Home Uncategorized மனிதன் தெய்வமாகலாம் சினிமா விமர்சனம்

மனிதன் தெய்வமாகலாம் சினிமா விமர்சனம்

அடிதடி, அரிவாள் வெட்டு, ரத்தத் தெறிப்பு என பயங்கர சம்பவங்களின் கலவையாகவும் சென்டிமென்ட் டச்சோடும் ‘மனிதன் தெய்வமாகலாம்.’

கதையின் நாயகன் ராகவனை ஆரம்பக் காட்சியில் சிறைக்குள் பார்க்க முடிகிறது. அப்போதே அவர் நல்லவராக இருக்க வேண்டும்; சந்தர்ப்ப சூழ்நிலையால் பெரிய குற்றம் எதையேனும் செய்திருக்க வேண்டும் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. அடுத்தடுத்த பரபரப்பான காட்சிகளின் மூலம் அவர் செய்த குற்றம் என்ன? காரணம் என்ன? என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது. இயக்கம் டெனிஸ் மஞ்சுநாத்

ராகவனாக இயக்குநர் செல்வராகவன். எளிமையான கிராமத்தானாக வருகிற அவர் தன்னை மாமா மாமா என அழைத்து பாசம் பொழியும் சிறுமி மீது கொள்ளைப் பிரியத்துடன் இருக்க வேண்டும். மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும். அவள் திடுதிப்பென 50000 கேட்டாலும் ஏன் எதற்கு என கேள்வி கேட்காமல் கொடுக்க வேண்டும். வில்லனையும் அவனது அராஜக அக்கிரமங்களுக்கு துணையாக இருக்கிறவர்களை கொன்று தீர்க்க வேண்டும். எல்லாவற்றையும் பகாசுரனில் வெளிப்படுத்திய அதே பாடி லாங்வேஜோடு குறையின்றிச் செய்திருக்கிறார்.

செல்வராகவனின் அன்பான மனைவியாக குஷி ரவி. கணவருடனான நெருக்கம், உறவினர்களுடனான பழக்க வழக்கம் உள்ளிட்ட உணர்வுகளை அலட்டலின்றி பிரதிபலித்திருக்கும் அவரது முடிவு பரிதாபத்தைத் தூண்டுகிறது. வில்லனிடம் எகிறிப் பேசும் காட்சியில் கம்பீரமும் காட்டியிருக்கிறார்.

பல படங்களில் பார்த்த அதே வில்லத்தனத்தை இந்த படத்திலும் பரிமாறியிருக்கிறார், குழந்தையிலிருந்து கிழவி வரை காமத்துடன் அணுகும் கேவலமான மனிதராக வருகிற மைம் கோபி.

எம் எல் ஏ’க்களை வில்லனாகவே காட்டும் வழக்கத்தை மாற்றி மனிதாபிமானமுள்ள, தனக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்த மக்களுக்கான நலத்திட்டங்களை நிறைவேற்றிக் கொடுப்பதில் தீவிரம் காட்டுகிறவராக காட்டியிருக்கிறார்கள். அந்த கேரக்டரில் ஒய் ஜி மகேந்திரனின் நடிப்பு நேர்த்தி.

செல்வராகவன் மீது அன்பை அன்லிமிடெடாக கொட்டிக் குவிக்கும் சிறுமியும் மனதில் நிறைகிறார்.

ஒரு காலத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த கெளசல்யா குறிப்பிட்டுச் சொல்லும்படியான கதாபாத்திரத்தில் அனுபவ நடிப்பைத் தந்து நகர்கிறார்.

ஏ கே பிரியனின் பின்னணி இசை கதையிலிருக்கிற பரபரப்புக்கு போதுமானதாக இருக்கிறது. கே ரவிவர்மாவின் ஒளிப்பதிவு காட்சிகள் தரம் உயர உதவியிருக்கிறது.

புதுமையேதுமில்லாத கதையை எடுத்துக்கொண்டு, அதற்கு ஓரளவு பரபரப்பான திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் டெனிஸ் மஞ்சுநாத். நடிகர் நடிகைகளின் கச்சிதமான நடிப்பால் மட்டுமே கதைக்களம் மெருகேறியிருக்கிறது.

மனிதன் தெய்வமாகலாம் – கதையை மாற்றி யோசித்திருக்கலாம்!

-சு.கணேஷ்குமார்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்