கொடைக்கானல் மலையின் கீழ்ப் பகுதியிலுள்ள நிலக்கோட்டை மு.வ. மாணிக்கம் அண்ட் கோ தங்க நகை மாளிகைதான் இந்த சலுகையை வழங்கிவருகிறது.எப்படி இந்த யோசனை வந்தது? என நகை மாளிகை உரிமையாளர் ஸ்ரீதரிடம் கேட்டோம்.
“காலத்தைக் கடந்தும் வாழ்கிற நாட்டுக்கு உழைத்த தலைவர்கள், அறிவியல் உபகரணங்களை கண்டுபிடித்த விஞ்ஞானிகள், அதேபோல் தங்கள் படைப்புகளின் மூலம் காலத்தை கடந்து நிற்பவர்கள் எழுத்தாளர்கள்.
அந்த வகையில் நாங்கள் அண்ணா, காமராஜர், பெரியார் போன்ற தலைவர்கள் பிறந்த நாளில் செய்கூலி சேதாரம் இல்லாமல் சலுகைகள் வழங்கினோம். அதன்பிறகு அறிவியல் அறிஞர்களின் பிறந்த நாளில் இப்படி வழங்கினோம். இப்போது அந்த வரிசையில் எழுத்தாளர்களைக் கொண்டாடுகிறோம். இந்த ஆண்டு முழுக்க எழுத்தாளர்கள் பிறந்த நாட்களில் நாங்கள் இந்தச் சலுகையை வழங்குகிறோம். அதற்கு முதன்முதலாக இலங்கை எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களின் பிறந்த நாளில் இந்த கொண்டாட்டத்தைத் தொடங்குகிறோம்” என்றார்.
“இலங்கைத் தமிழர்கள் தமிழையும் தமிழ்க் கலாச்சாரத்தையும் உலகம் முழுக்கக் கொண்டு சேர்த்தவர்கள். எனவே அவர்கள் மேல் எனக்கு மதிப்பு உண்டு. எனக்குக் கொஞ்சம் வாசிப்பு ஆர்வம் உண்டு. அந்த வகையில் அ. முத்துலிங்கம் அவர்களது படைப்பை நான் படித்த போது வியந்து போனேன். அவரது வாழ்க்கைப் பாதையும் அவர் படைத்த படைப்புகளும் எனக்கு மிகவும் ஆச்சரியம் அளித்தன.

ஜனவரியில் அ .முத்துலிங்கம் அவர்களின் பிறந்தநாளான ஜனவரி 19 ஐ முன்னிட்டு ஜனவரி 18 முதல் 20 வரை மூன்று நாட்கள் வழங்கும் இந்தச் சலுகை கொண்டாட்டத்தை இந்த ஆண்டு முழுதும் பல்வேறு எழுத்தாளர்களைக் கொண்டாடும் வகையில் நாங்கள் வடிவமைத்திருக்கிறோம். அதற்குரிய ஒரு காலண்டரையும் நாங்கள் வெளியிட்டுள்ளோம்.
மக்கள் தங்கள் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்திக் கொள்ளும் வகையில் எந்த நாளில் இந்தச் சலுகை என்பதை முன்னரே அறிவிக்கும் வகையில் இந்தக் காலண்டர்களை நாங்கள் விநியோகம் செய்து வருகிறோம்” என்றார்.
இது பற்றி கனடாவில் வசிக்கும் எழுத்தாளர் அ.முத்துலிங்கத்திடம் கேட்டபோது, “நான் திரைப்பட நடிகர் இல்லை. அரசியல்வாதி இல்லை. பெரிய தொழிலதிபர் இல்லை. பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தின் தலைவரில்லை. வேறு எந்த வகையிலும் அரசியல் செல்வாக்கு கொண்டவருமில்லை .நான் ஒரு தமிழ் எழுத்தாளர்.மிகவும் எளியவன்.என் பிறந்த நாளை முன்னிட்டு அவர்கள் இப்படிச் செய்யும் மகிழ்ச்சியை விட, ஒரு தமிழ் எழுத்தாளின் பிறந்தநாளை அவர்கள் இப்படிக் கொண்டாடுவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
குளப்ப நாயக்கர் இந்த நிலத்தில் கட்டிய கோட்டை என்பதால்தான் நிலக்கோட்டை என்று பெயர் வந்தது என்பது வரலாற்றுத் தகவல்.