காட்சிகள் அத்தனையும் அசத்தல் என்று சொல்லும்படி ஒரு வெப் சீரிஸ்.
அந்த ஊரில் குற்றச் சம்பவங்கள் ஏதும் நடக்காததால் போலீஸுக்கு வேலையில்லை; அதனால் ஸ்டேஷனை காலி செய்யும் வேலை நடக்கிறது. அந்த நேரமாகப் பார்த்து, ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் ஒரு மனித தலை கிடைக்கிறது. உடலைக் காணவில்லை.
தலை யாருடையது, தலைக்கான உடல் எங்கே என தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். பிறகு கொலை செய்தது யார், கொலை எதற்காக என்பதை அலசி ஆராய வேண்டும்.
அப்புறமென்ன, வேலை இல்லாமலிருந்த போலீஸ் பரபரப்பாகிறது. அவர்கள் என்னவெல்லாம் கண்டுபிடிக்கிறார்கள், எப்படியெல்லாம் கண்டுபிடிக்கிறார்கள் என்பதே 10 எபிசோடுகள் கொண்ட இந்த சீரிஸின் மீதிக்கதை…
முத்துவாக விஜய் சேதுபதி. அநியாயங்களைக் கண்டால் பொங்குகிற கதாபாத்திரம். பொங்குகிற விதம் ஒவ்வொன்றும் ரசிக்கும்படியிருக்கிறது. தாபா ஸ்டைல் ஹோட்டல் ஒன்றில் டிபன் சாப்பிட போய், அந்த ஹோட்டல் முதலாளியின் பணியாளரை நடத்தும் விதத்தைப் பார்த்து கொதிப்படைந்து எடுக்கிற நடவடிக்கை அதிரிபுதிரி அதகளம். கிலோ கணக்கிலான தங்கம் தொக்காக தன்னிடம் கிடைத்தும் அதை தூக்கிக்கொண்டு எஸ்கேப் ஆகாமல் உரிமையாளருக்கு திருப்பிக் கொடுக்கும் அளவுக்கு நல்லவராக இருந்து, பின்னர் வரிசையாக கொலை செய்கிற அளவுக்கு மாறும் விதம் விறுவிறுப்பு.
போலீஸ் ஆபீஸராக வடிவேல் முருகன். உயரமும் உடல்வாகும் கேரக்டருக்கு பொருந்திப்போக, தான் பணிபுரியும் ஸ்டேசன் பரபரப்பாக வேண்டும் என்பதற்காக செய்யும் தில்லுமுல்லு அடடே ரகம். வழக்கு விசாரணை, துப்பறிதல் என ஒரு பக்கம் டியூட்டியில் சுறுசுறுப்பு காட்டுபவர் இன்னொரு பக்கம் மனைவியுடன் ரொமான்ஸ், மனைவியிடம் ஓயாது வம்பிழுக்கும் அம்மாவை சமாளித்தல் என கவனம் ஈர்க்கிறார்.
வடிவேல் முருகனுக்கு ஜோடியாக வி ஜெ பார்வதி. பிக்பாஸில் மக்களது வெறுப்பைச் சம்பாதித்தவர், மதுரை மாவட்ட கிராமத்துப் பெண்ணாக உருமாறி நின்று, கேரக்டராக மாறி தந்திருக்கிற நேர்த்தியான நடிப்புக்காக பாராட்டுக்களைச் சம்பாதிப்பது உறுதி.
முத்து யார் என்பதை கண்டுபிடிக்கும் பொறுப்பைச் சுமக்கும் சப் இன்ஸ்பெக்டராக வேட்டை முத்துக்குமார். அலட்டிக்கொள்ளாத விசாரிப்புகள், புத்திசாலித்தனமான நகர்வுகள், ஆங்கிலத்தில் உரையாடல்கள் என தன் கடமையை கச்சிதமாக செய்திருக்கிறார்.
ரெக்கார்ட் டான்ஸர்களாக வருகிற ரிஷா, அயலி நட்சத்திரா இருவருக்கும் குறிப்பிட்டுச் சொல்லும்படியான கதாபாத்திரங்கள்; நடிப்பு கவனம் பெறும்.
மிரட்டலான கேரக்டரில் வந்து போகிறார் மிலிந்த் சோமன். சிங்கம்புலி கிடைக்கிற கேப்பில் லேசாக சிரிப்பூட்டுகிறார். சுதேவ் நாயர், கலைவாணி பாஸ்கர் என இன்னபிறரின் நடிப்பு நிறைவு.
பாரம்பரியத் தன்மை தொலைக்காத மதுரை சுற்று வட்டார கிராமங்கள் கதை நிகழ்விடங்களாகியிருக்க, அந்த நிலப்பரப்பின் வளத்தையும் வறட்சியையும் கலந்துகட்டி பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்கள் மது நீலகண்டன் – சண்முகசுந்தரம் கூட்டணி.
ராஜேஷ் முருகேசனின் பின்னணி இசை கிரைம் திரில்லர் கதையோட்டத்துக்கு உற்சாகம் தந்திருக்கிறது.
‘தல இங்கே, முண்டம் எங்கே?’ என்ற கேள்வியை முன்வைத்து தடதடக்கும் கதைக்கு, கொலைகளைச் செய்தவரை கண்டுபிடிக்கும் வழக்கமான கிரைம் ஸ்டோரி ரூட்டிலிருந்து விடுபட்டு, பல கொலைகள் செய்தவரை கொலை செய்தது யார் என தோண்டித் துருவும் திரைக்கதை எனர்ஜி ஏற்றியிருக்கிறது.
கிரைம் திரில்லர் கதைகளில் வித்தியாசத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு, மார்ச் 27; 2026-லிருந்து ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமாகும் முத்து என்கிற காட்டான் காரசார ஃபுல் மீல்ஸாய் திருப்தி தருவான்!
-சு.கணேஷ்குமார்


