இயக்குநர் வ. கெளதமன் ‘கனவே கலையாதே’, ‘மகிழ்ச்சி’ என மண் மணமிக்க திரைப்படங்களை தமிழுக்கு தந்த படைப்பாளி. சந்தன வீரப்பனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து ‘சந்தனக்காடு’ என்ற தொலைக்காட்சி தொடரையும் இயக்கியவர்.
அவர் இப்போது ‘மாவீரா’ என்று தலைப்பு வைக்கப்பட்ட படத்தை கதை, திரைக்கதை எழுதி இயக்குவதோடு கதாநாயகனாவும் நடிக்கிறார். அவருடன் சமுத்திரக்கனி, ராதாரவி, மன்சூரலிகான், சரண்யா பொன்வண்ணன், அஸ்வினி சந்திரசேகர், இளவரசு, ஆடுகளம் நரேன், கிங்ஸ்லி, ‘பாகுபலி’ பிரபாகர், தமிழ் கௌதமன், தீனா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ‘கவிப்பேரரசு’ வைரமுத்து உணர்வுமிக்க பாடல்களை எழுதுகிறார். ஒளிப்பதிவை வெற்றிவேல் மகேந்திரன் கையாள்கிறார். வசனங்களை பாலமுரளி வர்மன் தீட்ட, கலை இயக்கம் மோகனும், சண்டைப் பயிற்சியை ‘ஸ்டண்ட்’ சில்வாவும், நடனத்தை தினேஷும் படத்தொகுப்பை ராஜாமுகமதுவும், மக்கள் தொடர்பை நிகில் முருகனும் கவனிக்கிறார்கள்.
இந்த படத்தின் தொடக்க விழா கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள விஜயமாநகரம் முனீஸ்வரன் கோயிலில் நடந்தது. தமிழர்களின் வழிபாட்டோடும், வரலாற்றோடும், வாழ்வோடும் பின்னிப்பிணைந்த தமிழ்க்கடவுள் முருகன், வள்ளலார், வள்ளுவர் ஆகியோர் படங்களுக்கு வழிபாடு செய்து படப்பிடிப்பு தொடங்கியது. 
வி.கே புரொடக்சன் குழும நிர்வாக தயாரிப்பாளர்கள் கிருஷ்ணமூர்த்தி குறளமுதன், உமாதேவன், கிரியாடெக் பாஸ்கர் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.
முதல் நாள் படபிடிப்பில் மகிழ்ச்சி தயாரிப்பாளர் மணிவண்ணன் கேமராவை முடுக்க நடிகர்கள் சமுத்திரக்கனி, ஆடுகளம் நரேன், தமிழ் கௌதமன், மதுரா பாலன் ஆகியோர் நடித்தனர்.
படம் குறித்து இயக்குனர் வ.கௌதமனிடம் கேட்டபோது, ”இப்படம் தமிழர்களின் தொன்மைமிக்க வீரம், அறம், ஈரத்தை சொல்வதோடு படம் பார்க்கும் ஒவ்வொருவரையும் தங்களை திரைப்படத்தோடு தொடர்பு படுத்தி கொள்ள செய்யும் வகையில் அனைத்து தரப்பினரையும் கவரும் மண்ணதிரும் ஒரு மாபெரும் வெற்றிப்படைப்பாக இருக்கும்.
என் வாழ்நாள் லட்சியமே தமிழர்களின் வரலாற்றிலிருந்து பிரிக்க முடியாத சந்தனக்காடு, முந்திரிக்காடு, வன்னிக்காடு பகுதிகளில் வாழ்ந்த மாவீரர்களின் வரலாற்றை இவ்வுலகிற்கு ஒரு தரிசனமாக, சமரசமில்லா படைப்பாக்கி தருவது மட்டும் தான்.
சந்தனக்காட்டு மாவீரன் வீரப்பனை படைத்துவிட்டேன். இது முந்திரிக்காட்டில் வாழ்ந்த மாவீரர் ஒருவருடைய வாழ்க்கை வரலாறாகும். அடுத்து வன்னிக்காடு மட்டுமே மீதமுள்ளது. ‘அத்து மீறினால் யுத்தம்’ என்கிற இலக்கோடு மண்ணையும் மானத்தையும் காத்த ஒரு மாவீரனின் வீரவரலாறே ‘மாவீரா’ திரைப்படம்.
தமக்கு மேலானவர்கள் யாரும் இல்லை, கீழானவர்கள் யாரும் இல்லை என்ற சமத்துவத்தோடு எல்லா மக்களையும் சமமாக பாவித்த அதே சமயத்தில் ‘அத்துமீறி மீறினால் யுத்தம்’ என்கிற இலக்கோடு மண்ணையும் மானத்தையும் காத்த ஒரு மாவீரனின் வாழ்க்கை வரலாறு இது.
தமிழினத்தை அழிக்க நினைக்கும் கூட்டங்களுக்கு இப்படைப்பு பதில் மட்டுமல்ல மிகச்சரியான பதிலடியும் கொடுக்கும்” என்றார்.

