சமூகத்தின் ஏற்றத் தாழ்வுகள், மனிதனுக்கான சம உரிமைகள் குறித்து உரக்கப்பேசும் அழகான கமர்ஷியல் திரைப்படம் ‘சீரன்.’
தன் வாழ்வில் சந்தித்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில், இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ள ஜேம்ஸ் கார்த்திக், இந்த படம் மூலம் கதாநாயகனா அறிமுகமாகிறார்.
படத்தை பிரபல இயக்குநர் ராஜேஷ் எம்மின் உதவியாளர் துரை கே முருகன் இயக்கியுள்ளார். படம் வரும் அக்டோபர் 4-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் பாடல்கள், டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
நிகழ்வில் இயக்குநர் துரை கே முருகன் பேசியபோது, ”இயக்குநர் ராஜேஷ் எம் சார், அவர் என்னைச் சேர்த்துக் கொண்டதால் தான் நான் இங்கு இருக்கிறேன். அவரிடம் நான் நிறையக் கற்றுக்கொண்டுள்ளேன். நான் கதைகள் வைத்துக்கொண்டு அலைந்த போது, ஜேம்ஸ் அவர் கஷ்டப்பட்ட கதையைச் சொன்னார். இனியா மேடம் மூன்று லுக்கில் அசத்தியிருக்கிறார். நடிப்பு ராட்சசி அவர். சோனியா மேம் நல்ல ரோல் செய்துள்ளார். படத்தில் கமிட்டானவுடன் நரேன் சாருக்கு தான் போன் செய்தேன். எனக்காக நடித்ததற்கு நன்றி. சென்ட்ராயன் என் நண்பன், சின்ன பாத்திரம் எனக்காக நடித்துள்ளார். தொழில் நுட்ப குழுவில் இசையமைப்பாளர் ஜுபின், சசிதரன், மற்றும் பாடலாசிரியர் கு கார்த்திக் எல்லோரும் நண்பர்கள். மிகச்சிறப்பாக பணியாற்றியுள்ளனர். ஒளிப்பதிவாளர் நண்பர் பாஸ்கர் ஆறுமுகம் மிகச்சிறந்த ஒத்துழைப்பு தந்துள்ளார். இந்த படத்தை 30 நாளில் முடிக்க அவர்கள்தான் காரணம். படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது” என்றார்.
படத்தை தயாரித்து நடித்துள்ள ஜேம்ஸ் கார்த்திக், ”இந்த படம், உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது. சினிமாவுக்காக சில விசயங்கள் செய்துள்ளோம். சமூகத்திற்கு மிக முக்கியமான விசயத்தைச் சொல்லியுள்ளோம். என்னுடன் இணைந்து இப்படத்திற்காக உழைத்த நடிகர்கள், கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. உங்கள் எல்லோருக்கும் பிடித்த படமாக இப்படம் இருக்கும்” என்றார்.
நடிகை சோனியா அகர்வால், ”முக்கியமான விசயத்தைச் சொல்லும்
படம் என்பதால் சின்ன ரோல் என்ற போதும், நடித்தேன்” என்றார்.
நடிகை இனியா, ”இது உண்மையில் நடந்த கதை. ஜேம்ஸ் சாருக்கு ஜோடியாக நடித்திருக்கிறேன். பூங்கோதை எனும் பாத்திரத்தில் 20 வயது பெண், இரண்டு குழந்தைகளின் அம்மா, அப்புறம் 56 வயதுப்பெண் என மூன்று வித்தியாசமான கெட்டப்பில் வருகிறேன். பாடல் அங்காளபரமேஸ்வரி கோவில், காஞ்சிபுரம், செய்யாறு, ஆரணி முதற்கொண்டு பல இடங்களிலும் செட் போட்டும் ஷூட் செய்தோம். சமூகத்திற்கு மிக முக்கியமான கருத்தைச் சொல்லியிருக்கிறோம். சோனியா அகர்வால் முக்கியமான ரோல் பண்ணியிருக்கிறார். படம் அனைவருக்கும் பிடிக்குமென நம்புகிறேன்” என்றார்.
இயக்குநர் ராஜேஷ் எம், நடிகர்கள் ஆடுகளம் நரேன், ஆர்யன், சென்ராயன், நடிகை கிரிஷா குரூப், பின்னணி இசையமைப்பாளர் ஜூபின், இசையமைப்பாளர் சசிதரன்,
பாடலாசிரியர் கு கார்த்திக் உள்ளிட்டோரும் நிகழ்வில் பேசினார்கள்.