சாதாரண கிராமத்துப் பெண், சாதனை அரசியல்வாதியாக உயர்கிற கதை.
ஜெகதம்மா குறைவாகப் படித்தவர்; ஆனாலும் அதை அவர் குறைவாகவே நினைத்ததில்லை. 40 வயதை தொட்டிருக்கும் அவர் திருமணம் செய்து கொள்ளாதவர். வட்டிக்கு பணம் கொடுப்பது, பஞ்சாயத்துப் பணிகளை முடித்துக்கொடுப்பது என சுற்றிச் சுழல்பவர். ஒரு கட்டத்தில் அவர் பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் நிற்கும் சூழ்நிலை உருவாகிறது. சுயேச்சையாக களமிறங்கும் அவர், பெரிய கட்சிகளின் சார்பாக போட்டியிட்டவர்களை வீழ்த்தி வெற்றி பெறுகிறார்.
அவர் லெவலுக்கு தேர்தலில் நின்றது, வெற்றி பெற்றது என எல்லாமே சவால்தான் என்றாலும் அதைவிட வெறொரு சவாலை சந்திக்க வேண்டியிருக்கிறது. அதை அவர் எப்படி சமாளிக்கிறார், தன் பதவியை எப்படி பயன்படுத்துகிறார் என்பது மீதிக் கதை…
ஜெகதம்மாவாக ஊர்வசி. ஊரில் பஞ்சாயத்து வேலைகளை தனது குழுவிலுள்ள ஆட்களை வைத்து முடித்துக் கொடுப்பதாகட்டும், வட்டிக்கு கடன் கொடுக்கும் விஷயத்தில் கறாராக நடந்து கொள்வதாகட்டும் அவற்றில் தன் ஆளுமையை வெளிப்படுத்தும்போது அவருக்கே உண்டான காமெடி டச் ரசிக்க வைக்கிறது.
பெரிய கட்சிகளின் வேட்பாளர்கள், போட்டியிடும் கிராமம் பற்றியும் மக்களின் பிரச்சனைகள் பற்றியும் தெரிந்து வைத்திருப்பதைவிட தனக்கு அதிகம் தெரியும் என்பதை மக்கள் மத்தியிலும் தன்னை எதிர்ப்போர் மத்தியிலும் எடுத்துச் சொல்லி பேசும்போது காட்டும் கம்பீரம் அசத்துகிறது.
கழிவு மேலாண்மை என்ற பெயரில் நடக்கும் சட்டவிரோதச் செயல்களை முறியடிக்க எது நடந்தாலும் பார்த்துக்கலாம் என துணிச்சலாக களமிறங்கும்போது,
வீண் பழியைச் சுமக்கும்போது, சிறைக்குச் செல்லும்போது என கதையோட்டத்தில் பரபரப்பு கூட, ஊர்வசியின் நடிப்பிலுள்ள கெத்தும் கூடுகிறது.
ஜெகதம்மாவின் நிழல்போல், அவரது பலமாக கூடவே சுற்றிக் கொண்டிருக்கும் இளைஞனாக காலேஷ் ராமானந்த். தனது சுறுசுறுப்பான செயல்பாடுகளாலும் அதற்கேற்ற துடிப்பான நடிப்பாலும் கவர்கிறார்.
பாலச்சந்திரன் சுள்ளிக்காடு, வி கே பைஜு, ராஜேஷ் சர்மா, கலாபவன் பிரஜோத், நோபி மார்க்கோஸ், ஜெயன் சேர்த்தலா உள்ளிட்டோர் அரசியல்வாதிகளாகவும் இன்னபிற முக்கிய கதாபாத்திரங்களிலும் வருகிறார்கள். அனைவரின் நடிப்பிலும் நேர்த்தி தெரிகிறது.
கைலாஷ் மேனன் இசையில் பாடல்கள் இனிமையாக இருக்க, பின்னணி இசை அதிகப்படியான அதிரடி எதுவுமில்லாமல் காட்சிகளுக்கு போதுமானதாக கலந்திருக்கிறது. ஒளிப்பதிவாளர் அனில் நாயர் அவசியத்தைத் தாண்டி எதையுமே அள்ளிப் போட்டு நிரப்பவில்லை.
படத்தை இயக்கியிருக்கும் சிவபிரசாத் கதை நாயகி ஊர்வசியின் கணவர் என்பது குறிப்பிடத்தக்க தகவல். அவரது திரைக்கதை சாதாரண பெண் ஒருவர் அரசியல் பதவிக்கு வரும்போது எப்படியான பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது என்பதை எளிமையாக எடுத்துக் காட்டி, ‘துணிச்சலாக செயல்பட்டால் நினைத்ததை செய்து முடிக்கலாம்’ என்ற தன்னம்பிக்கையை படம் பார்ப்பவர்களின் மனதில் ஏற்றிவிடுகிறது.
-சு.கணேஷ்குமார்
