Home விமர்சனம் மாயபிம்பம் சினிமா விமர்சனம்

மாயபிம்பம் சினிமா விமர்சனம்

காதல் கதைகளை எல்லாவிதமாகவும் எடுத்து முடித்து விட்டார்கள்; இனி அதில் வித்தியாசமாக காண்பிப்பதற்கு வாய்ப்பில்லை. இப்படியொரு எண்ணம் சினிமா ரசிகர்கள் பலருக்கும் உண்டு. ‘அப்படியெல்லாம் இல்லை; காதல் கதைகள் இன்னும் இருக்கிறது; எடுத்துக்கொண்டே இருக்கலாம். சாம்பிளுக்கு இதோ ஒரு வித்தியாசமான காதல் கதை’ என்று சொல்கிறது மாயபிம்பம்.

ஹீரோவின் நண்பன் கொஞ்சம் வில்லங்கமானவன். பெண்களை ஒரு பார்வை பார்த்தாலே, ‘அவளை ஈஸியா கரெக்ட் பண்ணிடலாம்’, ‘அவளை மடக்க முடியாது’ என்று மிகச்சரியாக கணித்து சொல்லி விடுவான். சொல்வதோடு நிறுத்திக் கொள்ளாமல், மடக்க முடிந்த பெண்களை மடக்கி அனுபவிப்பதும் அவனது வழக்கம். அந்த வழக்கப்படியே, ஹீரோவுடன் பேசிப்பழகும் ஒரு பெண்ணைப் பார்க்கும்போது அவள் அவனை சபலத்துடன் அணுகுவதாக படுகிறது. கிடைச்சத விடாத; அனுபவிச்சுடு’ என்பதுபோல் நண்பனை உசுப்பேற்றி, ஒரு திட்டம் போட்டுக் கொடுத்து, அனுபவிக்க இடம் வரை ஏற்பாடு செய்து தருகிறான்.

ஹீரோ அவன் போட்டுக்கொடுத்த திட்டப்படி, தன்னுடன் நெருங்கிப் பழகிக் கொண்டிருக்கும் பெண்ணை அந்த இடத்துக்கு அழைத்துப் போகிறான். அதன்பிறகு என்னவெல்லாம் நடக்கிறது என்பது திரைக்கதையின் மீதி… ஏழெட்டு வருடங்கள் முன் தயாரான இந்த படத்தின் இயக்கம் கே ஜே சுரேந்தர்

ஹீரோவுக்கு நண்பர்களாக மூன்று பேர். கிட்டத்தட்ட அந்த மூன்று பேரும்கூட ஒரு விதத்தில் ஹீரோக்கள்தான். அப்படி நான்கு ஹீரோக்கள் களமாடினாலும் ஹீரோவுடன் பழகுகிற சுமதி என்ற கதாபாத்திரத்தைச் சுற்றியே கதை நகர்கிறது. சுமதியாக வருகிற ஜானகி விஸ்வநாதனின் இயல்பான புன்னகைகூட வெட்கச் சிரிப்பாக இருக்க, உணர்வுகளை வெளிப்படுத்துவதில் தனக்குள் இருக்கும் தேர்ந்த நடிகையை பிரதிபலிக்கிறார்.

நாயகன் ஆகாஷ் நாகராஜன் தன்னிடம் பழகும் பெண்ணின் உணர்வுகளை புரிந்துகொள்ளாதவராக, புரிந்தபின் அதிர்ச்சியடைபவராக எளிமையான உடல்மொழியில் தன் பாத்திரத்தை பலமாக்கியிருக்கிறார்.

ஹீரோவின் நண்பனாக, கேபிள் டிவி இணைப்பு கொடுத்துக் கொண்டே, சபலப் பெண்களின் உடம்போடு இணைவதை குஷியாக செய்பவராக ஹரி கிருஷ்ணன். படு ஜாலியான அந்த கேரக்டரை ரசித்துச் செய்திருக்கிறார்.

ராஜேஷ் பாலா, அருண்குமார் என மற்ற இரு நண்பர்களும், இன்னபிற கதாபாத்திரங்களை ஏற்றிருப்பவர்களும் கதையோட்டத்தில் தங்களுக்கு இருக்கும் முக்கியத்துவம் புரிந்து நடித்திருக்க, நந்தாவின் பின்னணி இசை அதிர்ச்சி தரும் காட்சிகளில் கவனிக்க வைக்கிறது. எட்வின்  சகாயின் ஒளிப்பதிவில் நேர்த்தி தெரிகிறது.

தனித்துவமான கதையில், புதுமுக நடிகர், நடிகைகளின் பங்களிப்பில், எளிமையான பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் கமர்ஷியல் சினிமாவுக்கான அனைத்து அம்சம்ங்களும் கலந்திருக்கின்றன.

இந்த படத்தைப் பார்த்து சிரித்து ரசிக்கலாம்; மனம் உருகலாம்; கண்கலங்கலாம். நிறைவாக, ‘மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம். எல்லோரையும் ஒரே மாதிரியாக எடை போடக்கூடாது; குறிப்பாக பெண்கள் விஷயத்தில் எடுத்தோம் கவிழ்த்தோம் என முடிவெடுப்பது முட்டாள்தனம்; அப்படி முடிவெடுத்தால் விபரீதங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும்’ என்கிற முடிவுக்கு வரலாம்.

-சு.கணேஷ்குமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்