ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில், சந்தீப் கிஷன் – மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் படம் ‘மைக்கேல்.’ ரொமான்ஸ் ஆக்சன் சப்ஜெக்டில் உருவாகியுள்ள இந்த படம் வரும் பிப்ரவரி 3-ம் தேதி வெளியாகவுள்ளது.
பட வெளியீட்டுக்கு முந்தைய பத்திரிகையாளர் சந்திப்பு 29.1. 2023 அன்று மாலை சென்னையில் நடந்தது. நிகழ்வில் படத்தின் நாயகன் சந்தீப் கிஷன், நாயகிகள் திவ்யான்ஷா, தீப்சிகா, இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி, இசையமைப்பாளர் சாம் சி.எஸ். உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர்கள் ‘ஸ்டுடியோ கிரீன்’ ஞானவேல் ராஜா, சி.வி. குமார், எஸ்.ஆர். பிரபு, தனஞ்ஜெயன், நடிகை ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்டோரும் கலந்துகொண்டு படத்தின் டீஸர் மற்றும் டிரெய்லரை வெளியிட்டு படக்குழுவை வாழ்த்திப் பேசினார்கள்.
இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி, “இந்த படத்தில் மைக்கேல் கதாபாத்திரம் அனைத்து உணர்ச்சிகளையும், வார்த்தைகள் இல்லாமல் கொடுக்க வேண்டும், அதை சந்தீப் சிறப்பாகக் கொடுத்திருக்கிறார். ஆக்சன் காட்சிகள் ஆழமாகவும், ராவாகவும் இருப்பதற்கு கடின உழைப்பை சண்டை இயக்குநர் கொடுத்துள்ளார்.
விஜய் சேதுபதி என் மீது அதிகமான அன்பு வைத்துள்ள, நல்ல நண்பர். இந்த படத்தில் ஒரு கேமியோ கதபாத்திரத்தில் நடிக்க எல்லா மொழிகளுக்கும் தெரிந்த ஒரு நடிகர் தேவைப்பட்டார். நான் விஜய் சேதுபதி சாரிடம் கேட்ட போது உடனே ஒத்துக்கொண்டார். கௌதம் மேனன் சார் படங்களைப் பார்த்துத் தான் நான் வளர்ந்தேன். அவரிடம் ஒரு கம்பீரம் இருக்கிறது. அவர் கதையைக் கேட்டு எங்களை முழுமையாக நம்பினார். படம் நன்றாக வந்துள்ளது. உங்கள் அனைவருக்குப் படம் பிடிக்கும் என்று நம்புகிறோம்” என்றார்.
நடிகர் சந்தீப் கிஷன், “இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ரஞ்சித் நல்ல குணம் கொண்டவர், அவருடன் பயணித்ததில் மகிழ்ச்சி. கௌதம் மேனன் சாரிடம் நான் உதவி இயக்குநராக பணியாற்றி இருக்கிறேன். இப்போது அவருடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சி. விஜய் சேதுபதி நல்ல குணம் கொண்ட தங்கமான மனிதர், பிஸியான நேரத்தில் அவர் எங்களுக்காக அவருடைய தேதிகளை ஒதுக்கி, இந்த படத்தில் நடித்துக் கொடுத்தார். நட்புக்காக லோகேஷ் இந்த படத்திற்குள் வந்தார். பின்னர் அவர் படத்தைப் பார்த்தார், அவருக்குப் படம் பிடித்திருந்தது” என்றார்.
நடிகை ரெஜினா கசாண்ட்ரா, “நானும் சந்தீப்பும் மாநகரம் படத்தில் இணைந்து நடித்தோம். எனக்கும் அவருக்குமான நட்பு மிகவும் ஆழமானது. சந்தீப் தொடர்ந்து நல்ல கதைக்கரு கொண்ட படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் டிரெய்லர் பார்க்க மிக நன்றாக இருக்கிறது. படத்தைப் பார்க்க நான் ஆவலாய் இருக்கிறேன். படம் வெற்றியடைய எனது வாழ்த்துகள்” என்றார்.
தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு, “ரஞ்சித் ஜெயக்கொடி ஒவ்வொரு படத்திலும் புதுப்புது பாணியில் பயணிக்கிறார். அதிக நேரம் எடுத்து தனித்துவமான திரைப்படத்தை உருவாக்குகிறார். சந்தீப்பின் எனர்ஜிக்கு ஏற்ற படங்கள் இன்னும் வரவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அவர் இன்னும் பல வெற்றிப்படங்களைக் கொடுக்க வேண்டும்” என்றார்.
‘மைக்கேல்’ படம் கூடுதல் தகவல்கள்:- சந்தீப் கிஷன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நடிகை திவ்யான்ஷா கௌஷிக், கௌதம் வாசுதேவ் மேனன், வருண் சந்தோஷ், ஐயப்ப சர்மா, அனுசுயா பரத்வாஜ், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
கிரண் கௌஷிக் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி. எஸ். இசையமைத்திருக்கிறார். ராஜன் ராதா மணாளன் வசனம் எழுதியிருக்கும் இந்த படத்திற்கு, காந்தி கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். படத்தொகுப்புப் பணிகளை ஆர். சத்திய நாராயணன் கவனிக்க, சண்டைக் காட்சிகளை தினேஷ் காசி அமைத்திருக்கிறார்.
படம் வரும் பிப்ரவரி 3-ம் தேதி உலகமெங்கும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. சண்முகா சினிமாஸ் நிறுவனம் தமிழகமெங்கும் இப்படத்தை வெளியிடுகிறது.
படத்தை Karan C Productions LLP & Sree Venkateswara Cinemas LLP நிறுவனங்களின் சார்பில் தயாரிப்பாளர்கள் பரத் சௌத்ரி மற்றும் புஷ்கர் ராம் மோகன் ராவ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

