நேர்மையற்ற தலைவனுக்காக செலவு செய்ததை உண்மைத் தொண்டன் திரும்பக் கேட்டால் என்னவாகும்? சற்றே வித்தியாசமான ஒன்லைனில் ‘கட்சிக்காரன்.’
சொந்தக்காசை செலவழித்து தலைவனின் செல்’வாக்கை‘ வளர்ப்பது, கட்சிக்காக உழைப்பதையே முழு நேரத் தொழிலாக செய்வது என வாழ்நாளைக் கழிக்கிற, வாழ்க்கையைத் தொலைக்கிற தொண்டர்கள் நம்மிடையே ஏராளம்; தாராளம்.
அவர்களில் மிகச்சிலர் தவிர மற்றவர்கள் தங்கள் உழைப்புக்கான உயரத்தை தொடுவதில்லை; அங்கீகாரத்தை அடைவதில்லை.
அப்படிப்பட்ட தொண்டன் ஒருவனை கதை நாயகனாக்கி, அரசியல்வாதிகளின் அநியாய, அக்கிரமங்களை தனக்குத் தெரிந்த எளிமையான திரைமொழியில் தட்டிக் கேட்டிருக்கிறார் இயக்குநர் ஐயப்பன்!
இளைஞன் சரவணன் ‘மக்கள் கட்சி’யின் கடைநிலைத் தொண்டன். தான் சார்ந்த கட்சிக்காக கடுமையாக உழைப்பவன். தன் தலைவர் தேர்தலில் ஜெயிப்பதற்காக, இக்கட்டான சூழ்நிலையிலும் சிரமப்பட்டு பணத்தைத் திரட்டி செலவு செய்கிறான். அவனது அபிமானத்தை மூலதனமாக்கி வெற்றிபெற்ற அந்த தலைவர், நன்றிக்கடனாக அந்த தொண்டனுக்கு உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுகிற வாய்ப்பைத் தருகிறார். தனது பல வருட உழைப்புக்கு பலன் கிடைத்த சந்தோஷத்தில் தொண்டன் தேர்தலுக்குத் தயாராகிறான்.
கதையின் போக்கைப் பார்த்து ‘ஒரு தலைவன் இத்தனை நல்லவனாக இருப்பானா?’ என நாம் யோசித்துக் குழம்பும்போது, அந்த தொண்டன் தேர்தலில் போட்டியிட முடியாமல் தனக்கெதிராக பின்னப்பட்ட சூழ்ச்சி வலைக்குள் விழுகிறான். சற்றே சூடுபிடிக்கிறது கதைக்களம்.
சூழ்ச்சிக்கு யார் காரணம்? என்ன காரணம்? தன்னை வீழ்த்த நினைத்தவர்களை அந்த தொண்டன் என்ன செய்தான்? இந்த கேள்விகளுக்கான பதில்கள் திரைக்கதையில்… வலி தந்த தலைவனுக்கு பாடம் புகட்ட தொண்டன் கையாளும் வழி கவனம் ஈர்க்கிறது!
தலைவனுக்காக மனைவியின் தாலியைக்கூட அடகு வைத்து செலவு செய்கிற தொண்டனாக விஜித் சரவணன். அவரது அப்பாவித் தோற்றம் கதாபாத்திரத்துக்கு பொருந்திப் போகிறது. முடிந்தவரை இயல்பாக நடிக்க முயற்சித்து பாஸ்மார்க் வாங்குகிற அளவுக்கு பங்களிப்பு தந்திருக்கிறார்!
கதாநாயகியாக ஸ்வேதா டாரதி. கட்சிப்பணிக்கு அடிமையாகி, எந்த நேரமும் தலைவனின் முன்னேற்றம் பற்றிய சிந்தனையிலேயே மூழ்கியிருக்கிற ஒருவன் கணவனாக அமைந்தால் அந்த பெண் எப்படிப்பட்ட பரிதாபத்தைச் சுமக்க வேண்டியிருக்கும் என்பதை எடுத்துக் காட்டும் பாத்திரம். அதில் அளவாக நடித்துக் காட்டியிருக்கிறார், எந்த கோணத்தில் பார்த்தாலும் அழகாக இருக்கிற அந்த அரக்கோணத்துப் பெண்!
சுயநலத்துக்காக எதையும் செய்யத் துணியும் அரசியல்வாதியாக சிவசேனாதிபதி. வில்லத்தனத்தில் இன்னும் வீரியம் கூட்டியிருக்கலாம்!
அரசியல்வாதியின் பி.ஏ. வாக அப்புக்குட்டி, பலகட்சிப் பணியாளனாக ஏ.ஆர். தெனாலி, விஜய் கெளதம், சி.என்.பிரபாகரன்,வின்சென்ட்ராய், குமர வடிவேலு, மாயி சுந்தர், ரமேஷ் பாண்டியன், பரந்தாமன், சாய்லட்சுமி,நந்தகுமார், சக்திவேல் முருகன், நடிகர் நாசரின் தம்பி ஜவகர் என இன்னபிற கதாபாத்திரங்களில் வருபவர்கள் அவரவருக்கு கொடுத்த வேலையை இயன்றவரை குறையின்றிச் செய்திருக்கிறார்கள்!
‘எந்த தலைவன் சொந்த காசு செலவு பண்றான்?’நடப்பு அரசியல் சூழலை, அரசியல்வாதிகளை விமர்சிக்கும் வசனங்கள் நறுக் சுருக்!
ரோஷன் ஜோசப்பின் இசையில் டூயட் பாடல் இதம்.
சி.எம். மகேந்திராவின் பின்னணி இசை, மதன்குமாரின் ஒளிப்பதிவு நேர்த்தி.
உருவாக்கத்தில் சிலபல குறைகள் இருந்தாலும், சொல்ல வந்த கருத்தில் உண்மையிருப்பதால் கட்சிக்காரனுக்கு கை குலுக்கலாம்!

