தமிழ்ப் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பெஸ்ட்டான கெஸ்ட் ரோலில் எட்டிப் பார்க்கிற மலையாளப் படம்.
அது கேரளாவின் அடர்ந்த காட்டுப் பகுதி. அங்கு வசிக்கும் மக்களை அடிமையாக வைத்துக்கொண்டு, யானைகளைக் கொன்று தந்தங்களை கடத்தி, தனி சாம்ராஜ்யமாக வளர்ந்து நிற்கிறான் மாரி. ஒரு கட்டத்தில் அவனை மக்கள் புரட்சி மூலம் கொன்றழிக்கிறான் இளைஞன் ஆண்டனி.
ஆண்டனி யார், அவனுக்கும் மாரிக்கும் என்ன பகை, மாரியை அவன் எப்படி அழிக்கிறான் என்பதெல்லாம் காட்டாளனின் மீதிக்கதை. இடையில் தொழில் போட்டி, காட்டிக் கொடுத்தல், துரோகம், பழிவாங்கல் என அடுக்கடுக்கான அதிரடி சமாச்சாரங்களை கலந்து கட்டியிருக்கிறார் இயக்குநர் பால் ஜார்ஜ்.
யானைக் கடத்தல் மன்னனாக, கார்ப்பரேட் லெவல் அநியாய அக்கிரமங்களை லோக்கல் தாதா லெவலில் செய்கிறவராக சுனில். மனிதாபிமானத்தை மொத்தமாக விலக்கி வைத்த மனிதனாக வில்லத்தனத்தில் மிரள வைக்கிறார். பாடல் காட்சியில் ஜாலியாக ஆட்டமும் போடுகிறார்.
ஆண்டனியாக ஆண்டனி வர்கீஸ். ஆரம்பத்தில் தந்தம் கடத்தும் தொழிலுக்கு துணைபோவது, ஒரு கட்டத்தில் கடத்தல் சாம்ராஜ்யத்தை அழிக்க களமிறங்குவது என இவர் வில்லனா ஹீரோவா என்று குழப்பும்படியான கேரக்டரில் கெத்து காட்டியிருக்கிறார்.
துஷாராவுக்கு கிளைமாக்ஸின் நெருக்கத்தில் ஒன்றிரண்டு முறை அட்டனன்ஸ் போடுகிற வேலை. காட்சிகள் குறைவென்றாலும் மிலிட்டரி ஆஃபீஸர் போல் கம்பீரமான காஸ்ட்யூமில் போராளியாக, கதைநாயகனின் துணிச்சலான செயல்பாடுகளுக்கு பலமாக, நடிப்பில் ஆளுமை காட்டுகிறார்; ஆக்சனில் தெறிக்க விடுகிறார்.
கபீர் துகான் சிங் தன் தோற்றத்திலும் வில்லத்தனத்திலும் அசத்துகிறார்.
நிறைவுக் காட்சியில் என்ட்ரி கொடுக்கிற லோகேஷ் கனகராஜின் உடையும் நடிப்பும் செம ஸ்டைலிஷ். இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் கேமியோ ரோலில் கவனம் பெறுகிறார்.
பார்த் திவாரி, ஜெகதீஷ், சித்திக், ஹனன் ஷா, ஹிப்ஸ்டெர் என இன்னபிற கேரக்டர்களில் வருபவர்களுக்கும் முக்கியத்துவமிருக்கிறது; நடிப்பு கச்சிதமாக இருக்கிறது.
ஆக்சன் படங்களுக்கு இசையமைத்து பழகிப் போன ‘கே ஜி எஃப்’ ரவி பஸ்ரூர் வழக்கம்போல் அதிரடியான பங்களிப்பை பக்காவாக செய்து முடித்திருக்கிறார். இருளும் இருள் சார்ந்த பகுதிகளுமே கதையின் பெரும்பகுதியை ஆக்கிரமிக்க, அதற்கேற்ற ஒளியுணர்வு, கோணங்கள் என அமைத்து அசுரபலம் சேர்த்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ரெனாடைவ். யானை சார்ந்த காட்சிகளில் சிஜி தொழில்நுட்பக் குழுவில் ஈடுபாடான உழைப்பு தெரிகிறது.
ஹீரோ வில்லன் மோதல் என்கிற வழக்கமான கதை. அதை படுபயங்கரமான ஆக்சன் மசாலா திரைக்கதையில் போட்டுப் புரட்ட, திரை முழுக்க விறுவிறுப்புத் தீ பற்றியெறிகிறது. அந்த அதிர்வில் மிதந்தபின் படக்குழுவை பாராட்டத் தோன்றுகிறது!
-சு.கணேஷ்குமார்
