Home விமர்சனம் மாரீசன் சினிமா விமர்சனம்

மாரீசன் சினிமா விமர்சனம்

விறுவிறுப்பு மசாலா தடவிய கிரைம் திரில்லராக ‘மாரீசன்.’

திருடன் தயாளன் ஞாபக மறதி வியாதியால் பாதிக்கப்பட்டிருக்கும் வேலாயுதத்தை சந்திக்கிறான். அவரிடம் பல லட்ச ரூபாய் இருப்பதை தெரிந்துகொண்டு அதை அபகரிக்க திட்டமிட்டு, அவர் போக நினைக்கும் இடங்களுக்கெல்லாம் அவருக்கு துணையாக கூடவே போகிறான். அவனது நோக்கம் அவரிடமிருக்கும் பணத்தைக் களவாடுவதாக இருக்க, அவர் அவனை வைத்துகொண்டே அவனுக்கு தெரியாமல் சிலபல வில்லங்கமான வேலைகளைச் செய்கிறார். அந்த வேலைகள் என்ன? எதற்காக அதை செய்கிறார்? தயாளன் நினைத்தபடி பணத்தை அபகரிக்க முடிந்ததா?

இந்த கேள்விகளுக்கு சுறுசுறுப்பு தடவிய திரைக்கதை மூலம் பதில் சொல்லி முடிக்கிறார் இயக்குநர் சுதீஷ் சங்கர்.

வேலாயுதமாக வடிவேலு. நடை, உடை, பேச்சில் வயதின் முதுமையைக் காட்ட வேண்டும்; அதே முதுமையோடு கேடுகெட்ட பலசாலிகளை ஸ்கெட்ச் போட்டு கொலைகளும் செய்ய வேண்டும். அப்படியொரு தனித்துவமான கேரக்டர். அதை ஏற்றிருக்கும் அவரது அலட்டிக் கொள்ளாத குணச்சித்திர நடிப்புக்கு பாராட்டுக்களை கொட்டிக் குவிக்கலாம்.

துறுதுறு பார்வையோடு, பேச்சிலும் நடவடிக்கைகளிலும் நயவஞ்சகத்தைக் காட்டியிருக்கிறார் திருடனாக வருகிற பகத் ஃபாசில். சில காட்சிகளில் ‘ரொம்ப நடிக்கிறீங்க ப்ரோ’ என்று சொல்லும்படியும் பங்களித்திருக்கிறார்.

வடிவேலுவும் பகத்தும் ஒருவரையொருவர் ஏமாற்றிக் கொண்டு சுற்றித் திரியும் காட்சிகளில் சுவாரஸ்யங்களுக்குப் பஞ்சமில்லை.

காவல் துறை உயரதிகாரியாக கோவை சரளா. நடக்கும் கொலைகளின் பின்னணியை தோண்டித் துருவி கொலையாளியை நெருங்குவதில் போதிய பரபரப்பை தன் நடிப்பில் கொண்டு வந்திருக்கிறார்.

மாணவிகளுக்கு நேர்ந்த கொடுமைகளைக் கண்டு வேதனைப்படுவதும், அல்சைமரால் பாதிக்கப்பட்ட நிலையிலும் அந்த கொடுமைகளை மறக்காமல் இருப்பதுமாய் சித்தாராவின் நடிப்பு கவனம் பெறுகிறது.

விவேக் பிரசன்னாவின் வில்லத்தனம் கிளைமாக்ஸுக்கு கொந்தளிப்பூட்ட பயன்படுகிறது.

ரேணுகா, லிவிங்ஸ்டன், பி.எல்.தேனப்பன், கிருஷ்ணா, ஹரிதா என இன்னபிறரின் பங்களிப்பு நிறைவு.

கலைச்செல்வன் சிவாஜியின் ஒளிப்பதிவு தரம்.

பின்னணி இசையாலும் பாடல்களாலும் படத்தின் வேகத்தை அதிகரித்திருக்கிறார் யுவன் சங்கர் ராஜா. தன் தந்தை இளையராஜாவின் ‘நேத்து ஒருத்தர ஒருத்தர பாத்தோம்’ பாடலை சரியான தருணத்தில் இணைத்து ரசிகர்களின் உற்சாகத்தை தூண்டுகிறார்.

படத்தின் பின் பாதியிலிருக்கும் திருப்பங்கள் படத்தின் பலம். காட்சிகள் சிலவற்றை சுலபமாக யூகிக்க முடிவது பலவீனம்.

மாரீசன் _ காமவெறியர்களுக்கு எமன்!

-சு.கணேஷ்குமார்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்