவிறுப்பான ஜல்லிக்கட்டு என கதையின் முக்கியப் பகுதிகளை நேர்த்தியாக பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பாஸ்கர் ஆறுமுகம். இன்பாவின் இசை கதையோடு கலந்து உறவாடியிருக்கிறது. பாடல்கள் ஒன்றிரண்டு தடவை கேட்கும் ரகம்.

உயர் சாதிக்காரர்கள் கீழ்சாதிக்காரர்களை எதிரிகளாக கருதி களமாடுகிற பழக்கப்பட்ட கதையில் பயணத்தைத் துவங்கும் பல்சர்

ஜல்லிக்கட்டு, காதல், அமானுஷ்ய சக்தியைச் சுமந்து சுழலும் பைக் என அமைக்கப்பட்டிருக்கும் திரைக்கதையால் அடக்கமுடியாத காளையின் வேகத்தில் சீறிப் பாய்கிறது!

-சு.கணேஷ்குமார்

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்